சரிவில் இருந்து மீண்ட சாதனை நாயகி
உலக மல்யுத்த அமைப்பில் தனி முத்திரை பதித்தவர். தெற்காசிய போட்டியில் 75 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்.
- கவிதா தேவி
உலக மல்யுத்த அமைப்பில் தனி முத்திரை பதித்தவர். தெற்காசிய போட்டியில் 75 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர். மல்யுத்தம் ஆபத்தான விளையாட்டு. காயம் அடையும் சூழ்நிலை அதிகம் என்பதால், இந்த விளையாட்டில் ஈடுபட பெண்கள் அதிக ஆர்வம்காட்டுவதில்லை. அப்படிப்பட்ட விளையாட்டில் ‘சி.டபிள்யூ.ஈ’ எனப்படும் ‘காண்டினென்டல் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்’ போட்டி முதல், அமெரிக்காவின் ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ’ (வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்) வரையுள்ள போட்டிகளில் பங்குபெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமைக்கும் கவிதாதேவி சொந்தக்காரராகியிருக்கிறார்.
ஆனால் இவரது வெற்றிப்பயணம் மலர் பாதை போன்று அமையவில்லை. ஏகப்பட்ட இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒருமுறை போதைப்பொருள் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுடன் போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். பின்பு ஒருமுறை குடும்பப் பிரச்சினை காரணமாக இவரது அம்மா, அப்பா, சகோதரர்கள் சிறை செல்லும் நிலை ஏற்பட்டது. அவைகளை எல்லாம் கெட்டகனவாக நினைத்து மறந்து, தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி மங்கையாக வலம் வந்துகொண்டிருக்கிறார், கவிதா தேவி. அவரை பற்றிய முக்கியமான குறிப்புகள்!
பிறப்பு
அரியானா மாநிலத்தில் மாளவி என்ற கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அரியானா பெண் சிசுக்கொலைக்கு பெயர்பெற்ற மாநிலம். அங்கு பெண் குழந்தைகள் பிறந்தாலே, அவை வீட்டிற்கு செலவுவைக்கும் என்று கருதுவார்கள். ஆடு, மாட்டைவிட மதிப்பு குறைந்ததாக பெண்களை கருதும் மாநிலத்தில் பிறந்த கவிதாதேவி இப்போது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கிறார்.
அங்கீகாரம்
வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் அமைப்பின் தேர்வுக்குழு அமெரிக்காவி லிருந்து இந்தியா வந்துள்ளது. தகுதியான, ஆர்வமுள்ள வீரர்களை தேர்வு செய்யும் அந்த குழுவில் கவிதாதேவியும் இடம்பெற்றிருக் கிறார். அவருடன் இரண்டு அமெரிக்கர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள். ‘‘இந்த குழு முன்னால் தங்கள் திறமையைகாட்டுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் திரண்டு வருகிறார்கள். திறமைமிக்க அந்த கூட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களை டபிள்யூ.டபிள்யூ.ஈ. வரை வழிகாட்டி எளிதாக அழைத்துச் செல்வது என் கடமை’’ என்கிறார்.
கல்வி
கவிதாதேவி பள்ளியில் படிக்கும்போதே பளுதூக்கும் பயிற்சி பெற்றார். கல்லூரி படிப்பை லக்னோவில் முடித்தார். குடும்பத்தினர் இவரது வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் பெரிய அண்ணன் சஞ்சய் தலால் இவருக்கு மிகுந்த ஊக்கம்கொடுத்தார்.
குடும்பத்தில் நடந்த விபரீதங்கள்
சமூகத்தில் அன்றிருந்த அவநம்பிக்கைகள் அவரை விடாமல் துரத்தின. அப்போது விதியும் சில நேரங்களில் அவருக்கு எதிராக செயல்பட்டது. ஜப்பானில் நடந்த ‘ஆசிய சாம்பியன்ஷிப்’ மல்யுத்த போட்டியில் பங்கேற்க கவிதாதேவி சென்றிருந்தார். அங்கே நடந்த ஊக்கமருந்து பரிசோதனையில் பிடிபட்டார். அதனால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. மனமுடைந்து போனார். அதோடு மட்டுமல்லாமல் நான்கு ஆண்டுகளுக்கு அவர் எந்தப் போட்டியிலும் பங்குகொள்ளக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. மன உளைச்சலுக்கு உள்ளானார். இந்த நிலையில் 2009-ம் ஆண்டு கவுரவ் தோமர் என்பவரை கவிதா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு அபிஷித் என்ற மகன் உள்ளான்.
2010-ம் ஆண்டு அடுத்தடுத்து அவர் வாழ்க்கையில் அடிவிழுந்தது. அவருக்கு பக்க பலமாக இருந்த அண்ணன் வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீதம் கவிதாவை மேலும் நிலை குலையச் செய்தது. அவருடைய அண்ணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதனால் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே சிறைக்கு சென்றனர்.
