தினம் ஒரு தகவல் : ஈசல் ஒருநாள் மட்டும் தான் வாழுமா..!
கரையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல். கரையான் புற்றில் இருந்து ஈசல்கள் வெளிப்படுவதை பார்த்திருக்கலாம். இவை ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தை சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
கரையான், கூட்டமாக வாழும் சமுதாய பூச்சி வகையை சேர்ந்தது. ஒரு புற்றில் ஆயிரம் முதல் 5 லட்சம் கரையான்கள்கூட இருக்கலாம்.
தேனீக்களில் உள்ளது போலவே கரையான்களிலும் ராணி, ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று 4 வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றவை ராணி கரையான்கள். 4 வகை கரையான்களுக்கும் இதுவே தாய். ராணியை கர்ப்பமடைய செய்வதே ஆண் கரையான்களின் வேலை. புற்றை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியை சிப்பாய் கரையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற வேலைகளை வேலைக்கார கரையான்களும் செய்கின்றன.
ஒரே புற்றில் கரையான்கள் கட்டுக்கடங்காமல் பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகருகில் வேறு புற்றுகளை தோற்றுவித்தாலும், உணவு போட்டி ஏற்பட்டுவிடும். இதை தவிர்ப்பதற்காக ராணி கரையான்கள் சில சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அதில் இருந்து வெளிவருபவைதான் ஈசல்கள். இலவம் பஞ்சு மரமும், எருக்கஞ்செடியும் பஞ்சைப் பறக்கவிட்டு, தங்கள் விதைகளை பரப்புவதற்கு ஒப்பானதுதான் ஈசல் பறப்பதும்.
ராணி ஈசல் இடுகிற முட்டையில் இருந்து வெளியே வந்த ஈசல் குஞ்சுகள் வெள்ளை நிறத்தில், நான்கு இறக்கைகளுடன் காணப்படும். அவற்றுக்கு வேலைக்கார கரையான்கள்தான் உணவு கொடுத்து பராமரிக்கின்றன. வளர்ந்ததும், ஈசல்கள் புற்றில் இருந்து வெளியேற தயாராக இருக்கும். மழைக்காலம் தொடங்கியதும், ஈசல்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியேறும். ஈசல்களுக்கு 4 இறக்கைகள் இருந்தாலும்கூட அவற்றால் காற்றை எதிர்த்து பறக்க முடியாது. அதனால், காற்றில்லாத அமைதியான நேரத்தையே, அவை பறக்க தேர்ந்தெடுக்கின்றன.
புற்றில் இருந்து வெளிவருகிற ஈசல்களில் சுமார் 80 சதவீதம்வரை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகி விடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணை துளைத்துக்கொண்டு உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துதான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்.
இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கரையான் காலனியை உருவாக்குகின்றன. அப்படியானால், ஈசலின் உண்மையான ஆயுள்காலம் தான் என்ன. கரையான்களில் 4 உறுப்பினர் வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம் உண்டு. இதன்படி, ஈசலின் ஆயுள்காலம் 12 முதல் 20 ஆண்டுகள். நான்கு வகைகளில் வேலைக்கார கரையான்கள்தான் குறைந்த ஆயுள்காலம் கொண்டவை. அவை 4 முதல் 5 ஆண்டுகள்வரை வாழ்கின்றன. இனிமேல் ஈசல் ஒரே நாளில் இறந்து போகும் என்று யாராவது சொன்னால், அவர்களிடம் இந்த உண்மையைச் சொல்லுங்கள்.
Related Tags :
Next Story