44-வது செஸ் ஒலிம்பியாட்: காய்களை நகர்த்தி கலக்கப்போவது யார்?


44-வது செஸ் ஒலிம்பியாட்: காய்களை நகர்த்தி கலக்கப்போவது யார்?
x

உலகில் உள்ள ஒட்டுமொத்த செஸ் சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது, சென்னை செஸ் ஒலிம்பியாட்.

மனதை ஒருமுகப்படுத்தி, மூளைக்கு வேலை கொடுக்கும் அற்புதமான விளையாட்டு. 64 கட்டங்களில், 32 காய்களை நகர்த்துவதில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நாம் ஒரு காய் நகர்த்தும் முன் எதிராளியின் அடுத்தடுத்த நகர்வு திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை சிந்தனை குதிரையை தட்டிவிட்டு ஆழ யோசித்து செயல்படுவதை பொறுத்தே 'செக்' வைக்க முடியும்.

திறவுகள் பல வகை

செஸ் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகளும் உண்டு. செஸ் போர்டின் மைய பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள வீரருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதை கருத்தில் கொண்டுதான் திறவுகள் (ஓபனிங் மூவ்) ஆராயப்பட்டன. ராஜாவின் சிப்பாயை நகர்த்தும் போது எதிர் வீரரும் அதுபோல ராஜாவின் சிப்பாயை நகர்த்தி பின்னர் குதிரைகளை, பிஷப்புகளை நகர்த்தி பொதுவான திறவுகளை ஆடிகொண்டிருப்பது, வீரர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பல நாடுகளில் பல வீரர்கள் மாற்றுத் திறவுகளை முயற்சித்து வெற்றியும் கண்டனர். ராஜாவின் சிப்பாய் இரண்டு கட்டம் நகர்த்தினால் அதற்கு எதிர் வீரர் தனது ராஜாவின் சிப்பாயை ஒருகட்டம் நகர்த்திய பிரான்ஸ் நாட்டினர் இந்த திறவுக்கு 'பிரெஞ்ச்' திறவு என்றனர். வெள்ளை நிற காய் வீரர், தனது ராணியின் பக்கமுள்ள பிஷப்பின் சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி 'இங்கிலீஷ்' திறவு என்றனர். வெள்ளை நிற காய் வீரர் தனது ராணியின் சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்திய திறவு "இந்தியன்'' திறவு என அழைக்கப்பட்டது.

1594-ம் ஆண்டு 'கிலியோ பொலரியோ' என்ற வீரர் சிசிலியன் திறவை முதன் முதலில் ஆராய்ச்சி செய்தார். வெள்ளை நிற காய் வீரர் ராஜாவின் சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினால், கருப்பு காய் வீரர் தனது ராணியின் பக்கம் உள்ள பிஷப்பின் சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி பார்த்ததில், நல்லதொரு தற்காப்பு அமைந்ததோடு வலிமையான தாக்குதலும் உண்டானதை கண்டார். இதை அறிந்த அந்தகாலத்து முன்னிலை வீரர் 'டேனிகன் பிலிடார்' 1777-ம் ஆண்டு இந்த சிசிலியன் திறவு முறை ஆட்டத்தை ஆடி நிறைய வெற்றிகள் ருசித்தார். 'சிசிலி' என்பது இத்தாலிக்கு அருகில் உள்ள சிறிய தீவு ஆகும். பிறகு வந்த கிராண்ட்மாஸ்டர்கள் இந்த சிசிலியன் முறையில் சின்ன சின்ன மாற்றங்களை ஆராய்ந்து வெற்றிகளைக் குவித்தனர். அதனாலேயே இந்த 'சிசிலியன்' செல்லமாக 'கிராண்ட் மாஸ்டர் திறவு' என்று அழைக்கப்படுகிறது. நான் அறிந்த வரையில் தற்போது 80 விதமான திறவுகள் ஆடப்படுகின்றன.

