சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்
இன்று (பிப்ரவரி 18-ந் தேதி) சிங்காரவேலர் பிறந்த நாள்.
அடிமை இருள் சூழ்ந்து கிடந்த இந்திய மண்ணில் ‘விடுதலைச் சுடர்’ ஒளிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் சுதந்திரக் கனலை மூண்டெழச்செய்தவர் சிங்காரவேலர். இவர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி சென்னையில் பிறந்தார். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த அவர் மாநில கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வக்கீல் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத்தவிர இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளையும் அவர் கற்று இருந்தார். தனது வீட்டில் 20 ஆயிரத்துக்கும் மேல் நூல்களை சேகரித்து வைத்து இருந்தார். பொதுவுடைமைச் சிந்தனைகளை நாட்டில் பரப்பிய பணிகளுக்காக ‘சிந்தனைச் சிற்பி’ என்று போற்றப்பட்டார். உழைக்கும் மக்களின் உயிர்நாடியாய் இருந்து விடுதலை போராட்டத்தினை உயிர்ப்பித்துக்காட்டினார்.
இந்திய மக்கள் வறுமை நோய் தாக்குண்டு மடிவதற்கு சாதிய வாதமும், தீண்டாமைச் சாபமும் தான் முதற்காரணம் என்பதை உணர்ந்த அவர், 1889-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘சாதி ஒழிப்பு போராட்டம்’, ‘தீண்டாமை ஒழிப்பு போராட்டம்’, ‘கொத்தடிமை ஒழிப்பு போராட்டம்’ என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியாவின் விடுதலை குறித்த சிந்தனையில் ஒன்று திரளாத தொழிலாளர்களை ஒன்று திரட்டினார். “தோழர்” எனும் தூய சொல்லைப் பரப்புரைத்து விடுதலை முழக்கத்தை முழங்கிடச் செய்தார்.
இந்திய வரலாற்றில் முதன் முதலாக செங்கொடி வானெழுந்து பறக்கச் செய்து தொழிலாளர் வாழ்வு வளம்பெற 1918-ம் ஆண்டில் தொழிற்சங்கத்தை தொடங்கினார். அடிமைப்பிடியில் இருந்து தொழிலாளர்களை மீண்டெழச் செய்து விட்டால் இந்தியாவிற்கான விடுதலை தானே கனிந்துவிடும் என்ற நோக்கில் ‘ஏழைகள் தேசம் ஏழைகளுக்கே’ என்ற முழக்கத்தை முன் வைத்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்துக்கு அனைத்து வக்கீல்களுக்கும் அழைப்பு விடுத்தார். ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து அந்நாளை இந்தியாவின் ‘கருப்பு நாள்’ என்று அறிவித்து கருப்பு கொடியேற்றி போராடவும் செய்தார். இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது அவரது வருகையை கண்டித்து சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினார்.
அன்னியர் ஆட்சியும், அன்னியர் வருகையும் இந்திய மண்ணில் இனி தொடரக்கூடாது என்ற கொள்கை முழக்கத்துடன் அன்னியர் வருகையைக் கண்டித்து கருப்பு கொடியேற்றி கண்டனத்தை உரித்தாக்கி வந்த சிங்காரவேலர். 1923 ‘மே’ முதல் தேதி இந்திய வரலாற்றில் முதன் முதலாக செவ்வண்ணக் கொடியோடு தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்திய நாடு விடுதலை அடைந்துவிட்டதைப் போன்று ஓர் உணர்வை ஏற்படுத்தி ‘மே’ முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடினார். அவர் கொண்ட கொள்கைக்கு சான்று பகிரும் விதமாக உழைப்பாளர் சிலை நிறுவி பெருமைப்படுத்தினார் பெருந்தலைவர் காமராஜர்.
