பள்ளிக் குழந்தைகளுக்கு தயாராகும் `மறுசுழற்சி காலணிகள்'
எதுவுமே வீண் என்று இல்லை. தேவையற்றது என்று வீசி எறியும் பொருள், வேறு ஒரு சூழலில் மிக முக்கிய தேவையாக இருக்கும்.
நாம் பயன்படுத்தும் ஷூக்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்று நிரூபித்துள்ளனர் மும்பையைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஸ்ரியான்ஸ் பண்டாரியும், அவரது மாரத்தான் நண்பர் ரமேஷ் தாமியும். இருவரும் சேர்ந்து க்ரீன்ஷோல் பவுண்டேஷனைத் தொடங்கினர். தொடக்கவிழாவில், தாங்கள் பயன்படுத்திய பழைய ஷூக்களை பவுண்டேஷனுக்குக் கொடுத்தனர். ஏழைக் குழந்தைகளை மையமாக வைத்தே இவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளன.
இது குறித்து ஸ்ரியான் பண்டாரி, “பழைய ஷூக்களை மறுசுழற்சி செய்து, தேவைப்படும் பள்ளிக் குழந்தைகளுக்குச் செருப்பாகத் தைத்துக் கொடுக்கிறோம். லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பசி, பட்டினியோடு, உடையின்றி பள்ளிக்குச் செல்வதை இன்றும் நம் நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்குச் செருப்பு என்பது எட்டாக் கனவாகவே உள்ளது. சில பள்ளிகள் வீட்டிலிருந்து பல கி.மீ. தொலைவில் இருக்கும். காடு வழியாகவும், மலை வழியாகவும் செல்லும் குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள். வழியில் முள் தைப்பதும், கல்லடி படுவதும் அன்றாட நிகழ்வுகளாகியிருக்கின்றன.
அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்கள் முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், வெறும் கால்களில் நடக்கும்போது நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் வெறும் காலில் நடந்தால், எளிதில் நோய்த் தொற்று ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டே, அந்தக் குழந்தைகளுக்குச் செருப்பு வழங்குவதற்காகவே பவுண்டேஷனைத் தொடங்கினோம். ஷூக்களை மறுசுழற்சி செய்து செருப்புகளாக மாற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்துள்ளோம். செருப்பு இல்லாத மாணவர்களின் விவரத்தை எங்களுக்குப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் வழங்கும். அதன் அடிப்படையில் நாங்கள் செருப்புகளை விநியோகம் செய்கிறோம்.
மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் செருப்புகளை இதுவரை தேவைப்படும் மாணவர்களுக்கு விநியோகித்துள்ளோம். இன்னும் லட்சக்கணக்கான செருப்புகளை விரைவில் வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களது இணையத்தின் மூலம் இது தொடர்பாக பழைய ஷூக்களை பொதுமக்களிடமிருந்து பெறுகிறோம். கார்பரேட் நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடை பெற்று வருகிறோம்” என்றார்.
2023-ம் ஆண்டுக்குள் செருப்பு இல்லாத குழந்தைகள் எனும் நிலையை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்கிறார்கள் பண்டாரியும் தாமியும்.
Related Tags :
Next Story