தினம் ஒரு தகவல் : பஞ்சாமிர்தம்


தினம் ஒரு தகவல் : பஞ்சாமிர்தம்
x
தினத்தந்தி 6 Jun 2019 10:33 AM (Updated: 6 Jun 2019 10:33 AM)
t-max-icont-min-icon

இன்றைய உடல் சிக்கல்களை தீர்க்கவல்லது என போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தத்தை கூறலாம். இதனை வெறும் பூஜைப் பொருளாக பார்ப்பது முறையா?

வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவுமுறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு, தொடர்ச்சியான சளி, காய்ச்சல், தைராய்டு என பல உடல் சிக்கல்களை தோற்றுவிக்க அடிப்படை காரணம்.

மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இன்று கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் பொதுவானதாக ஆகிவிட்டது. இவற்றை மிக எளிமையாக கையாளும் வழிமுறையினை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினையும் நமக்கு அளித்துள்ளார். ஆம், மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் அது. பக்தி, உணவு என அனைத்தும் அன்று வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கவே இருந்தது என்பதற்கு பஞ்சாமிர்தம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றி கூறக் காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம்.

இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தம் பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். தேவை அதிகரித்ததற்கு ஈடாக மலை வாழை கிடைப்பதில்லை என்பதால் வேறு பழங்கள் வைத்து செய்யப்படுகின்றன. அதனால் 15 நாட்களில் இவை கெட்டு விடுகிறது. மேலும் தனது மருத்துவ குணங்களையும் இழந்து விடுகிறது. ஆனால் மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்குமாம். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.

தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப்பண்டங்கள், பானங்கள் இருந்தும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் உள்ளது. இது ஒன்றின் மூலமே அதன் சிறப்பை புரிந்துகொள்ள முடியும்.

Next Story