பாராளுமன்ற தேர்தலும் பெண்களின் பங்களிப்பும்
1947 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அமைந்த தேர்தல்களில் மத்திய அமைச்சரவையில் பெண்களின் பங்கை விரிவாக பார்க்கலாம்
உலகின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா என்று சொல்லப்படுவது இந்திய பாராளுமன்ற தேர்தல். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தலானது, துணைக்கண்டம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் ஒரு திருவிழா போல நடைபெறும் என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகர அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள், வாக்காளர்களை கவர மேற்கொள்ளப்படும் இன்னபிற நிகழ்ச்சிகள் என இந்தியாவை ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு இந்த ஜனநாயக திருவிழா (பாராளுமன்ற தேர்தல்) கட்டிப்போடும். இந்தியா மட்டும் அல்லாது உலக நாடுகளும் இந்திய பாராளுமன்ற தேர்தலை உற்று நோக்குகின்றன.
பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தியாவின் 17-வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பல பிராந்திய கட்சிகளும் பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்களின் கைகளில், இதன் முடிவுகள் உள்ளன.
நேரு அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் மந்திரி
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மக்களவை தேர்தலில் பெண்களின் பங்களிப்பு ஓட்டு போடுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியாவின் உயர்பதவியான ஜனாதிபதி பதவி முதல் பிரதமர், மத்திய மந்திரிகள், மாநில முதல் அமைச்சர்கள் என ஜனநாயக கட்டமைப்பின் அனைத்து பதவிகளையும் பெண்கள் அலங்கரித்துள்ளனர். இந்திய வாக்காளர்கள் மாநில சட்டமன்றம், தேசிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நேரு காலம் துவங்கி தற்போது வரை கேபினட் பொறுப்பிலும் பெண்கள் பல முக்கிய இடங்களை அலங்கரித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947 - நேரு பிரதமராக தேர்வு ஆனார். நேரு தனது அமைச்சரவையில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் அளித்தார். இந்தியாவின் முதல் பெண் மந்திரியான ராஜ்குமாரி அமிரித் கவுர் (1947- 1957) 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததில் இவரது பங்கு அளப்பரியது.
இந்திய கேபினட்டில் பெண்களின் பங்கு
நேரு தலைமையிலான முதல் மத்திய மந்திரி சபையில், பெண்ணுக்கு பிரநிதித்துவம் அளிக்கப்பட்ட போதும், அடுத்தடுத்து வந்த சில அரசுகள் எந்த பெண்ணுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. 10 அமைச்சர்களை கொண்டு தனது கேபினட்டை அமைத்து இருந்த லால் பகதூர் சாஸ்திரி எந்த பெண்ணுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை. 5,6 மற்றும் 9 வது மக்களவையில் எந்த பெண் மந்திரிகளும் இடம் அளிக்கப்படவில்லை. எனினும் அப்போது பிரதமராக இருந்ததே இந்திரா காந்திதான்.
இருந்த போதிலும், 6-வது மற்றும் 9-வது கேபினட்டில், சரோஜினி மஹிஷி, நந்தினி சட்பதி, சுஷிலா ரோஹத்கி மற்றும் சரோஜ் காப்ரடே ஆகிய பெண் எம்.பி.க்கள் இணை மந்திரிகளாக பதவி வகித்தனர். ராஜீவ் காந்தி தனது அமைச்சரவையில், மோஷினா கித்வாய் என்ற பெண் உறுப்பினருக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் அளித்தார்.
இதற்கு பிறகு, விபி சிங் ஆட்சி காலத்தில் மேனகா காந்தி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 13-வது மக்களவையில் நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்தார். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு, மத்திய அமைச்சராக பெண் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியது. வாஜ்பாயின் முதல் ஆட்சி காலத்தில், சுஷ்மா சுவராஜ் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அதேபோல், 17-வது மற்றும் 18-வது மக்களவையில், வசுந்தராராஜே, உமாபாராதி ஆகியோர் இணை மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக, (2004 முதல் 2009) மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தான், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது மீரா குமார், அம்பிகா சோனி, பன்பகா லக்ஷ்மி ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.
