உலக நாடுகளின் உணவுக் கலாசாரம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்
நாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறோம். ‘படித்து’ நிறைய கற்றுகொள்ள முடியும் என்பதால், அதை செய்துகொண்டிருக்கிறோம். புத்தகங்களில் படித்து கற்றுக்கொள்வதுபோல் வெளிநாட்டு பயணங்களில் நாம் ‘பார்த்து’ நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
நாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறோம். ‘படித்து’ நிறைய கற்றுகொள்ள முடியும் என்பதால், அதை செய்துகொண்டிருக்கிறோம். புத்தகங்களில் படித்து கற்றுக்கொள்வதுபோல் வெளிநாட்டு பயணங்களில் நாம் ‘பார்த்து’ நிறைய கற்றுக்கொள்ள முடியும். அதற்காக வெளிநாடுகளில் உள்ள உணவகங்களுக்கு செல்லவேண்டும். உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் உணவை ஒவ்வொரு நாட்டினரும் எப்படி கையாளுகிறார்கள்? உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? என்பதை பார்க்கும்போது சில நேரங்களில் நாம் வெட்கித்தலைகுனிய வேண்டியதாகிவிடுகிறது.
தினமும் பல ஆயிரம் டன் உணவை திருமணம் போன்ற விழா நிகழ்ச்சி களிலும், ஓட்டல்களிலும், வீடுகளிலும் வீணடித்துக்கொண்டிருக்கும் நம் நாட்டில் இருந்து ரஷியாவிற்கு சென்றிருந்தபோது கற்ற பாடம் என் மனதைவிட்டு அகலாதது.
ரஷியா பரந்துவிரிந்து கிடக்கும் மிகப்பெரிய துருவ பிரதேசம் என்பதும், நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு குளிரைக்கொண்ட நாடு என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம். செப்டம்பர் மாதத்தில் மட்டும்தான் நம்மால் அங்குள்ள குளிரைத் தாங்கிக்கொள்ள முடியும். மற்ற மாதங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் என்பதால் அதற்கு ஏற்ற உணவுப்பழக்க வழக்கங்களை ரஷியர்கள் கடைப்பிடிக் கிறார்கள். உடலுக்கு அதிக உஷ்ணத்தை தரக்கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கலந்த உணவுகளையே அவர்கள் அதிகம் உண்கிறார்கள்.
மாஸ்கோ நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நான் உட்கார்ந்திருந்தபோது, இரண்டு இளம் பெண்களையும் அவர்களது தாய், தந்தையையும் கொண்ட ரஷிய குடும்பம் ஒன்று எதிர்மேஜையில் வந்து அமர்ந்தது. நான் சாண்ட்விச், பிரெட் ரோஸ்ட், ஈமுகோழி முட்டை, முட்டைக்கோசில் தயார் செய்த ‘கிவானேயா கபூஸ்தா’ போன்றவைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
வாங்கிய உணவுகளில் ஒரு பகுதியை என்னால் சாப்பிட முடியவில்லை. என் கண்களுக்கு எட்டிய தூரத்தில் உள்ள மேஜைகளில் இடம் பிடித்திருந்த எல்லா ரஷியர்களுமே ‘அப்படைசர்’ எனப்படும் ஸ்டார்ட்டர்களில் ஆரம்பித்து உருளைக்கிழங்கில் விதவிதமாக தயார் செய்த உணவுகளையும், மாடு மற்றும் பன்றி இறைச்சி வகைகளையும் மிக குறைந்த அளவில் வாங்கி, நிதானமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியில் ‘போர்ச்’ என்ற ஒருவகை சூப்பை பருகினார்கள்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும்போது அந்த உணவகத்தில் எனது தட்டை தவிர வேறு எதிலும் ஒரு பிசிறு உணவுகூட மிச்சம் இல்லை. கழுவித் துடைத்தது போல் ரஷியர்களின் உணவுத்தட்டுகள் இருக்க, எனது சிந்தனை நம் ஊரில் நடக்கும் திருமண விருந்துகளை நினைத்துப்பார்த்தது. எட்டு வகை கூட்டு, ஐந்துவகை இனிப்பு என்று இலைகளில் வரிசையாக அடுக்கப்படும் உணவுகளில் எதையுமே சாப்பிடாமல் அப்படியே சுருட்டி வைத்துவிட்டு எழுந்து போகிற வர்களை பார்த்து நொந்துபோன காட்சி நினைவுக்கு வந்தது.
