பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் மூலம் ரூ.350 கோடி திரட்டும் மணப்புரம் பைனான்ஸ்
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு செய்து ரூ.350 கோடி வரை திரட்ட முடிவு செய்துள்ளது.
பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் என்பது கடன் சார்ந்த ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்களை பங்குகளாக மாற்ற இயலாது. இந்த கடன்பத்திரங்களுக்கு பொதுவாக அதிக வட்டி வருவாய் கிடைக்கிறது. எனவே முதலீட்டாளர்களில் பலர் இந்த வகை கடன்பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
முத்தூட் பைனான்ஸ், தீவான் ஹவுசிங் பைனான்ஸ், கொசமட்டம் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வழிமுறையில் பொதுவாக நிர்ணயித்த இலக்கிற்கு அதிகமாக நிதி திரட்டப்படுகிறது.
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் இப்போது தனிப்பட்ட முறையில் இந்த கடன்பத்திரங்களை ஒதுக்கி ரூ.350 கோடி வரை திரட்ட திட்டமிட்டு இருக்கிறது. இந்நிறுவன இயக்குனர்கள் குழுவின் நிதி ஆதாரங்கள் மற்றும் நிர்வாகக் கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனங்கள் பொது வெளியீட்டில் இறங்கும்போது, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆவண வடிவில் இந்த கடன்பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் டீமேட் கணக்கு வாயிலாகவும் விண்ணப்பிக்க முடியும். பட்டியலிடப்பட்டு இருந்தால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.
மும்பை சந்தையில், வியாழக் கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனப் பங்கு ரூ.172.95-ல் நிலைகொண்டது. இது, முந்தைய வர்த்தக நாள் (செவ்வாய்க்கிழமை) இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.20 சதவீத ஏற்றமாகும்.
Related Tags :
Next Story