போட்டித் தேர்வுக்கு கைகொடுக்கும் ஆங்கில அறிவு
இன்று இந்திய குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தாய்மொழியில் எழுத முடியும். இருந்தாலும் வங்கியின் வாயில் காவலர் முதல், உதவியாளர், உயர் அதிகாரி பணி வரை அனைத்து பணிகளுக்கும் மண்டல மொழியறிவுடன், பிறமொழி அறிவும் சோதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆங்கில அறிவு அவசியமாக கருதப்படுகிறது.
எனவே போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதிகளும், அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு வினாக்களும் கேட்கப்படுகின்றன. வங்கிப் போட்டித் தேர்வில் ஆங்கில அறிவை சோதிக்கும் தனித்தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.
இயல்பாக பள்ளிப் படிப்பைத் தாண்டினாலும் ஆங்கில அறிவு அவசியம். அதுதான் பட்டப்படிப்பு படிக்கவும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளவும் கைகொடுக்கும். படிப்பு முடிந்துவிட்டால் வேலைக்கும், வேலை தவிர்த்து சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தாலும், பெரிய அளவில் வியாபாரம் செய்ய நினைத்தாலும் ஆங்கில மொழி அறிவின் தேவையை உணர முடியும்.
ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருப்பதும், இன்றைய இணையதள பயன்பாட்டால் உலகம் மிகமிக சுருங்கிவிட்டதாலும், அங்கும் ஆங்கிலம் அடிப்படையாக இருப்பதாலும் இந்த மொழி தெரிந்திருப்பது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் உதவும்..
போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை பல விதங்களில் சோதித்து அறிகிறார்கள். குறிப்பிட்ட ஆங்கில உரைநடையை கொடுத்துவிட்டு அதிலிருந்து கேள்வி கேட்பது, ஒரு வாக்கியத்தில் இடைவெளியை நிரப்பும் சரியான சொல்லை தேர்வு செய்வது, இணைப்புச் சொல், தொடர்புச் சொல், ஒரே பொருள் தரும் சொல், எதிர்பொருள் தரும் சொற்களை அறிவது என ஆங்கில இலக்கண அறிவை துல்லியமாக சோதிக்கும்படியான கேள்விகளை கேட்டிருப்பார்கள்.
இந்த கேள்விகளுக்கு குறித்த வரைமுறையோ, பாடப்பகுதியோ கிடையாது. தேர்ந்த இலக்கண அறிவும், சிறந்த மொழி அறிவும்தான் இதில் முழு மதிப்பெண் பெற உதவும். கணித வினாக்கள், பொது அறிவு வினாக்கள் போல மாதிரி பயிற்சி செய்து மொழியறிவு வினாவுக்கு பயிற்சி பெற முடியாது. ஆனால் இலக்கண விதிகளை மனதில் ஏற்றிக் கொண்டால், அதிகம் பயிற்சி செய்யாவிட்டாலும் சரியான பதில்களை தேர்வு செய்துவிட முடியும். இருந்தாலும் பொருளறிந்து பதில் அளிக்க வேண்டிய வினாக்களுக்கு, தொடர்ந்த ஆங்கில வாசிப்புத் திறனால், நிறைய சொற்களுக்கு பொருள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பதில் அளிக்க முடியும்.
எழுத்துத் தேர்வில் மட்டுமல்லாது நேர்காணலின்போதும் ஆங்கில உரையாடலே மையமாக இருக்கும். தாய்மொழி நேர்காணலை எல்லா இடத்திலும் எதிர்பார்க்க முடியாது. வேலைக்கான நேர்காணலில் எவ்வளவோ திறமை பெற்ற இளைஞர்கள், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் தடுமாறி தோல்வி அடைந்து திரும்பியிருக்கிறார்கள்.
நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது. அதை கற்றுக்கொள்ள சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை...
