சுவாரசியங்கள் மிதக்கும் நைல் நதி..!


சுவாரசியங்கள் மிதக்கும் நைல் நதி..!
x
தினத்தந்தி 28 Jan 2022 5:42 PM IST (Updated: 28 Jan 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

வறண்ட ஆப்பிரிக்க கண்டத்தில் பாயும் நைல் நதி, தான் செல்லும் இடமெல்லாம் பசுமைப் பட்டாடையைப் போர்த்திச் செல்கிறது. உலகின் மிக நீண்ட நதியான நைல் நதி பற்றிய பல சுவாரசிய தகவல்கள்...

நைல் நதி, பூமத்திய ரேகைக்குத் தெற்கே தோன்றி, வடக்கு நோக்கி ஓடி, வட ஆப்பிரிக்காவில் பாய்ந்து, எகிப்தில் நுழைந்து, கடைசியாக மத்திய தரைக் கடலில் கலக்கிறது. இதன் சராசரி நீரோட்டம் நொடிக்கு சுமார் 31 லட்சம் லிட்டர்கள் ஆகும்.

தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து என 11 நாடுகள், நைல் நதியின் நீர் வளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, இதை ‘சர்வதேச ஆறு’ என்று அழைக்கிறார்கள்.

‘நைல்’ என்பது ‘நெய்லோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானதாகும். ‘நெய்லோஸ்’ என்றால் கிரேக்க மொழியில் ‘ஆறு’ என்று பொருள்.

நீல நைல், வெள்ளை நைல் என நைல் நதி, இரு கிளை நதிகளாகப் பிரிகிறது. நீல நைல், எத்தியோப்பியாவில் உள்ள ‘கிஷ் அபே’ என்ற இடத்தில் உள்ள டனா ஏரியில் உற்பத்தியாகிறது.

வெள்ளை நைல், மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரிப் பகுதியில் உற்பத்தியாகிறது. இரண்டு கிளை நதிகளும் சூடான் நாட்டுத் தலைநகரமான கார்ட்டூமில் சங்கமிக்கின்றன.

நைல் நதியிலும் அதன் கரைகளிலும் பலவகை உயிரினங்கள் வாழ்கின்றன. நைல் மானிட்டர் (பல்லி), தவளை, கீரி, ஆமை, நீர் யானை, பபூன் குரங்கு ஆகிய விலங்குகளும், 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் காணப்படுகின்றன. இதன் நதிக்கரைகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இவை ஆப்பிரிக்காவிலேயே பெரிய முதலைகள் ஆகும்.

நைல் நதியின் ஓரம் கெய்ரோ, லக்சர், கார்ட்டூம், கொண்டகோரோ, அஸ்வான், கர்னாக் என பல முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன.

நைல் மட்டும் இல்லையென்றால், எகிப்தியர்களுக்கு வரலாற்றில் இடமே கிடைத்திருக்காது. எனவே எகிப்தை ‘நைல் நதியின் பரிசு’ என்று அழைத்தனர். பாசனம், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றிற்கு நைல் நதியையே பெரிதளவில் நம்பியிருந்தனர்.

இந்த பசுமை நதியால், எகிப்தியர்கள் மண்ணில் போட்டது எல்லாம் பொன்னாய் விளைந்தது. கோதுமை, ப்ளாக்ஸ், பாப்பிரஸ் ஆகியவற்றை சாகுபடி செய்தனர். பிளாக்ஸிலிருந்து துணியும், பாப்பிரஸ் நாணலில் இருந்து பேப்பரும் தயாரித்தனர். நைல் நதியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அஸ்வான் அணை. நைலின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி ஆக்கபூர்வமாய் பயன்படுத்த 1970-ல் இந்த அணை கட்டப்பட்டது. ரோசீரெஸ் அணை, ஓவன் அருவி அணை, சென்னர் அணை ஆகியவை பிற முக்கிய அணைகளாகும்.

நைல் காலண்டர்

நைல் நதியை அடிப்படையாக வைத்தே பண்டைய எகிப்து நாட்காட்டி வடிவமைக்கப்பட்டது. முப்பது நாட்களைக் கொண்ட பன்னிரண்டு மாதங்கள், மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டன. ‘அகெட்’- வெள்ளக் காலம், ‘பெரெட்’ - பயிர் வளரும் காலம், ‘ஷெமு’ - அறுவடைக் காலம்.

Next Story