செஸ் ஒலிம்பியாட் சுவாரஸ்யங்கள்

செஸ் விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம் பெற்றதில்லை. அதனால் தான் செஸ் விளையாட்டின் உச்சபட்ச போட்டியாக ஒலிம்பியாட் திகழ்கிறது. 1924 ஜூலை 20-ந்தேதி சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆரம்பித்த புதிதில் பாரீஸ் நகரில் நிறைய செஸ் போட்டிகள் நடைபெற்றன. இந்த தேதியில் தான் தற்போது சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

1924 மற்றும் 1925 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டிகள் சில பல காரணங்களால் வெற்றி பெறவில்லை. அவை அதிகாரபூர்வமற்ற போட்டிகளாக அறிவிக்கப்பட்டன.

அதிகாரபூர்வமான ஒலிம்பியாட், லண்டன் நகரில் 1927-ம் ஆண்டு ஜூலை 18 முதல் 30 வரை நடைபெற்றது. வெறும் பதினாறு நாடுகளிலிருந்து ஆண்கள் அணிகள் மட்டுமே பங்கேற்றன. போட்டியின் விதிமுறைகள் சரியாக வகுக்கப்படாததால் பலவிதமான வேடிக்கைகளும், வினோதங்களும் நடந்தன.

ஒரு வீரர், முதல் ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் ஆடினால் அடுத்த ஆட்டம் அதே போர்டில் கருப்பு காய்களுடன் ஆடவேண்டும் என்பது மரபு. ஆனால் யார் வேண்டுமானாலும் எந்த இடத்தில் எந்த நிற காய்களுடன் வேண்டுமானாலும் ஆடினர். ஹங்கேரி நாட்டின் ஹவாசி என்ற வீரர் எந்த போர்டில் வெள்ளை நிற காய்கள் உள்ளதோ அங்கு சென்று அமர்ந்து ஆடினார். இவ்வாறு எட்டு சுற்றுகள் ஆடினார். அவர் கடைசி வரை கருப்பு நிற காய்களுடன் ஆடவே இல்லை.

எல்லா நாடுகளும் ஒவ்வொரு நாடுகளுடன் ஆட ஒப்புக்கொண்ட பின், மொத்தம் பதினைந்து சுற்றுகள் முடிவில் ஹங்கேரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. லண்டன் மாநகரில் அப்போது புகழ் வாய்ந்த ஹாமில்டன் ரஸ்ஸல் என்ற வக்கீல் பரிசுகோப்பையை தனது சொந்த செலவில் வழங்கினார். போட்டியில் முதலிடம் பெறும் அணி அடுத்த ஒலிம்பியாட் வரை ஹாமில்டன் கோப்பையை அவர்களது நாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

இரண்டாம் ஒலிம்பியாட் 1928-ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் நடை பெற்றது. இதிலும் பலவித குளறுபடிகளும், குழப்பங்களும் நடந்தன. பிரிட்டிஷ் செஸ் சங்கத்தின் பிடியில் உலக செஸ் சம்மேளனம் சிக்கியிருந்ததால், இந்த போட்டியில் தரவரிசையில் உள்ள முன்னணி வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அமெச்சூர் வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இது பல நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பல நாடுகள் தங்களின் தலை சிறந்த வீரர்களை நிறுத்திவிட்டு, மூன்றாம் நிலை ஆட்டக்காரர்களையும், சிறுவர்களையும் அனுப்பி வைத்தன. அமெரிக்கா, தனது மூன்றாம் நிலை வீரர்கள் பெயரில் முதல் நிலை வீரர்களை அனுப்பும் என்ற பயத்தில் போட்டியிலிருந்து இங்கிலாந்து விலகியது. இந்த தடையை கடைசி நேரத்தில் சர்வதேச செஸ் சம்மேளனம் நீக்கியது. காலம் கடந்த முடிவினால் பல நாடுகள் தங்களின் சிறந்த வீரர்களை அனுப்ப முடியாமல் போனது. 17 நாடுகள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பியாட்டில் மீண்டும் ஹங்கேரி வாகை சூடியது. போக போக 2 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்புது மெருகேற்றலுடன் ஒலிம்பியாட் அரங்கேறியது.

போட்டி முறை

செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நனவாக கிட்டத்தட்ட 95 ஆண்டுகள் காத்திருந்து உள்ளோம். அதுவும் தமிழ்நாட்டில் நடப்பது நமக்கு எல்லாம் பெருமை. நாளை மறுதினம் தொடங்கும் இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். பூடான், சோமாலியா, பக்ரைன் போன்ற சிறிய நாடுகள் பங்கேற்கும் போது உலகத்தர வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சீனா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் உக்கிரமான சண்டை நீடித்தாலும், உக்ரைன் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.

