புதிய டிராகன் பழங்களை உருவாக்கி சாதனை


புதிய டிராகன் பழங்களை உருவாக்கி சாதனை
x

உலகம் முழுவதும் இருந்து 88 வகையான பழ வகைகளை சேகரித்தவர், புதிய டிராகன் பழத்தை உருவாக்கியும் அசத்தி இருக்கிறார். 72 வயதாகும் அவரது பெயர் ஜோசப் காரக்காடு. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த சங்கனாச்சேரியை சேர்ந்த இவர், பழ வகை மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்.

இதற்காக பழ தோட்டம், நர்சரி பண்ணை நடத்தி வருபவர் விதவிதமான பழ வகைகளை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். இவரது மகன்கள் 3 பேரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் வீட்டுக்கு சென்றவர் அங்கு முதன் முதலாக இனிப்பு வகை டிராகன் பழத்தை சுவைத்திருக்கிறார். அந்த பழத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை பார்த்தவர், அது ஈக்வடார் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்திருக்கிறார். இணையதளத்தில் அந்த பழ வகை குறித்து தேடி இருக்கிறார்.

அந்த பழ வகையை வளர்ப்பதற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை, எந்த வகையான கால நிலையிலும் வளரும் என்பதை அறிந்தவர், ஈக்வடார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பழ தண்டை வரவழைத்திருக்கிறார். மேலும் சில வகை பழங்களின் தண்டுகளையும் சேகரித்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார். பின்னர் வீட்டின் பின் பகுதியில் நாற்றங்கால் அமைத்து அதில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பழ வகைகளின் தண்டுகளை நட்டு பராமரித்திருக்கிறார்.

தைவான், பிரேசில், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஈக்வடார் மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 88 வகையான டிராகன் பழ ரகங்களை வரவழைத்து பழ தோட்டத்தை உருவாக்கியும் இருக்கிறார். மேலும் இந்தியாவுக்கு அறிமுகம் இல்லாத பழ ரகங்களையும் தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

''எனக்கு விவசாய துறையில் முன் அனுபவம் கிடையாது. நான் ஐதராபாத்தில் தங்கி இருந்து பல ஆண்டுகளாக இயந்திர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். வயது அதிகரிக்க தொடங்கியதும் கேரளாவில் குடியேற முடிவு செய்தேன். சொந்த ஊர் திரும்பியதும் உதிரி பாகங்கள் விற்பனை தொழிலை தொடர்ந்தேன்.

ஆனால் எதிர்பார்த்தபடி தொழில் நடைபெறவில்லை. நஷ்டத்தை சந்தித்தேன். மின்சார வாகன துறையில் ஈடுபட முயற்சித்தேன். அதுவும் கைகூடவில்லை. எனது தேவைகளுக்காக பிள்ளைகளை சார்ந்து வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. ஏதாவதொரு தொழில் செய்வதற்கு முடிவு செய்தேன். டிராகன் பழம் எனக்கு பிடித்துப் போனதால் அதையே என் மூலதனமாக்கிவிட்டேன்'' என்கிறார்.

ஜோசப் தனது வீட்டுக்கு அருகில் உள்ள 65 சென்ட் நிலத்தில் நர்சரி பண்ணை அமைத்திருக்கிறார். அங்கு பல்வேறு வகையான டிராகன் பழங்களை விளைவித்து வருகிறார்.

''எந்த மண் வகையாக இருந்தாலும், எந்த வகையான காலநிலை நிலவினாலும் டிராகன் பழம் எளிதாக வளர்ந்துவிடும் என்பதை அறிந்ததும் அதனை வளர்க்கும் ஆவல் அதிகரித்தது. பாலைவன தாவரமாக வகைப்படுத்தப்படும் இதன் வளர்ச்சிக்கு குறைவான நீரே தேவைப்படும். அதன் தண்டுப் பகுதியை மண்ணில் ஊன்றி வைத்துவிட்டால் வேர்கள் விட்டு வளர தொடங்கிவிடும்'' என்பவர் சொந்தமாக புதிய பழ வகைகளையும் உருவாக்குகிறார்.

டிராகன் பழத்திலேயே இரண்டு புதிய ரகங்களை கண்டுபிடித்திருக்கிறார். அதற்கு 'ரெட் சில்லி', 'வொண்டர் பாய்' என்று பெயர் சூட்டியுள்ளார். இவரது பழ தோட்டத்திற்கு சென்றால் விதவிதமான, வித்தியாசமான பழ ரகங்களை பார்க்க முடியும். மேலும் புதிய பழ வகைகளை உருவாக்கி, அவற்றிற்கு ஒப்புதல் பெறும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.


Next Story