100-வது நாளை எட்டிய உக்ரைன் போர்: உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம்!
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த போருக்கு மத்தியில், உணவு பாதுகாப்பு நெருக்கடி இன்னும் மோசமடைந்துள்ளது.
வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த போருக்கு மத்தியில், உணவு பாதுகாப்பு நெருக்கடி இன்னும் மோசமடைந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள், பெரும்பாலும் கோதுமை, சோளம் மற்றும் அரிசி ஆகிய 3 உணவுகளையே தினசரி உணவாக எடுத்துக் கொள்கின்றனர். உலகில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மக்கள் தொகையால், இந்த மூன்று உணவுப் பொருட்களே உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவின் விவசாயத் துறை மதிப்பீடுகளின்படி, கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு நான்கு மில்லியன் டன்கள் குறையும், அதாவது 0.51 சதவீதம் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், மக்காச்சோள உற்பத்தியில் ஓரளவு சரிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரிசி உற்பத்தி 515 மில்லியன் டன்களை தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட உணவு உற்பத்தியில் சரிவு என்பது குறைவாகவே உள்ளது. ஆனால், உக்ரைன் - ரஷியா போரால் உணவு ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைவான சரிவு கூட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உலகளவில் சரளமாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான இரண்டு உணவுப் பொருட்களான சோளம் மற்றும் கோதுமையின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக உக்ரைன், ரஷியா ஆகிய இரண்டு நாடுகளும் விளங்கி வருகின்றன.
உக்ரைன், ரஷியா ஆகிய இரண்டு நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் கோதுமையை நம்பியே, 25 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. அந்த நாடுகள் தங்களின் மொத்த கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இறக்குமதி செய்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, 15 நாடுகள் தங்கள் 50 சதவீதம் கோதுமை தேவையில், உக்ரைன், ரஷியாவில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளன.
இப்போதைய சூழலில், இந்த நாடுகளில் பெரும்பாலானவை மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த நிலையில், உக்ரைன், ரஷியா போன்ற இன்னும் பல உணவு ஏற்றுமதி நாடுகள், உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பொதுமக்கள் சாதாரணமாக வாங்கி பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இது பெரும்பாலான மக்களை தீவிர உணவுப் பாதுகாப்பின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. உதாரணமாக, கோதுமையின் விலை ஜனவரி 2021 முதல் உலகளவில் 91 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக வங்கி தரவுகளின்படி, அதே காலகட்டத்தில் மக்காச்சோளம் 55 சதவீதம் விலை உயர்ந்தது.
உலகளவில் 45 நாடுகள், பெரும்பாலும் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகள், இந்த நெருக்கடியின் சில மோசமான விளைவுகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. உணவு ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள ஏமன், லெபனான், ஹைட்டி, நைஜீரியா, இலங்கை, எத்தியோப்பியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் பல்வேறு காரணிகளால், இன்னும் அதிக நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
இதே நிலை தொடர்ந்தால், ஒரு பயங்கரமான சூழ்நிலை ஏற்படும் என்பதை உலக உணவுத் திட்டம் கணித்துள்ளது. அதன்படி, 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து உணவுப் பொருட்களின் விலை இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. இப்போதைய கூடுதல் அழுத்தம், பெரும்பாலான நாடுகளை 2008 மற்றும் 2011ம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்ட உணவு நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.