கட்டுடலுக்கான உணவுகள்
கட்டுடலும், இறுக்கமான தசைகளை கொண்ட அங்கமும்தான் நிறைய இளைஞர்களின் விருப்பமாக இருக்கிறது. ‘சிக்ஸ் பேக்’ போல் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதற்கும் விரும்புகிறார்கள். அதற்காக நிறைய பேர் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
‘புரோட்டின் பவுடர்’ கலந்தும் பருகுவார்கள். ஆனால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதும் உடல் தசைகளை மெருகேற்றுவதற்கு உதவும். அத்தகைய உணவுப்பொருட்களின் விவரம்!
முட்டை: புரதச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும் மலிவான பொருளாக முட்டை கருதப்படுகிறது. இதில் புரதம் மட்டுமின்றி அமினோ அமில லியூசினும் நிறைந்துள்ளது. இது கடுமையான பயிற்சிக்கு பிறகு தசைகளுக்கு சக்தித்தர உதவும். மஞ்சள் கரு இதயத்திற்கு நல்லதல்ல என்று சிலர் கருதினாலும் முழு முட்டையும் ஒருங்கிணைந்த புரத மூலக்கூறுகளை கொண்டுள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உட்கொள்பவர்களை விட உடற்பயிற்சிக்கு பிறகு முழு முட்டையை சாப்பிடுபவர்களுக்கு தசை வளர்ச்சி 40 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஒரு முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் இருக்கிறது.
மீன்: மீன்களில் புரதம் நிரம்பியிருக்கும். அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. அதிலிருக்கும் ஈ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ ஆகியவை ரத்த ஓட்டத்தில் இன்சுலின் அள வைக் குறைக்க உதவுகின்றன. 200 கிராம் மீனில் 20 கிராம் புரதம் உள்ளடங்கி இருக்கிறது.
சோயா பொருட்கள்: சோயா பீன்ஸ் மற்றும் சோயா பொருட்களில் புரத சத்து நிறைந்திருப்பதால் அவை தசை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சைவ உணவை சாப்பிடுபவர்களுக்கு சோயா சிறந்த தேர்வாக அமைந்திருக்கிறது. சோயா பீன்ஸ் உடலுக்கு புரதம் வழங்குவதோடு இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்களை தவிர்ப்பது நல்லது. 100 கிராம் சோயாபீன்ஸ் 36 கிராம் புரதத்தை அளிக்கிறது.
பருப்பு: சமையலுக்கு பயன்படுத்தப்படும் பருப்பு, பயறு வகைகள் புரதசத்துக்களை கொண்டவை. அவற்றில் கொழுப்பும் குறைவாகவே இருக்கும். பிற புரதச்சத்து உணவுகளை ஒப்பிடும்போது இவை மலிவானவை. நீண்ட காலத்திற்கு சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். ஒரு கப் சமைத்த பயறு 18 கிராம் புரதச்சத்தை கொண்டு இருக்கிறது.
கோழி இறைச்சி: கோழி இறைச்சியின் மார்பக பகுதி மனிதர்களின் தசையை வளர்க்க உதவும் தன்மை கொண்டது. புரதச்சத்தும் நிறைந்தது. செலினியமும் அதிகமாக இருக்கும். உடலில் உள்ள செல்களை சேதமடையாமல் பாதுகாக்கவும் செய்யும். 100 கிராம் கோழி மார்பக பகுதியில் 32 கிராம் புரதம் இருக்கிறது.
சீமைத்தினை: இதில் அமினோ அமிலங்கள், புரதங்கள், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் ஈ, பொட்டாசியம், இரும்பு ஆகிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனை சாலட்டுகளாகவோ, சாதமாகவோ தயார் செய்து சாப்பிடலாம். 100 கிராம் சீமைத்தினையில் ஐந்து கிராம் புரதம் உள்ளது.
Related Tags :
Next Story