ஆதிச்சநல்லூர் தொல்லியல் பகுதிகள்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 24-வது கிலோ மீட்டரில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த பொருட்களின் வழியே தமிழர்களின் தொன்மைமிக்க வாழ்வியல் கூறுகளை அறிய முடிகிறது.
1876-ம் ஆண்டு முதற்கொண்டே அங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், பயன்படுத்திய கலைத்தன்மை மிளரும் அணிகள் ஆகியன இன்றைக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு கிடைத்திற்கரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. சுமார் 114 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் பற்றி பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் அலெக்சாண்டர் ரியா தனது குறிப்புகளில் தென்னிந்தியாவின் மிகப்பரந்த தொல்லியல் களம் இது என பதிவு செய்துள்ளார்.
ஜெர்மானிய நிபுணர் ஜாகோர் இங்கு நிகழ்த்திய ஆய்வுகளில் கிடைத்த சில பொருட்களை மேற்கொண்டு ஆய்வு செய்ய பெர்லினுக்கும், பிரெஞ்சு தொல்லியல் அறிஞர் லூயி லாம்பெர்க் இன்னும் சில பொருட்களை பாரீசுக்கும் எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டு வெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரேகண் டெடுத்து அவற்றை பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.
ஆதிச்ச நல்லூ ரில் வாழ்ந்த மக்கள் நாகரீகம் மிக்கவர்கள் என்ற கருத்தை இதற்கு முன்னர் இங்கு ஆய்வு செய்த டாக்டர் கால்டு வெல் வெளியிட்டார். ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கி கொண்டிருக்கிறது எனவும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அங்கே அழகிய மதில்சுவர்கள் இருந்திருக்கின்றன.
ஆதி மனிதன் திராவிட இனத்தை சார்ந்தவனா? என்கிற கேள்விக்கு என்றாவது ஒருநாள் சரித்திரபூர்வமான விடை கிடைக்கும் என்கிற ஆவலில் இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. ஒருவேளை அது நிரூபணமானால் உலக அதிசயமாகவும் ஒருநாள் ஆதிச்சநல்லூர் திகழக்கூடும்.
Related Tags :
Next Story