‘ராப்’ இசையில் அசத்தும் ‘தமிழச்சி’


‘ராப்’ இசையில் அசத்தும் ‘தமிழச்சி’
x
தினத்தந்தி 6 July 2019 1:35 PM IST (Updated: 6 July 2019 1:35 PM IST)
t-max-icont-min-icon

‘ராப்’ இசையின் மீது காதல் கொண்டவர்களுக்கு, ‘ஐக்கி பெர்ரி’ என்ற பெயர் பரீட்சையமானதாக இருக்கும். ஏனெனில் மேலை நாடுகளில் பிரபலமாக திகழும் ‘ராப்’ (Rap) இசைப்பாடலுக்கு, தமிழ்நாட்டில் இருந்தபடியே, தமிழ் மொழியின் வழியே அழகு சேர்ப்பவர், இவர்.

பிளாண்ட் (பழுப்பு நிறம்) சிகை அலங்காரம், ராப் இசை கலைஞர்களுக்கே உரித்தான ஜிகு...ஜிகு உடை அலங்காரம் என வெளிநாட்டு ராப் இசை பாடகி போல தோற்றமளித்தாலும், ஐக்கி பெர்ரி தஞ்சை மண்ணில் பிறந்த தமிழச்சிதான். ராப் இசையின் மீது கொண்ட காதலும், ராப் இசை கலாசாரமும், ஐக்கி பெர்ரியை வெளிநாட்டு ராப் இசை கலைஞர் போல மாற்றியிருக்கிறது.

‘‘தோற்றம் மாறியிருக்கலாம், ஆனால் தமிழ் மொழி மீதான பாசம் அப்படியே இருக்கிறது’’ என்பவர், தன்னுடைய ராப் இசை பாடல்களில், தூய தமிழ் மொழியையே பயன்படுத்துகிறார். குறிப்பாக தித்திக்கும் தமிழ் வார்த்தைகளை, சரவெடி கோர்வையாக்கி, ராப் இசையின் வழியே, படபடவென வெடிக்கிறார். அதனால்தான் இவர் எழுதி, பாடிய அத்தனை ராப் இசை பாடல்களுக்கும், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘இன்டியூஜ்வெல் சிங்கர்’ என்ற அடையாளத்தோடு, பல ராப் இசை பாடல்களை தனியாக தயாரிப்பதோடு, அமெரிக்கா, தைவான் போன்ற உலகத்தர ராப் இசை கலைஞர்களோடும் இணைந்து பாடி அசத்துகிறார். தமிழ்நாட்டில் கொஞ்சமும் பிரபலமில்லாத ராப் இசையில் நுழைந்து, தமிழ் மொழியால் உயர்ந்திருக்கும் ஐக்கி பெர்ரியை சென்னையில் சந்தித்து பேசினோம். அவர், ராப் இசை பற்றியும், அவருடைய ராப் இசை பயணம் குறித்தும் தனக்கே உரித்தான சரவெடி பாணியில் பகிர்ந்து கொண்டார்.

உங்களை பற்றி கூறுங்கள்?

நான் வெளிநாட்டு பாடகி போன்று தோற்றமளித்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே தஞ்சாவூரில்தான். இன்று ராப் இசை கலைஞராக பிரபலமாகியிருந்தாலும், நான் ஒரு டாக்டர். என்னுடைய ஆசைகளுக்கு ஊக்கமளித்த பெற்றோர், என்னுடைய ராப் இசை எதிர்காலத்திலும் கவனம் செலுத்தினர். பெற்றோரின் விருப்பப்படியே புதுச்சேரியில் மருத்துவம் பயின்றேன். முதுகலை படிப்பை புனேவிலும், காஸ்மெட்டிக் பட்டப்படிப்பை ஜெர்மனியிலும் முடித்தேன். அதனால் இன்று பொறுப்பான மருத்துவராகவும், ஜாலியான ராப் இசை கலைஞராகவும் திகழ்கிறேன்.