உலகின் கம்யூனிஸ்டுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் சிங்காரவேலர். அந்த நெருக்கமே 1924-ம் ஆண்டு கான்பூர் சதி வழக்கில் அவரை குற்றவாளியாக்குவதற்கு காரணமாக அமைந்தது. அவர் மீதான அடக்குமுறை தொடர்ந்தபோதும், கான்பூரில் நடந்த கம்யூனிஸ்டுகளின் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். ‘இந்திய கம்யூனிஸ்டு கட்சி’ தொடங்க காரணமாக இருந்த சிங்காரவேலரை கட்சியின் தலைவராக கொண்டு மூன்றாம் நாள் தொடர்ந்த மாநாட்டின் பகிரங்க கூட்டத்தில் கட்சியின் அனைத்து தீர்மானங்களும் முன்வைக்கப்பட்டன.
பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்தபோதும் தாய்மொழி கொள்கையில் தளராத நெஞ்சுரம் கொண்டிருந்தார் சிங்காரவேலர். இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக பதவியேற்றபோது தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். “உறுப்பினர்கள் இனி தமிழில் தான் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்து தமிழ்த்தென்றல் வீசக் காரணமாக இருந்தார். இங்கிலாந்திலும், இந்தியாவிலும் தொழிற்சங்க மசோதா நிறைவேற சிங்காரவேலர், காரணமாக இருந்தார். தொழிலாளர் நலன் குறித்து அவரின் போராட்டங்கள் தொடர்ந்தது. 1928-ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்திய தென்னிந்திய தொடர் வண்டி போராட்டம், அவருக்கு பத்தாண்டு சிறை தண்டனைப் பெற்று தந்தது. தண்டனை காலத்தை திருச்சி சிறையிலும், கோவை சிறையிலும் மாறிமாறி அனுபவித்து வந்தவர். 18 மாத சிறைவாசத்திற்கு பின் விடுதலை ஆனார்.
அவரின் வாழ்வு போராட்டம், சிறை தண்டனையென தொடர்ந்த போதிலும் அறிவியல், விஞ்ஞானப் பொருளியல் கருத்தில் ஆழமான சிந்தனையாளராகவும், சுயமரியாதை சமதர்மக் கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்தார். ‘எனக்கு தெரிந்து அவரைப் போன்ற அறிஞரைக் கண்டதில்லை. அவருக்கு பிறகு அப்படி ஒரு அறிஞர் தோன்றவே இல்லை’ என்று தந்தை பெரியார் புகழாரம் சூட்டுமளவிற்கு பகுத்தறிவு கொள்கையைப் பரப்புரைத்து வந்தார் சிங்காரவேலர்.
அவர் தம் வாழ்வின் நெடும் பயணத்தில் போராட்டம், சிறை வாழ்வு என பல்வேறு இன்னல்களைக் கடந்து தனது தள்ளாமையையும் கருத்தில் கொள்ளாமல் 1945-ம் ஆண்டு சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற அச்சுத்தொழிலாளர் மாநாட்டில் தனது இறுதிச் சொற்பொழிவை நிகழ்த்தினார் சிங்காரவேலர். “எனக்கு வயது 85. ஆயினும் தொழிலாளர் வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் மத்தியில் பணிபுரிந்தபடியே நான் இறந்தாலும் அதைவிட எனக்கு கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறென்ன?” என்று அவர் நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவு தொழிலாளர் உள்ளங்களை உள்ளபடியே உலுக்கியது. 1946-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி சென்னையில் காலமானார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சிங்காரவேலர் மாளிகை என்று அரசு பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப்புலியை மக்கள் மறந்தனர் என்று கூறியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் ‘போர்க்குணம் மிகுந்த நல்செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி’ என்று பாடியுள்ளார். சிங்காரவேலரின் வரலாறு தனிப்பெரும் வரலாறாக எழுத வேண்டிய அளவிற்கு விரிவானதாகும்.
- பி.ஜி.ஆனந்தன், தேசிய தலைவர், அகில இந்திய சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்.
Related Tags :
Next Story