மற்ற விளையாட்டுகளைப்போல கால்இறுதி, அரைஇறுதி இறுதிப்போட்டி என்பது இல்லை. எல்லா அணிகளும் 11 சுற்றுகள் வெவ்வேறு அணிகளுடன் ஆடவேண்டும். 'ஸ்விஸ்' முறைப்படி நடக்கும் இந்த போட்டியில் முதலில் தரவரிசைப்படி எல்லா அணிகளையும் வரிசைபடுத்துவார்கள். முதல் சுற்று ஆட்டங்களில் மட்டும் முதல் பாதி அணிகள் அடுத்த பாதி அணிகளுடன் மோதுவார்கள். உதாரணமாக பெண்கள் பிரிவின் 162 அணிகள் பாதியாக 1 முதல் 81 வரையும், 82 முதல் 162 வரையும் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முதல் சுற்றில் அணி 1, அணி 82 உடனும் , அணி 2, அணி 83 உடனும், அணி 81, அணி 162 உடனும் என்பது போல மோத வேண்டும். மொத்தம் 1,400 வீரர், வீராங்கனைகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஆடுவார்கள் என்பது 'ஸ்பெஷல்'.

வெற்றிக்கு ஒரு புள்ளி, 'டிரா'வுக்கு அரை புள்ளி வழங்கப்படும். அணிகள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் சம பலம் உள்ள அணிகள் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதுவார்கள்.

வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத சிறப்பு என்னவெனில் தோல்வி அடையும் எந்த அணியும் வெளியேறாது. தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் கூட, அந்த அணி மொத்தமுள்ள 11 சுற்றுகளிலும் ஆட வேண்டும். அனைத்து சுற்று முடிவில் புள்ளிகள் அதிகம் பெறும் அணி வெற்றி கோப்பையை வெல்லும். உலகச்சிறப்பு மிக்க இந்த போட்டியில் பங்கேற்க வேண்டுமானால் ஒவ்வொரு அணியும், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு நுழைவு கட்டணமாக ஏறக்குறைய 24,000 ரூபாய் செலுத்தவேண்டும்.

இந்த போட்டி நடத்த தேவையான கம்ப்யூட்டர்கள், உலகமெங்கும் ஒளிபரப்ப தேவையான கருவிகள் ஆகியவற்றை சர்வதேச செஸ் கூட்டமைப்பு அளிக்கிறது. முதல்முறையாக ஒலிம்பியாட்டுக்கு தீபம் ஏற்றப்பட்டு இந்தியா முழுவதும் வலம் வருவது இன்னொரு கூடுதல் சிறப்பு.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தரவரிசை பட்டியல்படி அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், இரண்டாம் இடத்தில் இந்தியாவுடன் சேர்த்து மிகக்குறைந்த இடைவெளியுடன் பத்து நாடுகள் உள்ளன.

ஒலிம்பியாட் வரலாற்றில் 26 முறை தங்கம் வென்ற ஒருங்கிணைந்த ரஷியாவும் இரண்டு முறை தங்கம் வென்ற சீனாவும் களத்தில் இல்லை என்பது அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. உலகின் நான்காவது, 5-ம் நிலை வீரர்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும்,உக்ரைன் வீரர்களும்,இந்திய வீரர்களும் சபாஷ் சரியான போட்டி என்று கூறும் அளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதே உண்மை.

சொந்த மண்ணில் ஆடுவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது கிரிக்கெட் போன்ற ஆட்டங்களுக்கு பொருந்தும். செஸ் ஆட்டத்தில் அது எடுபடாத ஒன்று. இரவு, பகல், மழை, குளிர் என எந்த சூழ்நிலையிலும் ஆடக்கூடிய விளையாட்டு செஸ் தான்.

இதுவரை சென்னையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் (ஆனந்த்-கார்ல்சென் போட்டி உள்பட) இந்தியர்களின் வெற்றி போற்றும் அளவுக்கு இல்லை. ஆக, கூட்டி கழித்து பார்க்கும் போது அமெரிக்காவின் வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் எனலாம்.

