ஜப்பானியர்களின் நீர் சிகிச்சை


ஜப்பானியர்களின் நீர் சிகிச்சை
x
தினத்தந்தி 9 Feb 2020 3:58 PM IST (Updated: 9 Feb 2020 3:58 PM IST)
t-max-icont-min-icon

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக நீர்தான் முக்கிய ஆகாரமாக விளங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது.

னிதர்கள் உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக நீர்தான் முக்கிய ஆகாரமாக விளங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. இது தாகத்தை கடந்து மனித உடல் இயக்கத்திற்கு நீரின் பங்களிப்பு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. சுறுசுறுப்புக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியத்திலும் வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர் களது தேகமும் பளபளப்புடன் பிரகாசமாக காட்சியளிக்கும். அதற்கு அவர்கள் கையாளும் நீர் தெரபி சிகிச்சையே காரணமாகும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு, ஐந்து டம்ளர் தண்ணீர் பருகுகிறார்கள். அந்த தண்ணீர் அந்தந்த காலநிலைக்கு ஏற்ப அறையின் வெப்பநிலைக்கு இணையாக சாதாரணமாகவோ அல்லது மிதமான சூடுடனோ இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

ஒருபோதும் அவர்கள் குளிர்ந்த தண்ணீரை பருகுவதில்லை. தண்ணீரில் இருக்கும் குளிர்ச்சி உடலில் கொழுப்பு படிவதற்கு காரணமாகிவிடும், செரிமான செயல்பாட்டையும் குறைக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. காலையில் தண்ணீர் பருகிய பிறகு 45 நிமிடங்கள் கழித்தே காலை உணவை உட்கொள்கிறார்கள். எந்த உணவாக இருந்தாலும் நிதானமாக மென்று அதிக நேரம் எடுத்து சாப்பிடுகிறார்கள். அதன்பிறகு உணவு சாப்பிடுவதற்கோ வேறு பானங்கள் பருகுவதற்கோ குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையால் மலச்சிக்கல் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைவலி மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவும். ஜூஸ், சூப் போன்ற திரவ ஆகாரங்கள் தண்ணீருக்கு ஈடாகாது. அவற்றுள் சர்க்கரை, உப்பு போன்ற மூலப்பொருட்கள் கலந்திருக்கும். அவை உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும். நீங்கள் சுறுசுறுப்பானவர்களாகவோ, வெளி இடங்களுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவோ, வெப்பமான காலநிலை கொண்ட பகுதியில் வசிப்பவர்களாகவோ இருந்தால் நிச்சயமாக அதிக தண்ணீர் பருக வேண்டும்.

ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையை பின்பற்றும்போது கலோரிகள் கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. பழச்சாறு வகைகள், சோடா மற்றும் இனிப்பு கலந்த பானங் களுக்கு பதிலாக தண்ணீரை பருகினால் உடலில் கலோரி அளவு தானாகவே குறைந்துவிடும். இதன் மூலம் தினமும் அதிக கலோரிகளை குறைக்கலாம். நிறைய தண்ணீர் பருகினால் உணவு சாப்பிடும் அளவு குறையும். அதன் மூலம் உணவில் உள்ள கலோரிகளின் அளவை குறைத்துவிடலாம். ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரே நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் பருகுவது நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும். சீறுநீரகத்திற்கு அதிக சுமையை கொடுத்துவிடும். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக பாதிப்புக்கு ஆளானவர்கள், குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் டாக்டர்களிடம் ஆலோசித்துவிட்டு தண்ணீர் பருகும் அளவை தீர்மானிக்க வேண்டும்.

Next Story