ராப் இசையை பற்றி கூறுங்கள்?

இது ஆப்பிரிக்க நாட்டில் உருவான இசை கலாசாரம். சொல்ல நினைக்கும் கருத்தை, படபடவென பேச்சு பாணி யிலும், அதோடு கொஞ்சம் இசை கலந்தும் ரசிக்க கொடுப்பார்கள். ஆப்பிரிக்காவை தொடர்ந்து, இன்று பல நாடுகளில் ராப் இசை குடியேறியிருக்கிறது. சில நாடுகளில் ராப் இசை கலைஞர்களை, மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களது இசையில் வெளிப்படும் உண்மைதன்மைதான் (ஒரிஜினாலிட்டி) இதற்கு காரணம். ரசிகர்களின் மனநிலையை புரிந்து, ரசிகர்களில் ஒருவராக வாழ்ந்தால் மட்டுமே, உணர்ச்சிப்பூர்வமான ராப் இசை பாடல்களை உருவாக்க முடியும். இந்த கலையில் பலரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நானும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.

ராப் இசையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

எனக்கு பொதுவாகவே வெஸ்டன் மியூசிக், ராப் இசை பாடல்களில் ஆர்வம் உண்டு. வெஸ்டன் மியூசிக்கை, உணர்வுப்பூர்வமாக காதலித்தேன் என்று கூட சொல்லலாம். அந்த காதல், ஒருகட்டத்தில் என்னை ராப் இசைக் கலைஞராக மாற்றிவிட்டது.

என்னுடைய படிப்பு விஷயத்தில் பெற்றோர் கவனம் செலுத்தியதை போன்றே, பாட்டு, நடனம், மாடலிங், பேஷன் துறை போன்ற மற்ற தனித்திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் சிறுவயதிலிருந்தே படிப்போடு, தனித்திறமைகளையும் வளர்த்து கொண்டேன். பாடுவது, மாடலிங் செய்வது, நடனமாடுவது, டி.வி.விளம்பரங்களில் நடிப்பது... என பன்முக திறமைகளை வளர்த்து கொண்டேன். இதனால் மேடை பயம் என்பது துளியும் இல்லாமல் போனது. இப்படி ராப் இசைக் கலை ஞருக்கான அத்தனை தகுதிகளும், எனக்குள் இருப்பதை உணர்ந்தபோதுதான், ஐக்யா என்ற பெயரை ஐக்கி பெர்ரி என மாற்றி ராப் இசை கலைஞராக மாறிவிட்டேன்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் ராப் இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வட இந்தியாவில் இருக்கும் ராப் இசைக் கலைஞர்களின் ராப் பாடல்களையும், ஆங்கில ராப் பாடல்களையும் அதிகமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அப்போதுதான், ‘தமிழில் ராப் இசை பாடல்களை கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது. உடனே தாய்மொழியான தமிழ் மொழியோடு, ராப் இசை உலகிற்குள் நுழைந்துவிட்டேன்.

ராப் இசை, மேலைநாடுகளில் பிரபலமானது. தமிழகத்தில் பிரபலமில்லாதது. அப்படி இருந்தும், ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டு, தமிழ் மொழியில் ராப் இசை பாடல்களை உருவாக்கியதற்கான காரணம் என்ன?

