அருகி வரும் தேவாங்கு
ஒருவரின் மெலிந்த, சிறிய உடலை எள்ளி நகையாடுவதற்கு, ‘தேவாங்கு’ என்ற பெயரை பலரும் பயன்படுத்துவதை நாம் கேட்டிருப்போம்.
தேவாங்கு மிகச் சிறிய பாலூட்டி இனமாகும். குரங்கின் தோற்றத்தை ஒட்டி இருந்தாலும், இவை குரங்கில் இருந்து வேறுபட்டே காணப்படுகின்றன.
இந்த விலங்கானது, பெரும்பாலும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களுக்கு இடையில் அதிகமான அளவில் வாழ்கின்றன. தேவாங்கு, அதிக பட்சமாக 41 செ.மீ. நீளமும், 300 கிராம் எடை மட்டுமே இருக்கும். இவை சிறிய பூச்சிகளையும், பறவைகளின் முட்டை களையும், சிறு பல்லி களையும் உணவாக உட்கொள்ளும். பசுமையான தாவரங்களில் இருக்கும் கொழுந்து இலைகளை அதிகமாக விரும்பி சாப்பிடும்.
மலைப்பாம்பு மற்றும் கழுகுகளின் வேட்டை பட்டியலில் தேவாங்கு முக்கிய இடத்தை பிடிக்கின்றது. தன்னுடைய பாதுகாப்பை கருதி, தேவாங்கு இரவில் மட்டுமே தன்னுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும். பகலில் முழு நேரமும் உறங்குவதையே வேலையாகச் செய்யும்.
இவற்றில் சாம்பல்நிற தேவாங்கு, செந்நிற தேவாங்கு என்று இரண்டு வகைகள் உள்ளன. மர பொந்துகள், பாறை இடுக்குகள், புதர்களில் வாழும் தன்மை கொண்டவை, இந்த தேவாங்குகள். என்றாலும், இவை அடர்த்தியான மரங்கள் நிறைந்த காடுகளில், மேற்பகுதியில் இடைவெளி இல்லாத நிலையில் உள்ள மரங்களிலேயே அதிகம் வசிக்க விரும்புகின்றன.
169 நாட்களை கர்ப்ப நாட்களாக கொண்ட தேவாங்கு, அதிக பட்சமாக இரண்டு குட்டிகள் வரை போடும். அந்த குட்டிகளை 6 முதல் 7 மாதங்கள் வரை பாலூட்டி வளர்க்கும். அருகி வரும் இனமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் இந்த விலங்கினம், அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. மருத்துவத்திற்கு இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதாக மக்கள் நம்புவதன் காரணமாகவே இந்த வேட்டையாடல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story