முதலில் ஆங்கிலம் எனக்குப் புரிவதில்லை. பல முறை படிக்க முயன்றும் முடியவில்லை. எவ்வளவு படித்தாலும் சிறிது காலத்தில் மறந்துவிடுகிறது அல்லது குழப்பம் வருகிறது. என்னால் படிக்க முடியாது என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள். “நான் ஆங்கிலத்தை கற்றே தீர வேண்டும். அது என்னால் முடியும்” என்ற நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குங்கள்.
தினமும் குறிப்பிட்ட மணி நேரங்களை ஆங்கிலம் படிக்க ஒதுக்குவதை வாடிக்கையாக்குங்கள். அதற்காக ஆங்கில தினசரிகள், வார இதழ்கள், கதைகளை வாசிப்பதை வழக்கமாக்குங்கள். புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் படியுங்கள். அதே பொருள் தரும் வேறு சொற்களை ஆங்கிலத்திலேயே அறிய முற்படுங்கள்.
தினசரி வாசிப்பு பயிற்சியுடன், மேற்படி கூடுதலான ஆங்கிலப் பயிற்சியும் அவசியம். நீங்கள் வாசித்த செய்தி அல்லது கதையை நீங்களே உங்கள் சொந்த நடையில், நீங்கள் அறிந்த சொற்களைக் கொண்டு எழுதிப் பாருங்கள். சொல் தடுமாற்றங்களைத் தவிர்க்க அதிகமான சொற்களை அறிய முயலுங்கள். இன்றைய இணையம் உங்கள் தேடலை எளிமையாக்கும். தெரியாத வார்த்தைகளுக்கும், புதிய வார்த்தைகளுக்கும் உடனே அர்த்தம் அறிவது இப்போது சுலபம்தான்.
வார்த்தைகள் அதிகம் பழகப்பழக, பேசுவது சுலபமாகிவிடும். பேசிப் பழக பயம் கொள்ளாதீர்கள். தவறாகப் பேசிவிடுவோமோ? என்று எண்ண வேண்டாம், தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் தயங்கி நின்றால் தொடங்காமலே தோல்விதான் மிஞ்சும். தவறாக பேசினால் மற்றவர்கள் ஏளனமாக நினைப்பார்களோ என்று நினைத்தால் முதலில் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பேசிப் பழகுங்கள், தவறுகளை சுட்டிக்காட்டச் சொல்லி திருத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேச முயற்சி செய்யுங்கள். விரைவில் யார் முன்னிலையிலும் ஆங்கிலம் பேச வந்துவிடும்.
உச்சரிப்பு முறைகள் சரியாக அமைய, ஆங்கில டி.வி. சானல்களை பார்க்கலாம். செய்திகளை கேட்கலாம். ஆங்கில சினிமாக்களையும் ரசிக்கலாம். மொழி பெயர்ப்புடன் வெளிவரும் சினிமாக்கள் ஏராளமான வார்த்தைகளை கற்றுக் கொள்ள துணை செய்யும்.
ஆங்கில மொழியறிவு மிக்க ஒருவரை பயிற்சியாளராகவோ, உதவியாளராகவோ நியமித்துக் கொள்வது சிறந்தது. ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப் பழகுவதும் நல்ல பலன் தரும். பேசிப்பழக இலக்கணம் தடையாக இருப்பதில்லை. ஆனால் இலக்கணம் தெரிந்தால் பிழையின்றி பேசலாம். எழுதவும் செய்யலாம்.
தினசரி பயிற்சியும், தொடர் முயற்சியும் உங்கள் ஆங்கில மொழியறிவை துரிதப்படுத்தும். தீவிர முயற்சி எடுத்துக் கொண்டால் சில மாதங்களில் இந்த முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிடலாம். தயக்கத்தை விட்டொழித்து பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டால் செந் தமிழ் மட்டுமல்ல எம்மொழியும் நாப்பழக்கத்தில் வந்துவிடும். வெற்றியைத் தந்துவிடும்.
Related Tags :
Next Story