செவ்வாய் கிரக குடியேற்றத்தால் புதிய மனித இனம் தோன்றுமா?
சொர்க்க பூமியாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பூமி இன்று வேகமாக சுடுகாடாக மாறி வருகிறது. காரணம், மக்கள்தொகை பெருக்கம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற சுற்றுச்சூழல் கேடு மற்றும் உயிரழிவை ஏற்படுத்தும் ஆபத்தான கண்டுபிடிப்புகள்.
வேகமாக அழிந்துவரும் பூமியுடன் சேர்ந்து நாமும் அழிந்து விடக் கூடாது என்பதற்காக, செவ்வாய் போன்ற கிரகங்களில் மனிதர்களை குடியேற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அங்கு மனிதர்களை பாதுகாப்பாக கொண்டு சென்று, மீண்டும் பூமிக்குத் திருப்பிக் கூட்டிவரும் மறுபயனுறு ராக்கெட்டுகள் (reusable spacecrafts) உள்ளிட்ட பல நவீன விண்வெளி ஊர்திகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX ) நிறுவனம். இந்த நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் இலான் மஸ்க்.
வருகிற 2024-ம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதுதான் இலான் மஸ்கின் மிக முக்கியமான இலக்கு. இவர் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் நாசாவும், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை விரைவில் அனுப்பிவிட அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறது.
செவ்வாய்க்கு நம்மைக் கொண்டுசெல்லத் தேவையான அதி நவீன தொழில்நுட்பங்கள் நம் கையில் இருந்தாலும் கூட, “அங்கு சென்ற பின்னர், மனித உடலில் எந்தவிதமான மாற்றங்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படும்?” என்று யாருக்குமே தெரியாது.
ஆனால் இத்தகைய பல கேள்விகளை மனிதர்களாகிய நாம் கேட்டு அவற்றுக்கான விடைகளைக் கண்டறிந்தாக வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாமவியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன்.
ஏனெனில், செவ்வாய் கிரகம் போன்ற வேற்றுக்கிரகம் செல்லும் மனிதர்களின் உடலில் மரபணு மாற்றம் ஏற்படும் என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளுள் ஒன்றாகும்.
ஆனால் வேற்றுக்கிரகங்களுக்கு சென்றபின்னர் மனிதன் அங்கே பற்பல ஆண்டுகள் வசித்தால் அவனுடைய சந்ததிகளின் உடலில் என்னென்ன புதிய மாற்றங்கள் நிகழும் என்பது குறித்த ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்காட்.
செவ்வாய்க்கு செல்லும் முதல் மனிதர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற ஒரு சிறு பட்டியலையும் வெளியிட்டுள்ளார் ஸ்காட். அவை:
1. செவ்வாய்க்கு சென்ற பின்னர் சுமார் இரண்டு சந்ததிகளுக்கு பிறகு, மனிதனின் எலும்புகள் உறுதியாகும்.
2. கிட்டப்பார்வைக்கான கண்ணாடிகள் தேவைப்படும்.
3. மனித நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்துபோகும்.
4. கர்ப்பம் தரித்தல் மற்றும் குழந்தைப்பேறு மிக மிகக் கடினமாகும்.
5. பூமியில் உள்ளதை விட சுமார் 5000 மடங்கு அதிகமான கதிரியக்கம் காரணமாக பல மரபணு மாற்றங்கள் நிகழ்ந்து அதனால் புற்றுநோய் மனிதனைத் தாக்கும்.
இவ்வாறு நீள்கிறது அந்த பட்டியல்.
அது சரி, அவ்வளவுதானா இன்னும் வேறு பாதிப்புகள் ஏதும் உண்டா என்று கேட்டால், மிக மிக முக்கியமாக செவ்வாய் கிரக மனிதர்கள் பூமியில் உள்ள மனிதர்களுடன் இனப்பெருக்கம் செய்யக் கூடாது என்கிறார் ஸ்காட். ஏனெனில், செவ்வாய் கிரக மனிதர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தொடர்புகொண்டாலோ அல்லது இவர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டாலோ, விளைவு மரணமாகத்தான் இருக்கும் என்கிறார்.
காரணம், செவ்வாயில் தற்போது உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் கிடையாது. ஆனால் பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான பரிமாற்றம் கட்டுப்படுத்தப்பட்டால், உயிர்கொல்லி நோய்களை அழித்துவிடலாம்.
செவ்வாய்க்கு செல்வதால் ஏற்படும் மரபணு மாற்றங்கள் அனைத்துமே ஆபத்தானது என்று சொல்லிவிட முடியாது. மேலும் முக்கியமாக, பூமியில் பிறக்கும் ஒவ்வொரு புதிய குழந்தைக்கும் சுமார் 60 புதிய மரபணு மாற்றங்கள் தோன்றுகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் செவ்வாயில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுமார் ஆயிரக்கணக்கான மரபணு மாற்றங்கள் தோன்றும் என்கிறார் ஸ்காட்.
இதன்மூலம், செவ்வாயின் மிக ஆபத்தான சுற்றுச்சூழலில் வாழும் பல திறன்களை மனிதர்கள் பெற வாய்ப்புண்டு என்றும், உதாரணமாக, 1. கதிரியக்கத்தை தாங்கும் தோல், 2. குறைவான ஆக்சிஜனுடன் வாழும் திறன் மற்றும் கர்ப்பம் தரிப்பது காரணமாக இழக்கும் கால்சியத்தை ஈடு செய்யும் அளவுக்கு மிகவும் திடமான எலும்புகள் ஆகியவற்றைக் கூறலாம்.
செவ்வாய்க்கு சென்றதன் காரணமாக இயற்கையாக தோன்றும் மரபணு மாற்றங்களுடன் சேர்த்து, ‘கிறிஸ்பர்’ (CRISPR) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான மரபணு மாற்றங்களை மனிதர்களாகிய நாமே செயற்கையாகவும் உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார் பேராசிரியர் ஸ்காட்.
ஆக மொத்தத்தில், வாழத் தகுதியற்றுப் போகும் பூமியில் இருந்து விண்வெளியில் உள்ள வேற்றுக்கிரகங்கள் மற்றும் நிலவுகள் போன்ற பகுதிகளுக்கு மனித இனம் குடிபெயர்ந்துவிட்டால், முற்றிலும் வித்தியாசமான பற்பல மனித இனங்கள் தோன்றிவிடும் என்றும், அதனால் இனிவரும் நம் சந்ததிகள் யார் யார், அவர்கள் எப்படி இருப்பார்கள் மற்றும் அவர்களால் நமக்கு நன்மையா தீமையா என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் ஸ்காட் சாலமன்.
Related Tags :
Next Story