மோடி அமைச்சரவையில் பெண்களின் பங்கு
2014 -ஆம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக மோடி பதவியேற்றார். இவர் தனது அமைச்சரவையில், 23 மந்திரிகளை சேர்த்துக்கொண்டார். இவர்கள் 23 பேரில் 6 பேர் பெண்கள் ஆவர். பல சவால்மிக்க துறைகளும் பெண்களுக்கு அளிக்கப்பட்டதை காண முடிந்தது. வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்து வருகிறார். குழந்தைகள் மற்றும் மகளிர் வளர்ச்சி துறை மந்திரியாக மேனகா காந்தி பதவி வகித்து வருகிறார். மத்திய ஜவுளி துறை மந்திரியாக ஸ்மிரிதி இராணி பதவி வகித்து வருகிறார். சிறுபான்மை நலத்துறை மந்திரியாக நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 சதவீதம் பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கப்பட்டது மிக முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. கடந்த கால நடைமுறைகளுக்கு மாற்றாக பெண்களுக்கு அதிகாரமிக்க பொறுப்புகள் வழங்கப்பட்டதையும் இந்த அமைச்சரவையில் காண முடிந்தது.
17-வது மக்களவை தேர்தல் முடிவை தீர்மானிக்க இருக்க பெண் தலைவர்கள்
சோனியா காந்தி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, இந்திய அரசியலில் சக்தி வாய்ந்த தலைவர்களில் முதன்மையாக விளங்குகிறார். இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான இவர், 2004-ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிக செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சோனியா காந்தி, லோக்சபா தேர்தல்களில் பெல்லாரி மற்றும் 1999-ல் உத்தரபிரதேசத்தில் அமேதி என்ற இடங்களில் போட்டியிடலானார், பெல்லாரியில் பாஜகவின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜைத், தோற்கடித்தார். 2004, 2009, 2014- ஆகிய ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அவர் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019- மக்களவை தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
எதிர்கட்சி தலைவர்
1999-ல் பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக ஏற்படுத்திய என்டிஏ (தேசிய ஜனநாயக முன்னணி) அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அரசமைத்த போது, அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில், அவர் என்டிஏ அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2003-ல் கொண்டுவந்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் ”இந்தியா மிளிர்கிறது” என்ற தேர்தல் பிரச்சாரத்தை கோஷத்தையும் வெற்றிகரமாக முறியடித்து , ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியதில் சோனியா காந்தியின் பங்கு இன்றியமையாதது. 17-வது மக்களவை தேர்தலில், சோனியா காந்தி ரேபேரலி தொகுதியில் போட்டியிடுகிறார். நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சமீப காலமாக சோனியா காந்தி ஒதுங்கியிருந்தாலும், அடுத்து அமையும் அரசில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்வராக பதவி வகித்து வரும் மம்தா பானர்ஜி, தேசிய அளவில் மிக முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். 42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் கணிசமான தொகுதிகளை அவரது கட்சி வெல்லும் பட்சத்தில், பிரதமர் பதவியை கைப்பற்றலாம் என்ற கனவிலும் இவர் இருக்கிறார்.
பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வருவதோடு, காங்கிரஸ் கட்சியோடு அனுசரணையாக நடந்து கொள்வதால், காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சியில் பங்கு பெறும் திட்டத்திலும் இருக்கிறார். மேற்கு வங்காளத்தை தாண்டி, தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தும் கூட்டணி ஆட்சி அமைக்கும் திட்டமும் இவரிடத்தில் உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மாயாவதி:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக பதவி வகித்து வரும் மாயாவதி, உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரபிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008-இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது. 1984-இல் கான்ஷிராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு தேசிய கட்சி ஆட்சி அமைக்க, உத்தரபிரதேசத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்று அரசியல் நோக்கர்கள் பரவலாக பேசுவது உண்டு. எனவே, உத்தரபிரதேசத்தை முழுமையாக வென்று தேசிய அளவில் தன்னை முன்னிறுத்த மயாவதி முனைப்பு காட்டி இருக்கிறார். எதிரெதிர் துருவமாக இருந்த சமாஜ்வாடி கட்சியோடு மாயாவதி இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளார். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லையென்றால், பிரதமர் பதவி தனக்கும் ஒரு கண் இருப்பதை மாயாவதி சூசகமாக அவ்வப்போது வெளிக்காட்ட தவறுவதில்லை. மக்களவை தேர்தலில் எந்த தொகுதியிலும் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த மாயாவதி, பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் நீடிப்பதாகவும் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, கடந்த தேர்தல்களில் ரேபரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு தனது அரசியல் பங்களிப்பை நிறுத்திக் கொண்டார்.
