3-டி தொழில்நுட்பத்தில்... ஸ்மார்ட்போன்களை, ஸ்மார்ட் ஆக்கியவர்..!


3-டி தொழில்நுட்பத்தில்... ஸ்மார்ட்போன்களை, ஸ்மார்ட் ஆக்கியவர்..!
x

2டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை 3டி தொழில்நுட்பத்தில் கண்டுகளிக்கும் வகையில் பெனோ செபஸ்டின் என்ற ஆராய்ச்சியாளர் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பெனோ செபஸ்டின்.

செல்போன்களின் தாக்கம் அதிகரித்ததின் விளைவாக இன்று வசதி படைத்தவர்கள் முதல் சாதாரண கூலித்தொழிலாளி வரையில் அனைவரின் கரங்களிலும் தவழும் சாதனமாக செல்போன்கள் உருமாற்றம் பெற்றுள்ளன. அதிலும் இன்று ஆண்ட்ராய்டு செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் நிலை உருவாகியுள்ளது. அதிலும் குழந்தைகள் முதல் 60 வயது வரையிலானவர்கள் வரை ஆண்ட்ராய்டு செல்போன்களைத்தான் பொழுதுபோக்கு ஆதாரமாக பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் செல்போன் காட்சிகள், நிகழ்வுகளை, 2டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை 3டி தொழில்நுட்பத்தில் கண்டுகளிக்கும் வகையில் பெனோ செபஸ்டின் என்ற ஆராய்ச்சியாளர் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அதுகுறித்து அவரே விளக்குகிறார்.

* உங்களைப்பற்றி கூறுங்கள்?

எனது பெயர் பெனோ செபஸ்டின். அப்பா செபஸ்டின் கட்டிட காண்டிராக்டராக பணியாற்றியவர். அம்மா ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நான் பிறந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்சந்தை. 8-ம் வகுப்பு படிக்கும்போது நாகர்கோவிலுக்கு குடும்பத்தோடு வந்தோம். நான் நாகர்கோவிலில் உள்ள கார்மல் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்துள்ளேன்.

* அறிவியல் கண்டுபிடிப்புகளில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

படிக்கும்போது எனக்கு விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. கூடவே, நானே விமானம் தயாரித்து பறக்க வேண்டும் என்பதும், நடந்து சென்று கொண்டிருக்கும்போதே திடீரென மறைந்துவிடக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பதும் எனது ஆசையாக இருந்தது. இதனால் புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று பள்ளிப் பருவத்திலேயே தீராத வெறியாக இருந்தேன்.

இந்த ஆர்வத்தின் காரணமாக பள்ளிப் பருவத்திலேயே என்ஜின் பொருத்திய படகு செய்துள்ளேன். விமானம் செய்து பார்த்துள்ளேன். நூலகங்களுக்கு சென்று ராக்கெட் தொடர்பாகவும், அறிவியல் பூர்வமான விஷயங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் படிக்கத் தொடங்கினேன். அதுதான் என்னை ஒரு கண்டுபிடிப்பாளனாக, விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

10-ம் வகுப்பு படிக்கும்போது என்ஜின் இல்லாத பறக்கக்கூடிய கிளைடர் செய்துள்ளேன். அதை எனக்குத் தெரிந்த விமானப்படையில் பணியாற்றிய ஒரு அதிகாரியிடம் காண்பித்தேன். அவர் என்னைப் பாராட்டி, ஏரோ டைனமிக் டிசைனிங் அருமையாக செய்திருக்கிறாய் என்று ஆச்சரியப்பட்டார். அது எனக்கு உந்துதலாக இருந்தது. நான் பிற்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக ஆவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

* வேறு என்ன உருவாக்கினீர்கள்?

12-ம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்ததும், சில காலம் வெளியூரில் தங்கியிருந்தேன். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் நான் நாகர்கோவிலுக்கு வந்தேன். அதன்பிறகுதான் எனது சிறுவயது ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கி, அதன்மூலம் சாதிக்க எண்ணினேன்.