விஷயத்திற்கு வருவோம்! மாஸ்கோ உணவகத்தில் அனைவருமே துடைத்து சுத்தம் செய்ததுபோல் எதையும் மிச்சம் வைக்காது அளவோடு சாப்பிட்டுவிட்டு எழுந்ததும், ‘ஒரு துளி உணவைக்கூட வீணாக்காத இந்த நல்ல கலாசாரத்தை அவர்கள் அனைவருமே பின்பற்ற என்ன காரணம்?’ என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மேலோங்கியது. அதையே கேள்வியாக்கி என் அருகில் இருந்த ரஷ்ய தம்பதியிடம் கேட்டேன். அவர்கள் அந்த மாற்றத்திற்கு காரணமான ஒரு நூறாண்டு கால சரித்திரத்தை சொன்னார்கள்.
1916-ம் ஆண்டுவரை ரஷ்யர்களும் உணவு விஷயத்தில் நம்மைப்போன்றுதான் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இஷ்டத்திற்கு சாப்பிட்டு, கண்டபடி வீணாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். 1917-ம் ஆண்டு ரஷிய புரட்சி நடந்தது. லெனின் ஆட்சியை பிடித்தார். அவர் அனைத்து விளைநிலங்களையும், உணவு உற்பத்தி மையங்களையும் அரசுடமையாக்கினார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையுடன் உணவு வினியோகத்தையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்து, உணவுப்பொருட்களை அளந்து, கணக்கிட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கினார். அப்போது குறைவாக கிடைத்ததால் அளவோடு சாப்பிடும் பழக்கம் ரஷியர்களிடம் உருவாகியிருக்கிறது. முதலில் கோபம் கொண்டாலும், பின்பு ‘அதை தவிர வேறு வழியில்லை’ என்பதை உணர்ந்து அவர்கள் அளவோடு, சாப்பிட பழகிக்கொண்டார்கள்.
1991-ம் ஆண்டு சுதந்திரதாகம் ஏற்பட்டு சோவியத்யூனியன் உடைந்து சிதறியது. அதை தொடர்ந்து ரஷ்யாவை ஏழ்மை வாட்டியது. அன்றாட உணவுக்கு கஷ்டப்பட்டார்கள். பின்பு படிப்படியாக முன்னேறினார்கள். ஆனாலும் உணவு கிடைக்காமல் அலைந்த காலம் அவர்கள் மனத்திரையில் இருந்து மறையவில்லை. அதனால் அளவோடு, வீணாக்காமல் சாப்பிட கற்றுக்கொண்டார்கள்.
என்னிடம் பேசிய ரஷிய குடும்பத்தில் இடம் பெற்றிருந்த பெண். “தேவையான அளவு மட்டுமே நாங்கள் உணவுப் பொருட்களை கடைகளில் இருந்து வாங்குகிறோம். அவை மலிவாக கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாக வாங்குவதில்லை. அதுபோல் எத்தனை பேருக்கு உணவு தேவை என்பதை உறுதி செய்துவிட்டு, அதற்குரிய அளவில்தான் சமைப்போம். சாப்பிடும்போது ஒருதுளிகூட தரையில் விழாது. ஒரு பிசிறுகூட உணவுத் தட்டில் இல்லாத அளவுக்கு வழித்து சாப்பிட்டுவிடுவோம் எங்கள் குழந்தைகளும் அப்படித்தான்” என்றார்.
இதுதான் நாம் ரஷியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.
நம் நாட்டில் தண்ணீர் இல்லை. விளைச்சல் பற்றாக்குறை. தனி நபர் களிடம் பணப்புழக்கமும் குறைந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் வாழ்க்கை திண்டாட்டமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நமது உணவுக் கலாசாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படவே இல்லை.