6 முறை தங்கம் வென்ற அமெரிக்கா, ஒரு முறை தங்கம் வென்றுள்ள இந்தியா, 3 முறை தங்கம் வென்றுள்ள ஹங்கேரி, உக்ரைன், அர்மேனியா போன்ற நாடுகள் இடையே தான் அதிக போட்டி இருக்கும். இந்தியா மிக நேர்த்தியாக ஆடினால்தான் வெற்றி கோப்பையை பெறமுடியும் என்பதே செஸ் நிபுணர்களின் கணிப்பு.

பெண்கள் பிரிவு

பெண்கள் அணிகளுக்கென பிரத்தியேகமாக முதல் ஒலிம்பியாட் 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெதர்லாந்தில் நடைபெற்றது.

21 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முறையில் ஆடின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன. அதிலும் லீக் சுற்று முறையிலேயே விளையாடி, புள்ளிகள் அடிப்படையில் வெற்றி அறிவிக்கப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே நடைபெற்ற ஒலிம்பியாட், தற்போது உள்ள ஒரே இடம், ஒரே தேதியில் நடக்கும் நடைமுறை 1976-ல் கொண்டுவரப்பட்டது.

நிறைய அணிகள் பங்கேற்க வந்ததால் லீக் சுற்று முறைக்கு பதிலாக தற்போதுள்ள 'ஸ்விஸ்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1927-ல் ஒலிம்பியாட் ஆரம்பித்தாலும், 1982-ல் இந்திய ஆண்கள் அணி சுவிட்சர்லாந்திலும், 1984-ல் இந்திய பெண்கள் அணி கிரீஸ் நாட்டிலும் முதன் முறையாக ஒலிம்பியாட்டில் கால்பதித்தன.

என்னதான் தரவரிசைப்பட்டியலில் இந்திய பெண்கள் அணி முதலிடத்தில் இருந்தாலும் உக்ரைன், ஜார்ஜியா, கஜகஸ்தான், போலந்து, பிரான்ஸ் ஆகியவை சிறிதளவு புள்ளிகள் வித்தியாசத்திலேயே வரிசை கட்டி நிற்கின்றன.

கோனேரு ஹம்பி தலைமையிலான இந்திய பெண்கள் அணியை பொறுத்தவரை கடுமையான போராட்டம் எதிரே காத்திருக்கிறது. சுதாரித்து ஆடினால் வெற்றியை வசப்படுத்தலாம்.

தாக்கத்தை ஏற்படுத்துமா குளிர்

இயற்கையாகவே குளிரிலேயே வளர்ந்தவர்களுக்கு இங்குள்ள செயற்கை குளிர் மிகவும் ஏற்றது. இந்திய சூழ்நிலையில் வளர்ந்த வீரர்கள் சிலருக்கு, செயற்கை குளிர் அரங்கம் அலர்ஜி உண்டாக்குவதை நான் கண்டிருக்கிறேன். அதற்கு ஏற்றார் போல் உடையிலும் உணவிலும் மாற்றங்கள் செய்து ஆடுவது சிறப்பை தரும். செஸ் ஆட்டத்தை பொறுத்தமட்டில் நாம் சிறப்பாக ஆடினால் மட்டும் ஜெயித்து விட முடியாது. எதிர் வீரரும் சிறப்பாக ஆடும்போது ஆட்டம் டிராவில் தான் முடியும். எதிர் வீரர் செய்யும் தவறுகளை சாதகம் ஆக்கும் வீரர்களே கணிசமாக வெற்றி பெறுகிறார்கள்.

செயற்கை குளிர்பதன அரங்கில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் மல்லுகட்டும் போது, சிறு தவறு செய்யும் அணியை வீழ்த்துவதற்கு எல்லா அணிகளும் முயற்சிக்கும். இதை உணர்ந்து தனக்காக ஆடுவதாக கருதாமல், நாட்டுக்காக ஆடுகிறோம் என்பதை மனதில் நிறுத்தி சாதுர்யமாக காய் நகர்த்தினால் வெற்றிக்கனி கிட்டும்.


Next Story