முதலில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு கார்பனை பிரித்து தரக்கூடிய மெஷினை கண்டுபிடித்தேன். இந்த மெஷின் ஒரு குழாயுடன் கூடிய டப்பா வடிவத்தில் இருக்கும். இதை மின்சார பிளக் பாயிண்டில் சொருகி சிகரெட் புகைக்கும்போது, சிகரெட்டில் உள்ள கார்பன் கரைந்துவிடும். மின்சாரத்தால் கார்பன் லட்சக்கணக்காக துகள்களாக பிரிந்து, கார்பானிக் ஆசிட்டாக மாறி கரைந்து விடும். அதுதான் இந்த மெஷினின் தனிச்சிறப்பு. வெண்மை நிற புகை மட்டும் தான் புகைப்பவர்களுக்கு கிடைக்கும். அதேநேரத்தில் சிகரெட் புகைத்ததற்கான எபெக்ட் இருக்கும். சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல், உதடுகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக இதை நான் கண்டு பிடித்தேன். இந்த மெஷினை நிறைய பேருக்கு செய்து கொடுத்தேன்.

* 3டி தொழில்நுட்பத்தில் களமிறங்கியது எப்போது?

செல்போன்தான் இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக இருக்கிறது. இந்த சாதனத்தை பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக 3டி கருவியை கண்டு பிடித்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. செல்போன்களை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், பொதுவாக சினிமாவில் மட்டுமே பயன்படுத்தப்படும் 3டி தொழில்நுட்பத்தை எனது கண்டுபிடிப்பு மூலமாக ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டேன்.

* உருவாக்கிய அனுபவத்தை கூறுங்கள்?

இதற்கான பார்முலா சிறுவயதிலேயே தெரியும். இதற்காக ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற வி.ஆர். பாக்சை வாங்கி அதில் மாற்றம் செய்து 3டி படமாக மாற்றிப் பார்க்கும் வகையிலான லென்சை பொருத்தி சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன். அது வெற்றிகரமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இதை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதற்கான ஆராய்ச்சியை தொடங்கினேன். இதற்காக 6 மாத காலம் இரவு, பகல் பார்க்காமல், தூக்கமின்றி ஆராய்ச்சி செய்தேன்.

அதில் 3டி ஸ்பிலிட்டர் டிவைஸ் எப்படி இருக்க வேண்டும்?, செல்போனை அதற்குள் வைப்பதற்கு தனி இடம் ஏற்படுத்துவது எப்படி?, சத்தம் வெளியில் செல்ல வேண்டும், உள்ளே லைட் ரிப்ளக்ட் ஆகாமல் இருக்க வேண்டும், படம் பார்க்கும்போது புள்ளி, புள்ளியாக தோன்றக்கூடாது, கண் எரிச்சல் ஏற்படக்கூடாது, தியேட்டரில் பார்ப்பதைவிட அழகாக இருக்க வேண்டும். 2டி படம் 3டி படமாக காணப்பட வேண்டும் என்று பலவாறு யோசித்து, யோசித்து இந்த 3டி ஸ்பிலிட்டர் கருவியை உருவாக்கினேன்.

* என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

நான் கண்டுபிடிக்கும் டிவைசை வாங்குபவர்களுக்கு அது காலம், காலமாக பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். இதற்காக பலவித டிசைன்களை செய்து பார்த்து ஏராளமான பணத்தையும், நேரத்தையும் செலவிட்டுள்ளேன்.

இதற்காக 3டி பிரிண்டிங் எந்திரம் ஒன்றை செக் குடியரசு நாட்டில் இருந்து வாங்கினேன். இதற்கு எனது தாயார் ரூ.1 லட்சம் கடன் வாங்கித்தந்தார். அந்த பணத்தில் வாங்கிய பிரிண்டர் எந்திரத்தை இயக்குவதற்கான முறைகள் தெரியாது. அந்த எந்திரத்தை வாங்கியபிறகுதான் இணையதளம் மூலமாக அதனை இயக்கும் முறைகளை அறிந்து கொண்டேன்.

பல மாதங்களாக நிறைய மாதிரிகளை செய்து, பல சோதனை ஓட்டங்களை நடத்தி, சில மாதங்களுக்கு முன்புதான் எனது கருவிக்கு வடிவம் கிடைத்தது. அதன்படி 3-டி ஸ்பிலிட்டர் சாதனத்தை உருவாக்கியிருக்கிறேன். 2 ஆண்டு கால கடின போராட்டத்திற்கு பிறகு இந்த சாதனத்திற்கு முழு வடிவம் கொடுத்தேன்.