ராப் இசைக் கலைஞராக வளர்ந்ததும், தமிழை ராப் இசை உலகிற்குள் கொண்டு வந்ததும் என்னை அறியாமலே நடந்த விஷயங்கள். ஆரம்பத்தில் எனக்கு தமிழ் பேச தெரிந்தாலும் எழுத்து வழக்கில் பல சிக்கல்களை சந்தித்தேன். இதை என் அம்மாவிடம் கூறியபோது, அவர் வேதனைப்பட்டார். மேலும் தமிழ் மொழியில் என்னை வலுப்படுத்தினார். தமிழ் மொழியை கற்கத் தொடங்கியதில் இருந்தே, எனக்கு தமிழ் மொழியின் மீது தனி ஈர்ப்பு உருவானது. இசையோடு, தமிழ் மொழியையும் காதலித்தேன். மேலும் ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் ராப் இசையை வளர்க்க பல கலைஞர்கள் இருந்தாலும், தமிழ் மொழியில் ராப் கலைஞர்கள் இல்லையே என்ற ஆதங்கமும் எனக்குள் இருந்தது. இந்த பிரச்சினைக்கு, என்னை நானே தீர்வாக்கி கொண்டேன். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் ராப் கலைஞர்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கும் ‘முதல் பெண் ராப் பாடகி’ என்ற பெருமை என்னை சந்தோஷப் படுத்துகிறது.

எப்போதிலிருந்து ராப் இசை பாடல்களை எழுதி பாடுகிறீர்கள். இதுவரை எத்தகைய ராப் இசை பாடல்களை உருவாக்கியிருக்கிறீர்கள்?

கல்லூரி படிக்கும் போதே, ராப் இசைக் கலை ஞராக மாறிவிட்டேன். 2012-ம் ஆண்டு முதன்முதலில் ஆங்கிலத்தில் பாடல் வரிகளை எழுதி, ராப் இசை கனவிற்கு உயிர் கொடுத்தேன். அதோடு, ராப் இசை ஸ்டைலில் பாடியும் அசத்தினேன். ‘கிலியோ தி லியோ’ என்ற அந்த பாடல், பிரபலமடையவில்லை என்றாலும், எனக்கு நம்பிக்கையையும், அனுபவத்தையும் கொடுத்தது. உடனே அடுத்ததாக, தமிழ் மொழிக்கு மாறி, பாடல்களை எழுதினேன். ‘பிரைட் ஆப் லவ்’ என்ற தலைப்பில், காதலர் தின சிறப்பு ராப் பாடலை வெளியிட்டேன். இதில் இயல்பான ஆண்-பெண் காதலை தவிர்த்துவிட்டு, ‘மனிதத்துவத்தில் காதல்’ என்பதை மையப்படுத்தினோம். அடுத்ததாக, நடிகர் ரஜினிகாந்தின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் ‘பிரைட் ஆப் சூப்பர் ஸ்டார்’ என்ற பாடலை வெளியிட்டோம். பிறகு ஜல்லிக்கட்டின் பெருமையை விளக்கும் என்ற பாடலையும் வெளியிட்டோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தடைகளை உடைத்து மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றபோது, ‘கிங்ஸ் ஆர் பேக்’ என்ற ராப் பாடலை, வீடியோவோடு வெளியிட்டோம். சமீபத்தில் கூட, ‘பிரைட் ஆப் உமன்’ என்ற தலைப்பில், பெண்மையின் மகத்துவத்தை, ராப் பாடலாக பதிவுசெய்திருந்தோம். இதுபோக, வெளிநாட்டு ராப் கலைஞர்களுக்கு, பாடல் வரிகளை எழுதிக்கொடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறேன்.

ராப் இசையில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி?

என்னுடைய ராப் பாடல்களை, அமெரிக்காவில் இருக்கும் ரஹ்னா என்ற ராப் பாடகி ரசித்திருக்கிறார். உடனே இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொண்டு, அவருக்கான பாடல்களை எழுதி கொடுக்கும்படி கேட்டார். அதற்கான முதல் பணி முடிந்துவிட்டது. தற்போது இரண்டாவது பாடலுக்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. மேலும் தைவான் ராப் பாடகரோடு இணைந்து, நிகழ்ச்சி நடத்தும் வேலைகளும் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.

ராப் இசையை மக்கள் விரும்புகிறார்களா?, மருத்துவர் என்ற சமூக அந்தஸ்தில் இருந்துகொண்டு, பிரபலமில்லாத ராப் இசைத்துறையில் சாதிக்க துடிப்பது ஏன்?

