நிறம் மாறும் தமிழகம்...!
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு கற்பிக்கப்பட்ட இலக்கிய வழி அறிவுரை. ஆயினும், இன்றைய நவீன நெருக்கடியில் உலகம் அவ்வாறுதான் இயங்குகிறதா? என்றால், இல்லை என்பதே உண்மையான பதில்.
உயிர் வாழ்தல் பொருட்டு, நாடு இழந்து, துரத்தப்பட்ட அகதிகளாய் அன்னிய மண்ணில் வேரோடு முன்னேறிக்கொண்டு, அங்கேயே நிலைத்து வாழ முயற்சிக்கும் மனிதக் கூட்டம் ஒருபுறம். நாடுகளுக்குள்ளேயே நகர்ந்து நகர்ந்து, செழிப்பின் சுவை உணர்ந்து வந்து அமர்ந்த இடத்தில் வளமாய் வேர் கொள்வது மறுபுறம். அப்படித்தான், இந்தத் தமிழகம் தனது சுயம் துறந்து சொந்த மண்ணிலேயே வேற்றுக்கிரக மனிதர்கள் போல் அலையும் அவமானத்தை சமீப காலமாய் பார்க்க நேருகிறது.
வருகிறார்கள்... வருகிறார்கள்... ஒவ்வொரு ரெயில் வண்டியில் இருந்தும் 200 அல்லது 300 பேர் என்று படி இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். வந்தவர் யாரும் திரும்புவது போல் தெரியவில்லை. நாம் இதைக் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு. ஆனால் இன்றைக்கு உலக நியதியே வேறு மாதிரி ஆகிவிட்டது. மெக்சிகோ மக்களை வெளியேற்ற டொனால்டு டிரம்ப் எல்லை முழுக்க வேலி வேண்டும் என்கிறார். ஸ்பெயின் தேசத்திலிருந்து எங்களை பிரித்துவிடுங்கள் என்று கேட்டலோனியா கதறுகிறது. உலக அமைதிக்கென நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூயி தலைமையிலான ஆட்சி நடத்தும் அரசு, பவுத்தம் பயிலாத ரோகிங்யா இஸ்லாமிய இனத்தைப் பூண்டோடு அறுக்க முயன்றும் மவுனம் காக்கிறது அமைதிப் புறா. இப்படி, சகிப்புத்தன்மை என்பதே அற்றுப்போன உலகில் யாதும் ஊரே... யாவரும் கேளிர்... எத்தனை சதவீதம் சாத்தியம்? ஏதோ சாலையில் பயணிக்கும்போது நிறுத்தத்தில் விளக்கு மாறும் கணத்திற்காக காத்திருக்கிறோம். முன்னால் நிற்கும் வாகனத்தின் கதவைத் திறந்து, சற்றும் கூச்சமற்று நடுசாலையில் புளிச்சென்று காவி எச்சிலைத் துப்பிவிட்டுக் கதவை மூடிக்கொள்கிறார் ஒருவர்.