கடந்த ஒரு மாதத்தில் ஐந்து 3டி சாதனங்களை செய்து முடித்துள்ளேன். ஒரு 3-டி சாதனம் செய்வதற்கான அடக்கச் செலவு மட்டும் ரூ.20 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் நான் யாருக்கும் இதை விற்பனை செய்யவில்லை. இதைக் கண்டுபிடித்த பிறகு உலகிலேயே யாரும் கண்டுபிடிக்காததை நாம் கண்டுபிடித்து சாதித்திருக்கிறோம் என்ற சந்தோஷம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. இந்த கருவியை எனது தாயாரிடம்தான் முதலில் காட்டினேன். அவர் பார்த்துவிட்டு மிகுந்த சந்தோஷப்பட்டதோடு, எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.

* இந்த கருவியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நான் கண்டுபிடித்துள்ள கருவிக்கு ஸ்பிலிட்டர் டிவைஸ் என்று பெயரிட்டுள்ளேன். 2-டி தொழில்நுட்பத்தில் இருந்து 3 டி (மைனஸ்) தொழில்நுட்பமாக பிரிக்கும் கருவி என்பதால் ஸ்பிலிட்டர் என்று பெயரிட்டுள்ளேன். தற்போது இந்த டிவைசுக்கான கூடுகளை சாதாரண பிளாஸ்டிக் மெட்டீரியலில் இருந்து தயாரித்துள்ளேன். விற்பனைக்கு கொண்டு வரும்போது கார்பன் பைபர் மெட்டீரியலில் தயாரித்து வழங்க திட்டமிட்டுள்ளேன். அதற்குள் 2 லென்சுகள் உள்ளன. ஒன்றுக்குள் ஒரு லென்சை வைத்து 3-டி காட்சியாக மாற்றும் வகையில் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளேன்.

டிவைசின் வெளிப்பகுதியில் காட்சிகளை சரியாக பார்ப்பதற்கான அட்ஜெஸ்மெண்ட் கருவிகளையும் பொருத்தியுள்ளேன். செல்போனை இந்த டிவைசுக்குள் வைத்து தலையில் மாட்டிக் கொண்டு சேரில் அமர்ந்த நிலையிலும் செல்போன் காட்சிகளை காணலாம். படுத்தபடியும் காட்சிகளை கண்டு களிக்கலாம்.

திரைப்படத்தை செல்போனில் சாதாரணமாக 2 மணி நேரம், 3 மணி நேரம் உட்கார்ந்திருந்து பார்க்க முடியாது. ஆனால் எனது 3-டி ஸ்பிலிட்டர் கருவி மூலமாக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்தபடியும், படுத்த நிலையிலும் பார்க்கலாம். ஒரு கண்ணுக்கு சோர்வு ஏற்பட்டால் அட்ஜெஸ்ட் செய்து மற்றொரு கண் மூலம் தொடர்ந்து காணும் முறையில் எனது கருவியை வடிவமைத்துள்ளேன்.

ஆனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு 2 கண்களாலும் காட்சியை கண்டு கொண்டிருப்பது போன்றுதான் தெரியும். காட்சிகளை துல்லியமாக, தெளிவாக பார்ப்பதற்கு வசதியாக நிறைய அட்ஜஸ் செய்வதற்கான வசதிகளும் இந்த கருவியில் உள்ளது. படுத்தபடி நீண்ட நேரம் பார்த்தாலும் திரையில் சினிமா பார்ப்பது போன்ற உணர்வுதான் இருக்கும். கண் எரிச்சல் இருக்காது. சோர்வு ஏற்படாது.

* இந்த கருவியை இதுவரை விற்பனைக்கு ஏன் கொண்டுவரவில்லை?

இதன் மூலம் 3-டி ஸ்பிலிட்டர் சாதனம் தயாரிக்கும் தொழிற்சாலையை என்னால் உருவாக்க முடியும். முதலில் நான் கண்டுபிடித்துள்ள சாதனத்துக்கு காப்புரிமை பெற வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை பிறர் திருடவும் வாய்ப்பு உள்ளது. எனது தொழில்நுட்பம் திருட்டுப்போகாத வகையில் காப்புரிமை பெறுவது முக்கியம்.

தொடர் ஆராய்ச்சிக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி வழங்கினால் நான் மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இதேபோல் சாதாரண 2 டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட சினிமா படங்களைக்கூட 3 டி தொழில்நுட்பத்தில் பார்க்கும் வகையிலான கருவியை என்னால் உருவாக்க முடியும்.

என்னைப் பொறுத்தமட்டில் எதையும் கண்டுபிடிக்க படிப்பு முக்கியமல்ல. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால் போதும். இயற்கை நிறைய தொழில்நுட்பங்களை தனக்குள் வைத்துள்ளது. அதில் தேடல் அதிகமானால் நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம்.


Next Story