விராட் கோலியின் அறிவுரைப்படி... சொந்த உணவகம் தொடங்கும் வெயிட்டர்..!


விராட் கோலியின் அறிவுரைப்படி... சொந்த உணவகம் தொடங்கும் வெயிட்டர்..!
x
தினத்தந்தி 26 Dec 2021 11:59 AM (Updated: 26 Dec 2021 11:59 AM)
t-max-icont-min-icon

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்வப்போது வந்து என்னிடம் அன்பாகப் பேசுவார். ஒரு சகோதரர் போல எனக்கு பல அறிவுரைகளை கூறினார். தொழில்முனைவோராக சிந்திக்க அறிவுறுத்தினார்.

கேரளாவின் கன்னூரைச் சேர்ந்த இளைஞர் சுகேஷ். சிறுவயதில் இருந்தே ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் சமையல் கலையில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.



இவரது ஆர்வத்தைக் கண்டறிந்த பள்ளி ஆசிரியர்கள் இவரை ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்குமாறு அறிவுறுத்தினர். பெற்றோரும் சுகேஷின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்ட, 12-ம் வகுப்பு முடித்த கையோடு ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்தார். உடனே சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பயிற்சி வேலை கிடைத்தது.

6 மாதங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பெரும் கனவுகளோடு துபாய் சென்றார் சுகேஷ். அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் வெயிட்டராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அயராது பணியாற்றிய அவர் 2 வருடத்தில் கண்காணிப்பாளராக உயர்ந்தார். பின்னர் துணை மேலாளர், மேலாளர் என படிப்படியாக உயர்ந்த சுகேஷ், ஓட்டலின் தலைமை மேலாளராகவும் பணிபுரிய ஆரம்பித்தார்.

துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அவர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தார். பல்வேறு நகரங்களின் உணவுகளையும், பாரம்பரிய உணவுகளையும் தனது சமையலில் இணைத்தார். அவரது தேடல், வேலையில் பிரகாசமாக எதிரொலித்தது.

பல முன்னணி நட்சத்திர ஓட்டல்களில் இவரது ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. ஓட்டல்களின் சமையல்களில் சுகேஷின் கை பக்குவமும் சேர வேண்டும் என பல உரிமையாளர்கள் நினைத்தனர்.

இந்நிலையில்தான் இந்தியாவில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ‘பயோ பப்புள்’ கட்டுப்பாட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு சமைத்துக்கொடுக்கும் முக்கியமான பணி சுகேஷிடம் வந்தது.

58 நாட்கள் கிரிக்கெட் வீரர்களுடன் தங்கி அவர்களுக்குப் பிடித்தமான உணவை சமைத்துக்கொடுத்த சுகேஷ், கிரிக்கெட் வீரர்களின் பிரியமான நபர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

“கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு சமைத்தது மிகவும் விழிப்புணர்வுடனும், பொறுப்புடனும் செய்ய வேண்டிய பணியாக அமைந்தது. மொத்தம் 58 நாட்கள் கிரிக்கெட் வீரர்களுடன் தங்கி அவர்களுக்காக உணவு சமைத்தேன்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் இந்திய உணவுகளை விரும்பி சாப்பிட்டார். தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரரான ஏ.பி டி வில்லியர்ஸ் கடல் உணவுகளை மிகவும் ரசித்து சாப்பிடுவார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்வப்போது வந்து என்னிடம் அன்பாகப் பேசுவார். ஒரு சகோதரர் போல எனக்கு பல அறிவுரைகளை கூறினார். தொழில்முனைவோராக சிந்திக்க அறிவுறுத்தினார்.

என்னுடைய நிறை-குறைகளை எடுத்து கூறி, என்னுடைய திறமைகளை இன்னும் மேம்படுத்தச் சொன்னார். அவருடன் இருந்த நாட்கள் எனது வாழ்வின் பொன்னான நேரமாகும்” என்று ஐ.பி.எல். அனுபவங்களை பகிரும் சுகேஷ், விராட் கோலியின் அறிவுறுத்தல் படி, சிறு தொழில்முனைவோராக மாற முயற்சித்து வருகிறார்.

சொந்தமாக உணவகம் தொடங்கும் முயற்சியில் முழு முனைப்பு காட்டுகிறார். இவரது மனைவி நெஹாவும் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்த சமையல் வல்லுநர் என்பதால், சொந்த ஓட்டல் திட்டமிடல் படுஜோராக நடக்கிறது.

Next Story