இட்டலெக்...இடரிக்கா... இட்லி உருவான கதை


இட்லி
x
இட்லி
தினத்தந்தி 5 Aug 2019 10:21 AM IST (Updated: 5 Aug 2019 10:21 AM IST)
t-max-icont-min-icon

இட்லி எங்களின் உணவு என்று எளிமையாக சொல்லக்கூடாது.

9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரையிலான சமஸ்கிருத, கன்னட இலக்கியங்களில், இதை பற்றிய குறிப்புகள் உள்ளன. 

920-ம் ஆண்டை சேர்ந்த கன்னட மொழி படைப்பான, சிவகோட்டியச்சாரியா இயற்றிய வத்தரதானே என்ற நூலில், ‘இட்டலெக்’ என்ற வகை இட்லி பற்றி குறிப்பு உள்ளது. 1130-ல், 3-ம் சோமசாகர மன்னனால் இயற்றப்பட்ட மனசொலாச என்ற சமஸ்கிருத நூலில், ‘இடரிக்கா’ என்ற வகை இட்லி பற்றி குறிப்பு உள்ளது என்கிறார் உணவு வரலாற்று அறிஞர் ராகேஷ் ரகுநாதன்.

ஆனால் அந்த இட்லிகள் உளுந்து மற்றும் மோரினால் செய்யப்பட்டவை. அரிசியுடன் உளுந்தை கலந்து, ஊறவைத்து, வேக வைக்கும் முறை அன்று இல்லை. யுவான் சுவாங் என்ற சீன யாத்ரீகர், இந்தியாவிற்கு வந்தபோது, இப்படி வேக வைக்கும் முறை இங்கு இல்லை என்று பதிவு செய்திருக்கிறார் என்கிறார்.

இன்றைய இந்தோனேசியா பகுதிகளில் இருந்து 800 முதல் 1200-க்குள் இட்லி இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று கே.டி.ஆச்சார்யா என்ற உணவு வரலாற்று அறிஞர் கூறுகிறார். இந்தோனேசியாவின் சில பகுதிகளை அன்று, சைலேந்திர, இசையன, சஞ்சய வம்சங்களை சேர்ந்த இந்து மன்னர்கள் ஆண்டனர். அங்கு ‘கெட்லி’ என்ற வகை உணவு, இட்லியை போல தயாரிக்கப்பட்டது. அரச குடும்பங்களில் பணிபுரிந்த இந்திய சமையல்காரர்கள் இதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இன்று நாம் அதை தென்கிழக்கு ஆசியா என்று அழைக்கலாம். ஆனால் அன்று அது இந்து ராஜ்ஜியமாக இருந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன. வரதராஜ பெருமாள் கோவிலில், 400 வருட பழமையான காஞ்சீபுரம் இட்லி ரகங்கள் உள்ளன. ‘குடலை’ இட்லி என்ற அழைக்கப்பட்ட இவை ஒரு தனி ரகமானவை. மூங்கில் கூடைகளில் இவை நீராவி மூலம் வேக வைக்கப்பட்டன. ஒவ்வொரு இட்லியும் சுமார் மூன்று கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்கிறார் ராகேஷ்.

அரேபியாவில் இருந்து இங்கு குடியேறியவர்கள் இட்லியை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அரேபிய வணிகர்கள் உணவில் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள். ஹலால் உணவை மட்டும் உண்பார்கள் என்று லிஸ்சி காலிங்ஹாம் என்ற வரலாற்று அறிஞர் கூறுகிறார். அதன் பொருட்டு, தட்டைப்படுத்தப்பட்ட அரிசி உருண்டைகளை உண்ணத் தொடங்கினார்கள் என்று கெய்ரோவில் உள்ள அல் அஸ்ஸார் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள ஆவணங்கள் கூறியதாக காலிங்ஹாம் சொல்கிறார்.

‘இட்டு அவி’ என்ற சொல்லில் இருந்து இட்லி உருவாகியிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுவதாக எஸ்.ராம் பிரகாஷ் என்ற உணவு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் மக்களிடம், உளுந்தை, நெய்யில் பொறிக்கும் வழக்கம் இருந்தது. இன்றைய மெது வடையுடன் இது தொடர்பு உடையதாக இருக்கலாம் என்கிறார் ராம் பிரகாஷ்.

‘தட்டெ’ இட்லிகள், மினி இட்லிகள், கோவாவின் சன்னா, மங்களூரின் கொட்டிகி, மற்றும் இலைகளில் வேகவைத்த முத்தே இட்லிகள் என்று இட்லிகள் பல வகை மாற்றங்கள்.

Next Story