இதயம் காப்போம்...!


இதயம் காப்போம்...!
x
தினத்தந்தி 28 Sept 2019 3:13 PM IST (Updated: 28 Sept 2019 3:13 PM IST)
t-max-icont-min-icon

நாளை (செப்டம்பர் 29-ந் தேதி ) உலக இதய தினம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் இதய நோயாளிகள் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருகிறது. உலகத்தில் ஆண்டுக்கு 17.9 மில்லியன் பேர் இதய நோயினால் மரணம் அடைகின்றனர். இது உலக மக்கள் தொகையில் இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கு என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதயத்தை பற்றியும், இதய நோய்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உலக இதயநல கழகத்தால் 2000-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி முதல் உலக இதய தினமாக அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு “என் இதயம், உங்கள் இதயம்” என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நலமான இதயத்தோடு இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த ஆண்டில் முன்வைத்துள்ளது உலக இதயநல கழகம். இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைப்படி இந்தியாவில் 2.1 மில்லியன் பேர் இதய நோய் காரணமாக மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த அவலநிலைக்கு புகைபிடிப்பது, அதிகளவில் மது அருந்துவது, அதிக கொழுப்பு, பாரம்பரிய உணவுகளை கைவிட்டு அதிக உப்பு நிறைந்த துரித உணவுகளை உண்பது, ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இளம் வயதில் சர்க்கரை நோயினால் இதயம் பாதிக்கப்படுகின்றன. மக்களிடம் இதயத்தை பற்றி விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணமாக அமைகின்றன. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இடைவிடாது இயங்கிக்கொண்டு இருப்பது இதயமே. எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக சென்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயமே உறுதுணையாக இருக்கிறது. உடலின் பல பாகங்களில் இருந்து இதயத்திற்கு வரும் அசுத்த ரத்தம் இதய இயக்கத்தால் நுரையீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இதயத்திற்கு வந்து இங்கு இருந்து உடலின் மற்ற பாகத்திற்கு செல்கின்றன.

நாம் சுத்தமான காற்றை சுவாசித்தால் தான் அதிலுள்ள பிராண வாயுவை ரத்தம் எடுத்துக்கொள்ள முடியும். இன்றைய சூழ்நிலையில் மாசுபட்ட வாகனப்புகை நிறைந்த சூழ்நிலையில் சுவாசிப்பதால் உடலுக்கு தேவையான பிராணவாயு (ஆக்சிஜன்) சரிவர கிடைக்காமல் உடல் சோர்வு, நுரையீரல், இதய பாதிப்பு ஏற்படுகின்றன. இதயம் சீராக துடிப்பதற்கு அதனுடைய தனித்தன்மை வாய்ந்த தசைகளும், தசைநார்களும் உதவுகின்றன. இயல்பான நிலையில் ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 76 தடவை துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின் போதும் 80 மில்லி லிட்டர் ரத்தத்தை இதயமானது தமனிகள் மூலம் வெளியேற்றுகிறது.

எந்திரத்தனமான பரபரப்பான வாழ்க்கையில், மன உளைச்சல், கோபம், எதிலும் பரபரப்பு என்ற சூழ்நிலையில் இதயம் அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அதிக துடிப்புடன் வேலை செய்து கொண்டு இருக்கிறது. அதிக ரத்தக்கொதிப்பு, நீண்டநாள் சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை இதய பாதிப்புக்கு முக்கிய காரணமாகும். புகைப்பிடிப்பது, அதிக மது அருந்துவது, அதிக உடல் எடை, நீண்ட நாள் ரத்த சோகை இதயபாதிப்பை ஏற்படுத்தும்.

இதயம் சீராக இயங்குவதற்கு அதற்குரிய சத்துகளையும், ரத்தத்தையும் எடுத்துச்செல்வது இதய கொரோனரித் தமனிகள். இந்த ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதன் அறிகுறியாக மார்பு, கழுத்து, இடது கை வலி, மயக்கம், மூச்சு விட சிரமம், நெஞ்சில் கட்டைப்போட்டது போன்ற உணர்வு ஏற்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு வலி வெளியில் தெரியாமல் மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் தெரியும்போது ஈசிஜி எடுக்கும் போது மாரடைப்பு வந்து இருப்பது தெரியும். பல்வேறு பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மேற்கூறிய அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் முறையாக பரிசோதனைகளை செய்து கொண்டு இதய பாதிப்பை தவிர்க்கலாம். தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நடைப்பயிற்சி, நீச்சல், பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, கூடைப்பந்து பயிற்சிகள் இதயத்துக்கு வலு சேர்ப்பவை.

உணவில் அதிக கொழுப்புதரும் பொருட்களையும், அதிக உப்பையும் தவிர்க்க வேண்டும். பாஸ்ட்புட் கலாசாரத்தை அறவே தவிர்க்க வேண்டும். உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். புகை பகை என்று எண்ணி புகை பிடிக்கக்கூடாது. அதிக மது இதய வீக்கத்தை ஏற்படுத்தி செயல் இழக்க செய்கின்றன. ஆகவே மது அருந்தக்கூடாது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வாக்குறுதி: “என் இதயத்திற்கு, உங்கள் இதயத்திற்கு”, நம் எல்லோர் இதயங்களுக்கும், முறையான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவில் அரிசி, கோதுமை, கேழ்வரகு மற்றும் சிறு தானியங்கள், கீரை, காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ பிரியர்கள் ஆட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும். தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீனை வேக வைத்து குழம்பாக சாப்பிடலாம். ஊறுகாய், கருவாடு, சிப்ஸ் போன்ற உப்பு அதிகமான உணவுகளை குறைத்துக்கொள்வது அவசியம். தேங்காய் எண்ணெய், தயிர், வெண்ணெய் பாலாடை, தேங்காய் முந்திரி பருப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை தொடக்கூடாது. சமையலின் போது பலவித எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

தினமும் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவை இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.

வி.முருகேசன், இதய மருத்துவர், துணைத்தலைவர், டெல்டா மாவட்ட கடலோர இதய மருத்துவ சங்கம்.

Next Story