சங்க காலத்து விவசாயம்


சங்க காலத்து விவசாயம்
x
தினத்தந்தி 26 April 2021 11:03 PM IST (Updated: 26 April 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

சங்க கால தமிழகத்தில் பரவலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி போன்றவை பயிரிடப்பட்டன.

நெல் முதன்மைப் பயிராக இருந்தது. வெண்நெல், செந்நெல், புதுநெல், ஐவனநெல், தோராய் போன்ற பல்வேறு நெல் வகைகள் மருத நிலப்பகுதியில் பயிரிடப்பட்டன.

செந்நெல் மற்றும் புதுநெல்லில் பல வேறுபட்ட வகைகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் பலா, தென்னை, பனை, பாக்கு போன்ற மரங்களும் நடப்பட்டு வளர்க்கப்பட்டன. வீடுகளுக்கு முன்பு மஞ்சள் செடிகளும், அதன் பின்னால் பூச்செடிகளும் நடப்பட்டு தோட்டங்கள் அமைத்து வளர்க்கப்பட்டன. முல்லை நில மக்கள் பழ மரங்களையும் வளர்த்தனர். கரும்பு உற்பத்தியாளர்கள் கரும்புச் சாறை பிழிந்தனர். சில இடங்களில், பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது.

பருத்தி மற்றும் தினை ஒரே நேரத்தில் சாகுபடி செய்யப்பட்டன. அவை அறுவடை செய்யப்பட்ட பிறகு அதே நிலத்தில் அவரை பயிரிடப்பட்டது. ஒவ்வொரு கிராமமும் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்றவையாக இருந்தன. தேவைப்பட்டால் மட்டுமே அண்டை கிராமங்களில் இருந்து கூடுதல் பொருட்கள் வாங்கப்பட்டன. பண்டமாற்று முறையை பின்பற்றினர். நெல்லுக்கு பண்டமாற்றாக உப்பு விற்கப்பட்டது.

சங்க காலத்தில் மிகவும் திட்டமிட்ட முறையில் சாகுபடி செய்தனர். உழுதல், விதைத்தல் உரமிடுதல், களையெடுப்பு, நீர்ப்பாசனம், பயிா் பாதுகாப்பு ஆகியவற்றைச் சரியான முறையில் செய்தனர். நெல் வயல்கள் காளைகளின் உதவியுடன் உழவு செய்யப்பட்டன. வயலில் தழைகளை விவசாயிகள் தங்கள் கால்களில் மிதித்து மூழ்கடித்தனர். நாற்றுகள் வளர்ந்த பின்னர் அவை இடம் மாற்றி நடப்பட்டன. பயிர் முதிர்ந்தவுடன் அவை அறுவடை செய்யப்பட்டன. இடைக்காலத்தில் அவ்வப்போது களைகள் எடுக்கப்பட்டன. அறுவடையான நெல்பயிரை களத்துக்கு கொண்டுவந்து அவற்றை தரையில் தட்டி நெல்மணிகள் பிரிக்கப்பட்டன. நெல் மணிகள் சேகரிக்கப்பட்டு, அளவிடப்பட்டு, சரியான கொள்கலன்களில் சேமிக்கப்பட்டன.

சிறுதானியங்கள் வறண்ட நிலங்கள் கொண்ட குறிஞ்சி நிலப் பகுதிகளில் பயிரிடப்பட்டன. இதில் பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது. உதாரணமாக, ஒரே பருவத்தில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. அதன்பின்னர் அவரை பயிரிடப்பட்டது.

உழவு, அறுவடைக்கு தேவையான பல்வேறு கருவிகள் தயாரிக்கப்பட்டன. அடிப்படை கருவிகள் ஏர் மெலி, நாஞ்சில், கலப்பை என்றும் அழைக்கப்பட்டது. ஏரானது மரத்தாலோ, இரும்பாலோ அல்லது எக்குச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிளற பயன்படுத்தப்பட்டது. மாடு அல்லது எருமை ஆகியவற்றில் பூட்டப்பட்ட இது மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்பட்டது. பயிரிடும் நிலத்தை சமன்படுத்த மரத்தாலான பரம்பு அல்லது மரம் பயன்படுத்தப்பட்டது.

களை அகற்றவும் பயிர்களுக்கு உள்ள நெருக்கத்தைக் குறைக்கவும் பள்ளியாடுதல் (பலுக்கை ஓட்டுதல்) என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. விவசாயிகள் ஆழமான கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பாசனத்துக்கு எடுக்க கபிலை என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினர். ஆழமற்ற கிணறுகளில் இருந்து நீரை மேலேற்ற ஏற்றம் என்ற அமைப்பைப் பயன்படுத்தினர்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் சங்க காலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

Next Story