மைக் முக கவசம்


மைக் முக கவசம்
x
தினத்தந்தி 24 May 2021 6:11 PM IST (Updated: 24 May 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் முக கவசம் அணிந்து கொண்டு மற்றொரு நபருடன் பேசுவதில் சிரமங்கள் இருக்கின்றன.

பேசும் வார்த்தைகள் முக கவச துவாரங்களின் வழியே வெளிப்படும்போது குரலின் தன்மையில் மாற்றம் ஏற்படக்கூடும். முக கவசம் அணிந்திருப்பவர் என்ன பேசினார் என்பதை யூகிப்பதில் குழப்பம் உருவாகவும் கூடும் என்பதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இருவரும் முக கவசம் அணிந்திருக்கும் பட்சத்தில் ஒருவர் பேச்சை மற்றவர் கேட்பதற்கு கடினமாக இருக்கும். அதனால் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது முக கவசத்தை இறக்கிவிட்டு பேசும் வழக்கத்தை பலரும் கடைப்பிடிக்கிறார்கள். இது முக கவசம் அணிவதன் நோக்கத்தையே வீணாக்கிவிடும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் ‘முக கவச மைக்’ உருவாக்கி இருக்கிறார், கெவின் ஜேக்கப். 19 வயதாகும் இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். அங்குள்ள அரசு கல்லூரியில் கணினி அறிவியலில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் ஜோதி மேரி ஜோஸ் - சென்ஜோய் இருவரும் மருத்துவர்கள். முக கவசம் அணிந்து கொண்டு நோயாளிகளிடம் பேசும்போது எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்தவர், பெற்றோர் எளிதாக தகவல் தொடர்பு கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

‘‘எனது பெற்றோர் பெரு நகர மருத்துவமனையில் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு நாளும் பணி முடிந்து தொண்டை புண் பாதிப்போடு வீட்டுக்கு வருவார்கள். பணியின்போது என்95 முக கவசம் அணிந்திருப்பதோடு முகத்தை முழு வதும் மூடும் விதமாக ‘பேஸ் ஷீல்டு’ பொருத்தி இருப்பார்கள். அதனால் நோயாளி களிடம் பேசும்போது சத்தமாக குரல் எழுப்ப வேண்டியிருக்கும். இந்த பிரச் சினைக்கு எளிமையாக தீர்வு காண்பதற்கு முயற்சித்தேன்’’ என்பவர் முக கவசத்தில் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட முன் மாதிரி வடிவம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அது பேசும்போது குரல்வளையை கஷ்டப்படுத்தாமல் மற்றவர்களுடன் எளிமையாக தொடர்பு கொள்ள வழிவகை செய்திருக்கிறது. இந்த முக கவசத்தை உருவாக்கிய விதம் பற்றி விவரிக்கிறார்.

‘‘பேசும்போது குரலின் ஒலியை அதிகரிக்கக்கூடிய ஸ்மார்ட் முக கவசம் அறிமுகமாகி இருக்கும் செய்தியை படித்தேன். இருப்பினும் அந்த முக கவசம் விலை உயர்ந்ததாக இருந்தது. அதை வாங்க முடியவில்லை. எனது பெற்றோர் எளிமையாக கையாளும்படி முக கவசம் அமைந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கேற்ப மினியேச்சர் மைக், ஸ்பீக்கர் பொருத்த முடிவு செய்தேன். அவைகளை ஆன்லைனில் தேடி பார்த்தபோது நான் எதிர்பார்த்ததை விட அளவில் பெரியதாக இருந்தன. அவற்றை முக கவசத்தில் பொருத்துவது பொருத்தமில்லாததாகவே தோன்றியது. அவை அதிக எடையும், அதிக விலையும் கொண் டவையாகவும் இருந்தன’’ என்பவர் 8-ம் வகுப்பு படித்தபோது 3டி பிரிண்டர் உருவாக்க பயன்படுத்திய பார்முலாவை பின்பற்றி முக கவசத்தை வடிவமைத்துவிட்டார். யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட வீடியோக்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை பார்வையிட்டு தனது முக கவச மைக்குக்கு முழுவடிவம் கொடுத்திருக்கிறார். அதனை சார்ஜிங் செய்வதற்கு ஏற்ப சர்க்யூட் போர்டுகளையும் உருவாக்கி இருக்கிறார். இந்த பணி எளிதானதல்ல என்றும் கூறுகிறார். முதலில் தயாரித்த முக கவசத்தில் ஒலியின் தரத்தில் மாற்றம் வெளிப்பட்டிருக்கிறது. அதனை அணிந்து பரிசோதித்து பார்த்த பெற்றோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்து முழு வடிவம் கொடுத்திருக்கிறார். பின்பு அந்த முக கவசத்தை கெவினின் பெற்றோர் அணிந்து பணி புரிந்திருக்கிறார்கள். அதனை கேள்விப்பட்ட பிற மருத்துவர்கள், மற்ற மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் கெவினிடம் தங்களுக்கும் முக கவச மைக் தயார் செய்து தரும்படி கேட்டிருக் கிறார்கள். இதுகுறித்து திருச்சூரில் உள்ள மருத்துவக்கல்லூரியின் மருத்துவர் சரீனா கில்வாஸ் கூறுகையில், “நான் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளை பரிசோதிக்கிறேன். முக கவசம் மற்றும் ஷீல்டு அணிந்து கொண்டு நோயாளிகளிடம் பேசுவதற்கு கடினமாக இருந்தது. நான் சொல்வதை அவர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. அதனால் சத்தமாக பேச வேண்டியிருக்கும். அதனால் எனக்கு தொண்டை வலி வந்தது. இப்போது மைக் முக கவசம் அணிந்து கொண்டிருப்பதால் பேசுவதற்கு எளிதாக இருக்கிறது. நான் பேசுவது நோயாளிகளுக்கு கேட்பது போல, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெளிவாக கேட்க முடிகிறது’’ என்கிறார்.

‘‘நான் தயாரித்திருக்கும் இறுதி வடிவம் 6.3 செ.மீ நீளம், 3 செ.மீ அகலம் மற்றும் 0.5 செ.மீ தடிமன் கொண்டது. மைக்ரோ யூ.எஸ்.பி கேபிளை பயன்படுத்தி அதனை சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 45 நிமிடங்கள் வரை ஆகும்’’ என்றும் கெவின் கூறுகிறார்.

Next Story