‘குளுகுளு’ இமாசலில் வெற்றி யாருக்கு?


‘குளுகுளு’ இமாசலில் வெற்றி யாருக்கு?
x
தினத்தந்தி 16 May 2019 10:53 AM IST (Updated: 16 May 2019 12:34 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயில் இங்கே வறுத்தெடுக்கிறது. இமாசலில் இப்படி இல்லை.

இமாசல் என்று செல்லமாய் அழைக்கப்படுகிற இமாசல பிரதேசம், இமயமலை மாநிலம். இமயமலையின் மேற்கு பகுதியில் அமைந்திருப்பதால் கோடி அழகு கொட்டிக்கிடக்கிறது. மலையும், மலை சார்ந்த பகுதிகளும் இந்த மாநிலத்தின் ஸ்பெஷல். பருவ நிலையை கேட்கவா வேண்டும்? எப்போதுமே குளுகுளுதான்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அங்கு அரசியல் களத்தில் அனல் தகிக்கிறது. அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் காட்சிகளில் அனல் காற்று சூடாக வீசுகிறது.

நான்கே தொகுதிகள்

இந்த மாநிலத்தில் மண்டி, ஹமிர்பூர், சிம்லா, காங்கரா என நான்கே நாடாளுமன்ற தொகுதிகள்தான். நான்கு தொகுதிகளிலும் ஒரே கட்டமாக 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

2014-ல் நடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலை திரும்பிப் பார்த்தால்-

மண்டியில் ராம் சுவரூப் வர்மா...
ஹமிர்பூரில் அனுராக் தாக்குர்...
சிம்லாவில் வீரேந்தர் காஷ்யப்...
காங்கராவில் சாந்தகுமார்...

நான்கு தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆக 100-க்கு 100 வெற்றி.

இம்முறை வசப்படுமா?

இந்த முறையும் அந்த 100-க்கு 100 வெற்றியை தக்க வைத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும்.

காங்கிரஸ் கட்சியும் விடுவதாக இல்லை. கடந்த முறை உங்களுக்கு, இந்த முறை எங்களுக்கு என்று சொல்லிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இமாசல பிரதேச நாடாளுமன்ற தேர்தலில் இரு முனை போட்டி. பாரதீய ஜனதாவா, காங்கிரசா? இந்த நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இரண்டு கட்சிகளிலுமே 2 முக்கிய பெரும்புள்ளிகள் இல்லை.

ஒருவர், அந்த மாநிலத்தை 9 முறை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங். மற்றொருவர் 2 முறை ஆண்ட பாரதீய ஜனதா கட்சித்தலைவர் பிரேம் குமார் துமால்.

உள்குத்து

மத்தியிலும், மாநிலத்திலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இமாசலபிரதேசம் நாடாளுமன்ற தேர்தலை முதல்முதலாக சந்திக்கிறது. இதில் வெற்றியை நழுவ விட்டால் அது பாரதீய ஜனதா கட்சிக்கு கவுரவ பிரச்சினை ஆகிவிடும்.

அதே நேரத்தில் மத்திலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள எதிர்ப்பு அலைகளை சாதகமாக்கி வெற்றி பெறாவிட்டால் காங்கிரஸ் நிலை பரிதாபம் என்றாகி விடும்.

ஒரு வேடிக்கை, இரு கட்சிகளிலுமே உள்குத்துகளுக்கு பஞ்சமில்லை என்கிறார்கள் இமாசலில் உள்ளவர்கள். இரு கட்சி மேலிடங்களும் இந்த உள்குத்தை எப்படி எதிர்கொள்கின்றன என்பது 23-ந்தேதி முடிவு வருகிறபோது வெளிச்சத்துக்கு வரும்.

மண்டி

இமாசலில் உள்ள 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அனைவரின் கவனத்தையும் ஒரு சேர ஈர்ப்பது மண்டி தொகுதி ஆகும்.

இங்கு 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. வென்றவர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங். 2009 தேர்தலில் வெற்றி பெற்றவர் வீர பத்ரசிங். 2013-ல் வந்த இடைத்தேர்தலில் மீண்டும் பிரதீபா சிங் வென்றார். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொகுதி பாரதீய ஜனதாவுக்கு கைமாறியது. அந்தக் கட்சியின் ராம் சுவரூப் சர்மா வெற்றி பெற்றார். பிரதீபா சிங் தோல்வியைத் தழுவினாலும் ஓட்டு வித்தியாசம் வெறும் 40 ஆயிரம்தான்.