மும்பை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொன்னது... “சாலையில் பான்பராக் எச்சிலைத் துப்புவது என்பது இந்தியர்களோடு ஊறிப்போன கலாசாரம்” இருபது வருடங்களில் முன்பே எழுதிப் பார்த்தேன் “தாம்பூலம் தரிக்கும் தார்ச்சாலைகள்.... மார்வாடி வருகை” என்று. ஆனால் இன்று எங்கும், எங்கெங்கும் உமிழப்பட்ட எச்சிலின் நிறம் கடந்தே போக வேண்டியுள்ளது. தினமும் குடிக்கவும், திரைப்பட நடிகர்கள் பின்னால் அலையவும், எந்த வேலையும் செய்யமாட்டேன் என்று சோம்பிக் கிடக்கும் கூட்டத்தின் நடுவே, ‘தட்டுக் கழுவ வந்தார்கள்... மேஜை துடைக்க வந்தார்கள்... கம்பி வளைக்க வந்தார்கள்... கட்டிடம் கட்ட வந்தார்கள்... முடிவெட்ட வந்தார்கள்... மரவேலை செய்ய வந்தார்கள்... வண்டி துடைக்க வந்தார்கள்’ இப்படி வந்தவர்கள் வந்தவர்கள்தான். ஒருவரும் திரும்பவில்லை. பக்கத்து கேரளாவில் படித்தவன் கூட 53 டிகிரி வெயிலில் ஒட்டகம் மேய்க்கவும் தயார், உள்ளூர் வேண்டாம் என்றான் விளைவு இன்று வெளியே போன மலையாளிகளை விடவும் உள்ளே வந்த அன்னியர் அதிகம் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
ஒரு இனம் தூங்க, மறு இனம் வேரடி மண்ணோடு நிலம் பதிய முதலில் காணாமல் போவது கலாசாரம். உலகமயமாக்கல் என்ற ஒற்றைச் சொல்லின்கீழ் நாம் யோசிப்பது, சற்று கற்காலச் சிந்தனை போன்று தோன்றலாம். ஆனால் அறிவியல், தொழில், எந்திரம் என அனைத்திலும் உச்சம் தொட்ட வீட்டோ அதிகாரம் கொண்ட உலக நாடுகளே இன்று தனது மண் நிறம் மாறுவதை விரும்புவதில்லை எனும்போது நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
எந்த வேலையும் செய்யமாட்டேன், இன்னும் வேண்டுமென்று அலையும் கூட்டத்தின் நடுவே கொஞ்சம் கொஞ்சமாகவே மெல்ல மெல்ல இடுக்கின் வழியே, இட்லியும், தோசையும் இறுதி ஊர்வலத்தில் நிற்க... பானிபூரியும், பேல்பூரியும் பெட்டிக்கடையின் வழியே பிரசவம் ஆகின்றன.
இரண்டு ரூபாய் வெற்றிலை, ஐம்பது காசு கொட்டைப்பாக்கு, கொஞ்சம் சுண்ணாம்பு தடவிக் கொடுத்த தாம்பூலமும் இல்லை, தாம்பூலத் தட்டுமில்லை. மாறாக மடித்துக் கொடுக்கும் பான்பராக்கையோ, பீடாவையோ, ஐம்பது ரூபாய் கொடுத்து அடிவாயில் அடக்கிக்கொள்ளத் தயாராகிவிட்டோம். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனா வளரும் நிலையில், பால்தாக்கரே தென்புறங்களிலிருந்து மும்பை சென்ற ரெயில்களுக்கு வைத்த பெயர் வேட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்டெனோகிராபர் எக்ஸ்பிரஸ். அதாவது வேட்டி கட்டியவனும், சுருக்கெழுத்து கற்றவனும் வந்து இறங்கிவிட்டான் என்ற பொருள் அதற்கு. இன்று சென்னை வரும் ரெயில்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்.
இது ஏதோ வர்க்க சிந்தனை போலத் தோன்றலாம். ஆனால் எதார்த்தம் இதுதான். பரந்துபட்ட இந்தியாவில், பல்வேறு மொழிகள், வழிபாடு, கலாசாரம் என்பவை பேணப்பட்டால்தான் அது ஒற்றுமையான வலிமையான இந்தியா என்ற அடைப்புக்குறிக்குள் அடங்கும்.
இங்கே நடக்கும் அரசியல் சண்டைகள், இனப் பகை, மொழிப் பகை எல்லா இடத்திலும் உண்டு. வங்கதேசத்திலிருந்து வந்துவிட்டார்கள் என்று அசாம் அழலாம். பீகாரிகளால் மும்பை சீரழிகிறது என்று தாக்கரேக்கள் அழலாம். ஆனால் இங்கே மட்டும் நடப்பதறியாது. நான் உண்டு, என் பொழுதுபோக்கு உண்டு என்று எந்த வேலையும் செய்யாமல் உறங்கும் பொழுதினூடே ஒவ்வொரு மூச்சுக் காற்றின் இடைவெளியிலும் ஒருநூறு வேலைகள் பறிபோனபடியே இருக்கும். கண்மூடித்தூங்கும் காலம் போய் விழித்துக்கொண்டே தூங்கும் தமிழினத்தின் உறக்கம் கலையாவிட்டால் தமிழகத்தின் நிறம் நிரந்தரமாகவே மாறிவிடும்.
- வே.பாலு, வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.
Related Tags :
Next Story