57 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்தது... மனம் குளிர்ந்த நரிக்குறவர் மக்கள்


57 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்தது... மனம் குளிர்ந்த நரிக்குறவர் மக்கள்
x

நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

ஊசி மணி, பாசி மணிகளை விற்று. குருவிகளையும், சில விலங்குகளையும் வேட்டையாடி நாடோடியாக வாழ்பவர்கள் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள். நாகரிக மாற்றம், நகர்மயமாதலால் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

வளரும் தலைமுறையின் கல்வியை கற்க தொடங்கியிருந்தாலும். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் மிக பின்தங்கிய நிலையிலே இருக்கிறார்கள். அந்த மக்களின் நீண்ட கால கோரிக்கை தங்களை எம்.பி.சி. பிரிவிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது.

1965 ஆம் ஆண்டே லோகூர் குழு இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தது. அதனை நிறைவேற்ற தமிழகத்தில் பின்னர் வந்த அரசுகளும் நடவடிக்கையை மேற்கொண்டாலும் கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இருந்தது.

கடந்த மார்ச் மாதம் ஜார்க்கண்டில் 10 பிரிவினர் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட போது, இதில் நரிக்குறவர்கள் சேர்க்கப்படாதது ஏன்? என திமுக எம்பி ராஜேஷ் குமார் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இனி பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர்- குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த செய்தி கேட்டு மகிழும் நரிக்குறவர், குருவிக்காரர் தங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என கொண்டாடி வருகிறார்கள்


Next Story