குடும்பமே சிறைக்கு சென்றதும், கவிதாவுக்கு மாமியார் குடும்பத்தில் மரியாதை குறைந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட விபரீதத்தை காரணம்காட்டி மாமியார் வீட்டில் தாறுமாறாக பேசினார்கள். இதனால் மன முடைந்த கவிதா விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். எப்படியோ கணவரால் காப்பாற்றப்பட்டார்.
அதிரடி சரவெடி
சிறிது காலத்திற்கு பிறகு கவிதாவின் விளையாட்டு வாழ்க்கையை மீண்டும் துளிர்விடவைக்கும் முயற்சியில் அவரது அண்ணனும், கணவரும் ஈடுபட்டார்கள். அப்போது நடந்த ‘காண்டினென்டல் மல்யுத்த’ போட்டியை காண்பதற்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு காட்சிப்போட்டி ஒன்று நடந்தது. அதில் களமிறங்கிய வீராங்கனை ஒருவர் வழக்கம்போல் கூட்டத்தை பார்த்து ஆவேசமாக, ‘யாருக்காவது தைரியம் இருந்தால் என்னுடன் மோதிப்பாருங்கள்’ என்று ஆவேசமாக சவால்விட்டார்.
கூட்டத்தில் இருந்த பலரும் அந்த மல்யுத்த வீராங் கனையை பார்த்து மிரள, கவிதா எழுந்து, அந்த சவாலை ஏற்று கைகளை உயர்த்தினார். பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மேடைக்கு சென்றார். அப்போது அவர் ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்திருந்தார். குஸ்திக்கான பாதுகாப்பு உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. ஆனாலும் அதிரடியாக விளையாடி, அந்த வீராங்கனையை பந்தாடிவிட்டார். போட்டியை நடத்திய அமைப்பினர் பாராட்டினார்கள். அந்த அமைப்பிலும் கவிதா சேர்த்துக்கொள்ளப்பட்டார். அப்போது காளி என்பவர் கவிதாவுக்கு பலவிதங்களில் வழிகாட்டினார்.
அந்த அதிரடி சரவெடி போட்டியில் கிடைத்த வெற்றி கவிதாவை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றது. அவரது திறமையில் வியந்த உலக மல்யுத்த அமைப்பினர் தங்கள் அமைப்பில் சேர்ந்து பயிற்சிபெற அழைத்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட கவிதா இப்பொழுது அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள உலக மல்யுத்த அமைப்பில் இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்.
‘எதிரி உங்களை கடுமையாகத் தாக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?’ என்று கவிதாவிடம் கேட்டபோது, “என் மகன் அபிஷித் ஒரு வினாடி கண் முன் வந்து போவான். உடனே அவனுக்காக நான் உயிர் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் வந்துவிடும். எதிரியை மின்னல்வேகத்தில் தாக்கத்தொடங்கிவிடுவேன். வெற்றி வசப்பட்டுவிடும்” என்கிறார்.
நினைத்ததை முடிப்பவர்
“சிறுவயதிலே கவிதாதேவி தன்னம்பிக்கை நிறைந்தவளாக காணப்பட்டாள். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்துக்காட்டிவிடுவாள். எனக்கு அவள் மீது நிறைய நம்பிக்கை இருந்தது. ஆரம்பகாலத்தில் அவளுக்காக நிறைய பணம்செலவழித்தேன். இதனால் எனக்கும், என் மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
பளு தூக்குபவர்களுக்கு உணவில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு தரப்படும் உணவு வகைகள் முற்றிலும் வேறானவை. கவிதா பளுதூக்கும் பயிற்சி பெற்றபோது அவளுக்கு உணவில் தனிகவனம் செலுத்தினேன். அவளுக்கு நிறைய செலவானது. அவளை உருவாக்க பெரும்முயற்சி எடுத்துக்கொண்டேன். அப்போது யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதே நேரத்தில் எங்கள் முயற்சிகளுக்கு தடைபோடும் விதத்தில் செயல்பட்டார்கள். ‘உன் தங்கை விரைவில் திருமணமாகி இன்னொருவர் வீட்டிற்கு போய்விடுவாள். அவளால் உனக்கு எந்த பலனும் இருக்காது. அப்படியிருக்கையில் அவளுக்காக நீ ஏன் தேவையில்லாமல் பணம் செலவு செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஊரில் உள்ளவர்கள் நேரடியாகவே என்னிடம் கேட்டார்கள். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், என் மனைவியையும் எனக்கு எதிராக தூண்டிவிட்டார்கள். அதே நேரத்தில் கவிதா பங்கு பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாள். அது எனக்கு உற்சாகத்தை அளித்தது. 2008-ல் விளையாட்டுக்கான இடஒதுக்கீட்டில் அவளுக்கு கான்ஸ்டபிள் வேலையும் கிடைத்தது” என்று சகோதரர் சஞ்சய் தலால் சொல்கிறார்.
Related Tags :
Next Story