தேவைக்கு அதிகமாக (கடன் வாங்கியாவது) உணவுப் பொருட்களை வாங்குகிறோம். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்குகிறோம். அதை சாப்பிடும்போதும் வீணாக்குகிறோம். நாம் வீணாக்கும் ஒவ்வொரு பருக்கையும் விலை மதிப்பற்றது என்பதை நாம் புரிந்தால்தானே நமது தலை முறைக்கு புரியவைக்க முடியும்.
சீன மக்களிடம் இருந்து உணவு விஷயத்தில் நாம் எதை கற்றுக்கொள்ளலாம்?
சீனாவுக்கு தொழில்ரீதியாக செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள உணவுப்பழக்கம் திகைக்கவைக்கும் அளவுக்கு இருக்கும். நத்தை சூப், குரங்குசூப், பாம்பு சூப் என்றெல்லாம் கேள்விப்பட்டுவிட்டு, அங்குபோய் எந்த உணவைப் பார்த்தாலும் அடிவயிறு கொஞ்சம் கலங்கத்தான் செய்யும். ஆனால் அங்கும் நாம் விரும்பி சாப்பிடக்கூடிய உலகப்புகழ்பெற்ற உணவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு டோப்பு. சோயா பீன்சில் இருந்து இதனை தயாரிக்கிறார்கள். இந்த டோப்புவை மிளகாய்த்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, பிரவுன் சுகர் போன்றவை கலந்து அற்புதமாக தயாரித்து ஆரஞ்சு சாறும் சேர்க்கிறார்கள். பின்பு அதனை அளவான ஆலிவ் எண்ணெய்யில் வறுத்து தருகிறார்கள். இது சைவ உணவு, நம்பி சாப்பிடலாம்.
சீனர்கள் எந்த உணவாக இருந்தாலும் ‘சாப் ஸ்டிக்’ பயன்படுத்திதான் சாப்பிடுகிறார்கள். டிரம்ஸ் வாசிக்க பயன்படுவதுபோன்ற ஒல்லியான அந்த இரண்டு குச்சிகளை அவர்கள் லாவகமாக கையாண்டு சாப்பிடுகிறார்கள். ‘சாப்ஸ்டிக்’ பயன்படுத்துவதன் சிறப்பம்சம் பற்றி சீன நண்பர்கள் சொல்வதை கேளுங்கள்.
“நாங்கள் சாப்பிடும்போது கவனச்சிதறல் இல்லாமல் முழு கவனமும் சாப்பிடும் உணவு மீது இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம். சாப் ஸ்டிக்குகளை கையில் எடுத்தாலே கவனம் உணவு மீது பதிந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவைகளை பயன்படுத்தி சாப்பிட முடியாது. குச்சியில் குறைந்த அளவே உணவை எடுக்க முடியும். அதையும் நன்றாக மென்று சாப்பிடுவோம். அதிக நேரம் எடுத்து சாப்பிட்டாலும், குறைந்த அளவு உணவே உட்கொள்ள முடிவதால் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியாது. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எந்த அளவுக்கு ருசித்து ரசித்து சாப்பிடுகிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, அதுவும் முக்கால் வயிறு மட்டுமே சாப்பிடுவது போன்றவை எங்கள் வழக்கம். அதனால் எங்கள் நாட்டு மக்களை தொப்பை யுடன் பார்ப்பது கடினம்” என்றார்கள்.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்து காலியான தட்டுகளையும், கிண்ணங்களையும் பார்த்தேன். சீனர்களும் உணவை சிந்துவதில்லை. வீணாக்குவதில்லை. நாம் ரஷியர்களிடமிருந்தும், சீனர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் விஷயம், அவர்களது உணவுக் கலாசாரம்தான்! இந்த அடிப்படை கலாசாரத்தை நாம் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து தொடங்குவோம்!
கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ், உணவியல் எழுத்தாளர், சென்னை.
Related Tags :
Next Story