இந்த முறை மண்டியில் பாரதீய ஜனதா கட்சி கடந்த முறை களம் இறக்கிய ராம் சுவரூப் சர்மாவையே நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி, முன்னாள் மத்திய மந்திரி சுக்ராமின் பேரன் ஆஷ்ரே சர்மாவை நிறுத்தி உள்ளது. அவரை ஆதரித்து வீரபத்ர சிங் தீவிர பிரசாரம் செய்கிறார். ஆனால், அவர் ஆஷ்ரே சர்மாவை மேடையில் வைத்துக்கொண்டு, சுக்ராமின் சந்தர்ப்பவாத அரசியலை ஒரு பிடி பிடித்து சர்ச்சையை உண்டாக்கினார். இப்படி போகிறது காங்கிரஸ் பிரசாரம். ராம் சுவரூப் சர்மாவை ஆதரித்து பிரதமர் மோடியே தீவிர பிரசாரம் செய்தார். இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேரஜ் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்தான் மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர். ஆக, இந்த தேர்தல் அவருக்கு அமிலப்பரிசோதனையாக அமைந்து இருக்கிறது. முழு அரசு எந்திரத்தையும் தொகுதியில் கொண்டு வந்து இறக்கி இருக்கிறார் அவர் என சொல்லப்படுகிறது.

ஹமிர்பூர்

அடுத்து ஹமிர்பூர் தொகுதியை சொல்ல வேண்டும். 2004 தேர்தலில் பாரதீய ஜனதா வென்றது. 2007-ல் நடந்த இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சியே வெற்றி பெற்றது.

2008-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல், 2009-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல், 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் என இவை அத்தனையிலும் வெற்றி பெற்றவர் பாரதீய ஜனதா கட்சி சார்பில் களம் கண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்குர். இம்முறையும் பாரதீய ஜனதா கட்சி அவரையே நிறுத்தி உள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராம்லால் தாக்குர் போட்டியிடுகிறார்.

அனுராக் தாக்குர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெறத்துடிக்கிறார். அவர் வென்றால்தான் மாநில அரசியலில் அவரது தந்தையும் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான பிரேம் குமார் துமால் நீடிக்க முடியும் என்ற நிலை. சுருக்கமாக சொன்னால் வாழ்வா, சாவா? காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என இரு கட்சிகளும் தீவிர போட்டியில் உள்ளன.

இந்த தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் அனுராக் தாக்குருக்கும், அந்தக் கட்சியின் மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம். இது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

சிம்லா

சிம்லா தொகுதி தனித்தொகுதி. இங்கு ஹாட்ரிக் வெற்றி பெற கனவு வளர்க்கிறது பாரதீய ஜனதா கட்சி.

இங்கு 2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து இரு முறை பாரதீய ஜனதா கட்சியின் வீரேந்தர் காஷ்யப் அபார வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை அவருக்கு கட்சி வாய்ப்பு தரவில்லை. இப்போது அங்கு சுரேஷ் காஷ்யப்பை பாரதீய ஜனதா கட்சி நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி, தனிராம் சாண்டிலை வேட்பாளர் ஆக்கி இருக்கிறது.

இரு வேட்பாளர்களும் கோலி சமூகத்தினர். இருவரும் பாதுகாப்பு படைகளில் பணியாற்றியவர்கள். போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது.

காங்கரா

கடைசியாக காங்கரா தொகுதி... இது நட்சத்திர தொகுதி ஆகி இருக்கிறது.

இந்த தொகுதியிலும் ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்பதுதான் பாரதீய ஜனதா கட்சியின் விருப்பம். 2004 நாடாளுமன்ற தேர்தலில் இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2009, 2014 தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிக்கொடி நாட்டியது. 2009-ல் ராஜன் சுஷாந்தும், 2014-ல் முன்னாள் முதல்-மந்திரி சாந்தகுமாரும் வென்றனர்.

இந்த முறை சாந்தகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, மாநில உணவுத்துறை மந்திரி கிஷன் கபூரை நிறுத்தி உள்ளது, பாரதீய ஜனதா கட்சி. எனவே இது நட்சத்திர தொகுதி ஆகி இருக்கிறது. காங்கிரஸ் இருமுறை எம்.எல்.ஏ. பதவி வகித்த பவன் காஜலுக்கு வாய்ப்பு தந்துள்ளது. இருவரும் வெற்றிபெற கடுமையாக போராடுகிறார்கள்.

தேர்தல் பிரச்சினை என்ன?

பொதுவாக மாநில அரசியலில் ராஜபுத்திரர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மக்கள் தொகையில் 4-ல் 1 பங்கை விட சற்றே அதிகமாக தாழ்த்தப்பட்ட இனத்தவர் வசிக்கின்றனர்.

பழங்கள், காய்கறி உற்பத்தி பட்டையை கிளப்புகிறது. ஆனால் தண்ணீர் பிரச்சினை வாட்டி வதைக்கிறது. வேலை இல்லா திண்டாட்டமும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வேலை வாய்ப்பு தேடி எல்லோரும் சிம்லாவுக்கும், தர்மசாலாவுக்கும் போகிற நிலை உள்ளது.

சுற்றுலா துறையும் இந்த மாநில வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரதீய ஜனதா கட்சி மீண்டும் 100 சதவீத வெற்றியை பெறுமா அல்லது அந்த வெற்றியை காங்கிரசுடன் பங்கு போட வேண்டியது வருமா என்பது 23-ந்தேதி தெரியும்.


Next Story