ஆனால், நடப்பு பாராளுமன்ற தேர்தலில், நேரடி அரசியலில் களம் இறக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தியின் நேரடி அரசியல் வருகை இந்த தேர்தலில், மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரசார் நம்புகின்றனர். உத்தரபிரதேசத்தின் கிழக்கு பிராந்திய செயலராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச காங்கிரசுக்கு முக்கிய துருப்பு சீட்டாக திகழ்வார் என்று தெரிகிறது.
2-வது முறையாக பெண் பிரதமர் ?
நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை அப்பதவியை அலங்கரித்தார். அவருக்கு பிறகு, பல்வேறு பெண் தலைவர்கள் அப்பதவியை அலங்கரிக்க கூடும் என்று பரவலாக ஊகிக்கப்பட்டாலும், அது எட்டாக்கனியாகவே அமைந்தது. வரும் 17-வது மக்களவையில், இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், பிராந்திய கட்சிகளே கோலோச்சும் என்பதால், பெண் தலைவர்கள் இந்த பதவிக்கு வர அப்போது வாய்ப்பு உள்ளது. மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்டோர் பிரதமர் பதவி மீது ஒரு கண் வைத்துள்ளனர். தேசிய அளவில் தலைவர்களை, மம்தா பானர்ஜி தேர்தலுக்கு முன்பே சந்தித்து சூசகமாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2019-ல் தேர்தலில் பெண்களின் பங்கு
மகளிர் இட ஒதுக்கீட்டை ஏறத்தாழ அனைத்து பிரதான கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத்தின் போது குறிப்பிட தவறுவதில்லை. பெண் வாக்காளர்களை கவரும் எண்ணத்தில் இது போன்ற வாக்குறுதிகளை தேர்தலுக்கு தேர்தல் அள்ளிவிடும் அரசியல்வாதிகள், மகளிர் இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைப்பு காட்டுவதில்லை. சொல்லப்போனால், தங்கள் கட்சியில் பெண்கள் போட்டியிட, ஆண்களுக்கு நிகராக வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. தேசியம் முதல் பிராந்திய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொன்னால் மிகையாகாது. இந்த முறையும் ஒரு சில கட்சிகளை தவிர, பெரும்பான்மையான கட்சிகள் பெண்களுக்கு போட்டியிட உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 2 பெண்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியிலும், காஞ்சிபுரம் (தனி தொகுதி) தொகுதியில் மரகதம் குமாரவேல்(அதிமுக) போட்டியிடுகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை கனிமொழி (தூத்துக்குடி), தமிழச்சி தங்க பாண்டியன்( தென்சென்னை) ஆகிய இரண்டு பெண்கள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி, மொத்தம் போட்டியிடும் 40 தொகுதிகளில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கி, பொதுமக்கள் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. புதிதாக இந்த தேர்தலில் களம் இறங்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், 3 பெண் வேட்பாளர்களை மக்களவை தேர்தலில் களம் இறக்கியுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
எது எப்படியோ? மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 2010 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக நிலுவையிலேயே இருந்து வருகிறது. எனவே, அடுத்து அமையும் அரசாவது மகளிர் இட ஒதுக்கீடு மசோதவை நிறைவேற்ற அக்கறை காட்ட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story