சுறா, மனிதர்களை வேட்டையாடுமா?


சுறா, மனிதர்களை வேட்டையாடுமா?
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 PM (Updated: 3 Jan 2020 4:30 PM)
t-max-icont-min-icon

வெள்ளை சுறாக்களின் முரட்டுத்தனமான வேட்டை குணம் பற்றி ஹாலிவுட் படமான “ஜாஸ்” திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். அதுபற்றி புத்தகமும் வெளிவந்து வெள்ளை சுறாக்கள் பற்றிய அழியா காவியங்களாக நிலைத்துவிட்டன.

டி.வி.களிலும், செய்தித்தாள்களிலும் சுறாக்கள் இரக்கத்தன்மையற்ற வேட்டைக்கார பிராணி என்று இவற்றின் அடிப்படையில் சித்தரித்து காட்டப்படுகிறது. ஆழம் குறைவான, அமைதியான கடல்பரப்பில் நீந்துபவர்களையும், ‘டைவிங்’ செய்ய குதிப்பவர்களையும் இரக்கமற்ற வகையில் அவை வேட்டையாடுவதாக காட்டப்படுகிறது.

ஆனால் நிஜம் கொஞ்சம் வேறானது. உலகம் முழுவதும் பெரிய வெள்ளை சுறாக்களின் தாக்குதல் ஆண்டிற்கு நூற்றுக்குமேல் பதிவாகிறது. ஆனால் அவற்றில் ஒருசில மட்டும் மோசமான தாக்குதலாக தெரிகிறது.

அவை வேட்டையாடுவதைவிட கடிப்பதில் மட்டும் ஆர்வம் கொண்டிருப்பதாக அதன் தாக்குதல்களில் இருந்து தெரிகிறது. எனவேதான் அவை கால் அல்லது கையில் மெதுவாக கடித்துவிட்டு செல்கிறது. அது ஒருமுறை சுவைத்துப் பார்த்தபின்பு, அதற்கு ஆர்வம் குறைந்துவிடுவதாக நம்பப்படுகிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால் சுறாக்கள் மனிதர்களை வேட்டையாடும் எண்ணத்துடன் தாக்குவதில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சுறாக்கள் உலவும் பகுதியில் புதிய உயிரினத்தின் வாசனையால் கவரப்பட்டோ, காயம் உள்ளிட்ட ரத்தக்கசிவு களின் வாடையால் ஈர்க்கப்பட்டோ அவை மனிதர்களை நெருங்கலாம். அது எந்த வகையான உணவு எனும் ஆர்வத்துடன் கடித்துப்பார்க்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கூற்று.

ஏனெனில் சுறாக்கள் வேட்டையாட முடிவு செய்துவிட்டால், மனிதர்கள் அவற்றுக்கு அற்பமான வேட்டைப் பொருள்தான். இருந்தாலும் அது மனிதனை உணவுப்பொருளாக வேட்டையாடுவது இல்லை, சாப்பிடுவதுமில்லை என்பதே உண்மை.

Next Story