தினம் ஒரு தகவல் : தரம் குறைந்த எண்ணெய்


தினம் ஒரு தகவல்  : தரம் குறைந்த எண்ணெய்
x
தினத்தந்தி 30 Sept 2019 10:15 AM IST (Updated: 30 Sept 2019 10:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விற்பனையாகும் எண்ணெய் பலவற்றில் கலப்படம் உள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. சில போலி நிறுவனங்கள் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு பாமாயிலை இறக்குமதி செய்து, சமையல் எண்ணெயுடன் கலந்து விற்கின்றன.

மோசடியான எண்ணெய் மில்களில் தரமான முறையிலோ, வேதிப்பொருள் கலக்காமலோ எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. அதிக லாபநோக்கில்தான் தயார் செய்கிறார்கள். குறிப்பாக நல்லெண்ணெய் தயார் செய்யும்போது எள்ளுடன் கருப்பட்டியைக் கலக்க வேண்டும். கருப்பட்டி விலை அதிகம் என்பதால் மொலாசஸ்ஸையும் சில ரசாயனப் பொருள்களையும் கலந்தே தயாரிக்கிறார்களாம்.

சமீபத்தில் எண்ணெய் கடைகளில் சோதனை செய்து மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியதில் அதிக கலப்படம் செய்த எண்ணெய் ரகங்களும் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. பாமாயில் விலை குறைவு. அதை கடலை எண்ணெய், நல்லெண்ணெயுடன் கலந்து, மூன்று, நான்கு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

நம் நாட்டில் எள், நிலக்கடலை போன்றவற்றின் உற்பத்தி குறைந்து சூடான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்தே அவற்றை இறக்குமதி செய்கிறோம். நம் நாட்டில் பாமாயில் இறக்குமதி இல்லையென்றால் சாதாரண மக்கள் எண்ணெய்க்கான விலையைக்கொடுத்து வாங்க முடியாது.

உணவுக்கலப்பட தடை சட்டம் 1957-க்கு மாற்றாக, 2011-ல் உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டது. இதில் கலப்படம் எனக் குறிப்பிடாமல், பாதுகாப்பற்ற, தரமற்ற உணவுப்பொருட்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்கிறார்கள். சுத்தமானது என லைசென்ஸ் வாங்கிய சில எண்ணெய் தயாரிப்பாளர்கள், குறிப்பிட்ட அளவை பாமாயிலைக் கலப்பதைத்தான் இவர்கள் ஆய்வுசெய்து கண்டறிந்திருக்கிறார்கள். எனவே ஏழை மக்கள் தரமற்ற எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Next Story