பாடல்கள் என்பது வெறும் பொழுதுபோக்கோடு நின்று விடாது. பாடல்களின் மூலம் சமூக கருத்துகளையும், பிரபலப் படுத்தலாம். மன்னர் காலத்தில், ‘பா’ (பாடல்) வடிவில்தான் மக்கள் தங்களது ஆதங்கத்தை, மன்னரிடம் வெளிப்படுத்தினர். புரட்சி கவி பாரதியாரின் ஸ்டைலும் அதுவே. அந்த வழியில்தான், மருத்துவர் என்ற சேவையோடு, சமூக புரட்சிக்கான விதையையும் தூவ நினைக்கிறேன்.

மேலும் ராப் இசைக்கு, இன்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இக்கால இசையமைப்பாளர்கள், சினிமா பாடல்களாகவும், ராப் இசையை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். என்னுடைய கருத்துபடி, அடுத்த 5 ஆண்டுகளில் ராப் இசைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

முதல் பெண் தமிழ் ராப் கலைஞராக நீங்கள் வளர்ந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

யாரும் செய்ய துணியாத காரியத்தை நாம் செய்து முடிப்பது எப்போதுமே அலாதியான ஆனந்தம்தான். அதிலும், உலகள விலான சாதனைகள் என்றால், மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும். தமிழ்நாட்டில் ராப் இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டவர்கள். சிலர் தமிழில் பாடக்கூடியவர்கள். ஆனால் நான் மட்டுமே, தமிழில் ராப் இசையை வழங்கக்கூடிய பெண் கலைஞர் என்பது, என்னை பெருமைப்பட செய்கிறது.

நீங்கள் விரும்பக்கூடிய ராப் இசை கலைஞர்கள் யார்?, ஏன்?

என்னை ராப் இசைக்குள் கைப்பிடித்து அழைத்து வந்தது, கேட்டி பெர்ரி என்ற அமெரிக்க பாப் பாடகி. அவரது பாடல் கருத்துக்கள் மென்மையாக இருக்கும். முக சுழிப்பு இல்லாமல், எல்லா வயதினரும் ரசிக்கும் படி இருக்கும். அவரது பாடல்களில் மயங்கித்தான், நானும் ராப் இசையில் சிக்கிக்கொண்டேன். அடுத்ததாக, ஆப்பிரிக்காவை சேர்ந்த நிக்கி மினாஜ் என்ற பெண் ராப் பாடகரையும் பிடிக்கும். இவர் கேட்டி பெர்ரிக்கு எதிர்மறையானவர். சொல்ல நினைக்கும் கருத்துக்களை, உச்சந்தலையில் உடைத்தார்போல, அழுத்தம் திருத்தமாக பாடிவிடுவார். பாடல் வரிகள், வார்த்தைகளில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. இந்தியாவை பொருத்தமட்டில், ஹனி சிங், லேடி காஷ், ஜாக்ஸ் ஈசன், இசையமைப்பாளர் தேவ் மேஜர் ஆகியோரின் ராப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

ராப் இசையை தவிர்த்து, வேறு என்ன முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்?

மருத்துவ சேவை, ராப் இசை வாழ்க்கை இவை இரண்டோடு என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடவில்லை. ஒரு சமூக அமைப்பின் துணையோடு, நீலகிரி மலைவாழ் மக்களுக்கு படிப்பறிவை வழங்கிவருகிறேன். மேலும் டீன் ஏஜ் பெண்களின் உடலில் இருக்கும், தழும்புகளை இலவசமாக குணப்படுத்தி வருகிறேன். தழும்பை காரணம் காட்டி, தடைபட்ட திருமணங்கள் நடைபெற, மருத்துவர் படிப்பை பயன்படுத்துகிறேன். இவற்றோடு, எதிர்காலத்தில் வனவிலங்குகளை பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட இருக்கிறேன்.

Next Story