தினம் ஒரு தகவல் : கொழுப்புக் கட்டி
கொழுப்பு செல்களின் அதிகப்படியான வளர்ச்சியே கொழுப்புக் கட்டிகள். இந்தக் கட்டிகள் மென்மையாக உருண்டையாக, நகரக்கூடியதாக இருக்கும். கை விரலால் அழுத்தும்போது, நகர்வது போல தெரியும். வலி இருக்காது.
தசை மற்றும் தோலுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும். உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் வரலாம். பெரும்பாலும் கழுத்து, மேல் கை, தோள்கள், முதுகு, அடிவயிறு, தொடை, தலை, நெற்றி போன்ற இடங்களில் ஏற்படும். சிலருக்கு மூளை, சிறுநீரகம், மார்பகம் போன்ற உள் உறுப்புக்களில்கூட ஏற்படலாம். ஒரு கட்டிதான் வளரும் என்று இல்லை. பல கட்டிகள்கூட வரலாம்.
கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், உடல் பருமன், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாதது, மது அருந்துதல், மரபியல் ரீதியான காரணங்களால் இது ஏற்படலாம்.
இந்த வயதினருக்குதான் கொழுப்புக்கட்டி வரும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரும்பாலும் 25 முதல் 50 வயதில் இந்தக் கட்டிகள் ஏற்படலாம். கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாற வாய்ப்பு இல்லை.
எனினும் கட்டி வளர்கிறதா, வலி இருக்கிறதா, சருமத்தின் நிறம் மாறுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஒருமுறை கட்டி வந்துவிட்டதை அறிந்தால், அது கொழுப்புக் கட்டிதானா என உரிய பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு, டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.
கட்டி உள்ள பகுதியில் வலி, எரிச்சல், கட்டி மேல் தொற்று, துர்நாற்றம், கட்டியின் வளர்ச்சி அதிகரித்தல், தோற்றத்தைக் கெடுப்பது போன்ற காரணங்கள் இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். உடலுக்கு தொந்தரவு தராத ஒன்றை, தேவை இன்றி அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டாம். சிலருக்கு கட்டியை அகற்றினாலும் கூட மீண்டும் உருவாக வாய்ப்பு உண்டு. இது அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும்.
Related Tags :
Next Story