இயற்கை வளங்களை பாதுகாக்க உதவும் 5 வழிமுறைகள்
எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களை பாதுகாப்பாக விட்டுச் செல்ல கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழலும் மாசுபாடு அடைந்து கொண்டிருக்கிறது. நம் வாழ்வாதாரத்திற்கு இயற்கை வளங்கள் அவசியமானவை. அவற்றை பாதுகாக்க வேண்டியதும் முக்கியமானது. எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களை பாதுகாப்பாக விட்டுச் செல்ல கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
1. தண்ணீர் பயன்பாடு:
புவி வெப்பமயமாதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துவதற்கு அனைவரும் முன் வர வேண்டும். ஷவரில் குளிக்கும் நேரத்தை குறைப்பது, பல் துலக்கும்போது குழாயை அடைத்து வைப்பது, பாத்திரம் துலக்கும்போது சிக்கனமாக தண்ணீரை செலவழிப்பது, சலவை செய்யும்போது வாஷிங் மெஷினில் இருந்து வெளியாகும் நீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றுவது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஆண்டுக்கு ஓரிரு மாதங்கள்தான் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் மழை நீரை சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வாழலாம். நிலத்தடி நீர்மட்டமும் குறையாது.
2. மரம் வளர்ப்பு:
சூறாவளி மற்றும் மழை நீரால் ஏற்படும் மண் அரிப்புகளை தடுப்பதில் மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் மூலம் மண் அரிப்பை முழுமையாக தடுத்து விடலாம். சுற்றுச் சூழலை பராமரிப்பதற்கும் மரங்கள் அவசியமானவை. பறவைகள், பூச்சி இனங்கள் உள்ளிட்டவைகளுக்கு புகலிடமாக மரங்களும், செடிகளும்தான் விளங்குகின்றன. வன விலங்குகளின் வாழ்விடமாகவும், அவற்றின் பாதுகாப்பு இடமாகவும் காடுகள் விளங்குகின்றன. வீடுகள் மற்றும் தெருக்களில் மரங்களை நடுவதன் மூலம் நிழலையும், குளிர்ச்சியான சூழலையும் உணரலாம்.
3. எரிபொருள் மாற்றம்:
காலநிலை மாற்றம் எரிபொருளைப் பயன் படுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. சூரிய ஆற்றல் (சோலார்) மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரத்தை தயாரிப்பதன் மூலம் நிலக்கரி போன்ற இயற்கை எரிபொருளின் பயன்பாட்டை குறைக்க முடியும். இத்தகைய புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு எரிபொருள் தேவையை மீண்டும் நிரப்பிக்கொள்ளலாம். இயற்கை வளங்களை சுரண்டுவதும் குறையும்.
4. மறுபயன்பாட்டு பொருட்கள்:
பிளாஸ்டிக் பைகளின் அதிகப்படியான பயன்பாடு பூமியில் கழிவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளை தேர்ந்தெடுக்கலாம். மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் மீண்டும் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகிக்கலாம். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பை (நெகிழி) பயன்பாட்டை அறவே ஒழிப் பதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை பெருமளவில் கட்டுப்படுத்தி விடலாம். பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக பீங்கான், உலோகம், கண்ணாடி பொருட்களை தேர்வு செய்யலாம்.
5. ஆடைகள் தேர்வு:
ஆடைகளும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. பேஷன் மோகத்தில் விதவிதமான ஆடைகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவற்றை அணிந்ததும் பாதுகாப்பாக அலமாரிகளில் வைத்துவிட்டு மீண்டும் உடுத்தினால் பிரச்சினை இல்லை. ஓரிரு முறை மட்டுமே உடுத்திவிட்டு ஆடைகளை குப்பையில் வீசுவது சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். சில ஆடைகள் மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகலாம். ஆடைகள் உற்பத்திக்கும் இயற்கை வளங்களை அதிகம் செலவிட வேண்டியிருக்கும். பருத்தி துணியில் ஒரு டி-சர்ட் தயாரிப்பதற்கு சுமார் 2500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மறு சுழற்சி செய்து மீண்டும் பயன் படுத்தக்கூடிய ஆடைகளை உடுத்தும் மன நிலைக்கு மாற வேண்டும். அது நிலத்தில் ஆடை கழிவுகள் குவிவதை குறைக்க உதவும்.