காதல் பெருக்கெடுக்கும் ‘காதல் ஏரி’
துபாய் நகரில் ஒரு ஏரியே காதல் சின்னமாக மாறியிருப்பது வியப்பளிக்கிறது.
காதல் சின்னமாக விளங்கும் கட்டிடங்கள் மற்றும் நினைவு சின்னங்களை பார்த்திருப்போம். ஆனால் துபாய் நகரில் ஒரு ஏரியே காதல் சின்னமாக மாறியிருப்பது வியப்பளிக்கிறது.
துபாய் ஒரு பாலைவன நிலத்தால் சூழப்பட்ட பகுதி என்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால் அங்குள்ள பாலைவன பகுதிகளில் சில பகுதிகள் மிக அழகாக காட்சியளிகிறது. அப்படிப்பட்ட அழகிய பாலைவனங்களில் ஒன்றுதான் மர்மூம் பாலைவனம். அதில் அல் குத்ரா என்னும் பகுதியில்தான் இந்த ‘லவ் லேக்’ எனப்படும் காதல் ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.
பாலைவனத்தில் ஏரி என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி. இந்த ஏரியை விமானத்தில் இருந்து பார்த்தால் இதய வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளதை காணமுடியும். இதுமட்டுமல்ல, இந்த ஏரி பகுதியில் பயன் படுத்தப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களுமே இதய வடிவில்தான் காட்சியளிக்கின்றன.
அழகிய இதய வடிவங்களான பெஞ்சுகள் மற்றும் பிரேம்கள், கைப்பிடி மரக்கட்டைகள், வரவேற்பு பலகைகள், காதல் ஜோடிகள் நின்று படம் எடுக்கும் பகுதிகள் என எல்லா இடங்களையும் காதல் சின்னமான இதய வடிவத்தால் அலங்கரித்துள்ளனர்.
செல்போன்களையும், கணினி களையும் காதலிப்பவர்கள், மனை வியையும் காதலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த காதல் ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.
இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றாலும் தற்போது மிக இயற்கையானதாக மாறிவிட்டது. அதனால்தான் பாலைவன பரப்பில் மரங்கள், பூச்செடிகள், புல்வெளிகள் என அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கின்றன.
இந்த காதல் ஏரியில் சுமார் 200 வகையான பறவையினங்கள் வசித்து வருகின்றன. அதனால் காதல் ஜோடிகளுக்கு மட்டுமின்றி, பறவை ஆர்வலர்களுக்கு இது காதல் ஏரியாக மாறியிருக்கிறது. அதேசமயம் இங்கு அரேபியா ஓரிக்ஸ் மான்களையும் கண்டு ரசிக்கலாம். அங்கு வசிக்கும் பறவைகள் பார்வையாளர்களுடன் நட்பாக பழகுகின்றன.
‘‘காதலர்கள், தம்பதிகளுக்கு இந்த காதல் ஏரி இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் இந்த பகுதிக்கு யாரும் தனி ஒருவராக வருவதில்லை. இணையதளத்தை ஒரு நாள் அணைத்து வைத்துவிட்டு மனதிற்கு பிடித்தமானவர்களிடம் நேரம் கழிக்க இங்கு வருகிறார்கள். அதேசமயம் காதல் ஏரியை சுற்றியிருக்கும் பறவைகள் மற்றும் உயிரினங்கள், பார்வையாளர்களுடன் காதலுடன் நடந்து கொள்கிறது’’ என்கிறார்கள், காதல் ஏரியை ரசித்தவர்கள்.
- மர்யம்.சா
Related Tags :
Next Story