‘சினூக்’ ஹெலிகாப்டரின் சிறப்புகள்


‘சினூக்’ ஹெலிகாப்டரின் சிறப்புகள்
x
தினத்தந்தி 6 April 2019 8:30 AM (Updated: 6 April 2019 8:33 AM)
t-max-icont-min-icon

அமெரிக்க தயாரிப்பான ‘சினூக்’ ஹெலிகாப்டர், சமீபத்தில் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.

‘ஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் படைத்தது’ என்று சினூக் ஹெலிகாப்டர் பற்றி இந்திய விமானப் படை பெருமையுடன் கூறுகிறது.

‘‘இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகிறது. பலவிதமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவில் செங்குத்தாக மேலே எழும்பும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன’’ என்கிறார், விமானப் படை தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா.

‘‘சினூக் ஹெலிகாப்டர், இந்திய விமானப் படை பல்வேறு ராணுவச் சரக்குகளை மிகவும் உயரமான இடங்களுக்கு சுமந்து செல்ல உதவும். இது, பீரங்கி துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை மட்டும் சுமந்து செல்ல பயன்படப் போவதில்லை. மாறாக, இந்த ஹெலிகாப்டர் மூலமாக மனிதநேய உதவி களையும் மேற்கொள்ள முடியும். குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் பேரழிவை எதிர்கொள்பவர்களைக் காப்பாற்ற உதவும்’’ என்று தனோவா கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் வேளையில் இந்திய விமானப் படையில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைந்துள்ளன.

இந்திய அரசு 2015 செப்டம்பரில் ரூ. 8 ஆயிரத்து 48 கோடி மதிப்பில் போயிங் நிறுவனத்திடம் இருந்து 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை கொள் முதல் செய்ய கையெழுத்திட்டிருந்தது. இதில் 4 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. இவை சமீபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு மற்ற ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பிரத்யேக உத்தியுடன் சாலை அமைப்பது மற்றும் எல்லையில் பிற பணிகளுக்கு இந்த ரக ஹெலிகாப்டர்கள் வலுச் சேர்க்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மற்ற ஹெலிகாப்டர்களுக்கும் இதற்கும் உள்ள பிரதான வித்தியாசம், இந்த ஹெலிகாப்டர்கள் அதிக கனரக ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும். ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சுழலிகள் இருக்கும் என அமெரிக்காவில் பயிற்சி பெற்ற சினூக் விமானியாக ஆஷிஷ் கலாவத் கூறுகிறார்.

‘‘நாங்கள் பொதுவாக ஒற்றைச் சுழலி ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தோம். ஆனால் இதில் இரு என்ஜின்கள் உள்ளது புதிய அம்சமாக உள்ளது’’ என நான்கு வார பயிற்சிக்குப் பிறகு திரும்பியுள்ள ஆஷிஷ் கலாவத் கூறுகிறார்.

கடுமையான நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படும். இவை அனைத்துவகையான கால நிலையையும் சமாளித்து இயங்கும். இதன் மூலம் உலகில் மிகவும் கடும் மோதல் உள்ள மலைப்பகுதியில் இயங்க இந்திய விமானப் படைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறது, பாதுகாப்புத் துறை வட்டாரம்.

இந்த ஹெலிகாப்டர்கள் மூலமாக மிகவும் விரைவாக படை வீரர்களை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். குறிப்பாக கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதிக்கு பீரங்கிகளுடன் வீரர்களைக் கொண்டு செல்ல உதவும். சிறிய இறங்குதளங்களிலும் சினூக் ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியும். மேலும், குறுகலான பள்ளத்தாக்குகளிலும் தரையிறங்கும் தன்மை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

ஒரு சினூக் ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 11 டன் எடையுள்ள ராணுவ சரக்குகளையும், 54 வீரர் களையும் சுமந்து செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டர் ஏற்கனவே 19 நாட்டு படையினரால் பயன்படுத்தப்படுகிறது.

சினூக் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையின் சிறகுகளை வலிமைப்படுத்தியுள்ளன என்று உறுதியாகக் கூறிவிடலாம். 

Next Story