பள்ளி பருவத்திலேயே பாதை மாறுகிறார்களா...?


பள்ளி பருவத்திலேயே பாதை மாறுகிறார்களா...?
x
தினத்தந்தி 15 May 2022 2:43 PM IST (Updated: 15 May 2022 2:43 PM IST)
t-max-icont-min-icon

சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் இது-

8-ம் வகுப்பு படிக்கும் சென்னை சிறுமி...

தன்னுடன் படிக்கும் சிறுவர்கள்4 பேரை தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியும் தேர்வுக்கு படித்தாள். அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து அந்த மாணவியை கட்டிப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், அனைத்து தரப்பு பெற்றோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

முதியவர்களால் சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர்களால் தொல்லை, ஆசிரியர்களால் தொல்லை, பக்கத்து வீட்டுக்காரரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... என்று அடுக்கிக்கொண்டே போனால், ஒரு சில இடங்களில் பெற்ற தந்தையாலும், சீராட்டி வளர்க்க வேண்டிய தாத்தாவாலும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் ஆளாகும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன. சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை அதிகம் அறிய முடிகிறது.

பெண் குழந்தையை யாருடைய பாதுகாப்பில் விட்டுச்ெசல்வது என்பது இப்போது பலருக்கும் புரியாத புதிராகிவிட்டது.

பணம் பணம் என்று தாய், தந்தை வேலைக்கு சென்றுவிட்டால், குழந்தைகள் போதிய கவனிப்பு இன்றி பாலிய பருவத்திலேயே பாதை மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

வாருங்கள், அதுசம்பந்தமான பலதரப்பட்ட தகவல்களை இங்கே காணலாம்.

தகவல் தொடர்பு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, கடந்த 10 ஆண்டுகளில் நம் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. அதற்காக அவற்றை வேண்டாம் என்று புறந்தள்ளுவது புத்திசாலித்தனமல்ல.

இப்போதைய புள்ளி விவரங்களின்படி, போனில் அதிக நேரம் பேசுவது, அறிமுகம் இல்லாத நபர்களுடன் வலைத்தளங்களில் உரையாடுவது, பொழுது போக்குவது, தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மட்டுமின்றி, அந்தரங்க விஷயங்களை பகிர்வது போன்றவைதான், பெரும்பாலான பாலியல் பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

இவற்றை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் இல்லை, குறிப்பாக பெண்கள், மாணவிகள், சிறுமிகள் அனைவரிடமும் ஏற்படவில்லை என்பதே உண்ைம.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்புக்குழு அதிகாரி பாண்டியராஜன் கூறியதாவது:-

தற்போது பொருளாதாரத்தை மையப்படுத்தித்தான் நமது வாழ்க்கை நகருகிறது. கிராம, நகரங்களில் வசிக்கும் நடுத்தர, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது கட்டாயம். எனவே குழந்தைகளை வளர்ப்பதில் முழுநேரத்தையும் செலவிட அவர்களால் முடிவதில்லை. இதனாலும் குழந்தைகள் தங்கள் விருப்பம்போல இருக்கவும், அடுத்தவர்களின் சீண்டல்களுக்கும் ஆளாகவும் நேரிடுகிறது.

இணையதளம், சமூகவலைதளங்களில் வரும் ஆபத்து நிறைந்த நிகழ்ச்சிகள், தவறான பாதைக்குள் தள்ளும் தகவல்கள், இளைய சமுதாயத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் அபாய தகவல்கள் எளிதாக மாணவிகளின் மனதுக்குள்ளும் ஊடுருவி பாழ்படுத்துகின்றன.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் பேசிப்பழகினால் அதை போலீசார் கண்டுபிடிப்பது கடினமானது. இதில் பழகிய 14 வயது சிறுமியும், 19 வயது இளைஞரும் சென்னைக்கு சென்றனர். அங்கு ஒருவரிடம் சிக்கிய சிறுமி, பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் வெளிவந்துள்ளது. இதற்கு யார் காரணம்?

சிறுமியின் அறியாமை என்பதா அல்லது சமூகவலைதள மோகம் என்பதா?

பல்வேறு பாலியல் சம்பவங்களில் சிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் அவர்களுடன் உரையாடும்போது, தங்களிடம் பழகியவர்களை அவர்கள் விட்டுக்கொடுப்பதே இல்லை. இதற்கு அவர்களின் வீட்டில் உள்ளவர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் மாணவிகளிடம் போதிய அன்பு காட்டுவதில்லை என்ற காரணத்தை அறிய முடிகிறது. எனவே பெற்றோர், தங்களின் பிள்ளைகளிடம் இணக்கமாக இருந்தால்தான், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும்.

பள்ளிகளில் முன்பைப்போல மாணவர்களை கண்டிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பாலியல் பிரச்சினைகளில் சிக்கினால், மீண்டும் அந்த பள்ளியில் அவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை. உடனடியாக நீக்கப்படுகின்றனர். தெரிந்ேதா, தெரியாமலோ இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிய அவர்களை அந்த பள்ளியே நிராகரித்தால் அவர்கள் எங்கே போவார்கள்?

இளம் சமுதாயத்தினருக்கு சரியான வழியை காட்ட வேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பம் என அனைத்தையும் மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது அவசியம். முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனைகளை பாடங்களில் சொல்லித்தருவார்கள். அதை கேட்கும் மாணவர்களின் மனம் சரியான திசையில் செல்லும். ஆனால் தற்போதைய பாடங்கள் அப்படி இல்லை.

அடிப்படையில் ஒருவன் நல்ஒழுக்க சிந்தனைகளை உடையவனாக இருந்தால்தான் அவனின் செயல்பாடுகளும் சிறப்பானவையாக அமையும். ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனைகளையும் இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தருவதற்கான கோட்பாடுகளை செயல்படுத்துவது அரசின் கடமை. இதை பள்ளிகளின் வாயிலாகத்தான் நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவறு நடந்த பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதைக்காட்டிலும், தவறு நடப்பதற்கு முன்பே அதை தடுக்கவும், தவறுக்கான வழியை அடைப்பதுவும்தான் சாலச்சிறந்தது. இது அனைத்துக்கும் பொருந்தக்கூடிய முதுமொழி.

புரிய வேண்டிய பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் புரிந்தால் சரி...!

Next Story