தினம் ஒரு தகவல் : உயிரினப் பூங்காவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
உயிரின பூங்கா எனப்படும் மிருகக்காட்சி சாலையில் உள்ள பல விலங்குகள் அபூர்வமானவை.
காடுகளில் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களும், இந்தியாவில் இயற்கையாக வாழாத வெளிநாட்டு விலங்குகளும் அங்கே இருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். மிருகக் காட்சி சாலைகளில் உள்ள உயிரினங்களின் அடைப்பிடங்கள் வெறுமனே கூண்டுகளாக அல்லாமல், தாவரங்கள், பாறைகள் சேர்க்கப்பட்டு இயற்கையாக இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளன.
எல்லா விலங்குகளுமே பெரிதாக இருக்காது. சிறிய உயிரினங்களும்கூட சுவாரசியமானவை தான். உயிரினங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் கருத்துக் கூடத்தில் காட்டப்படும் விளக்க நிகழ்ச்சிகள், ஆவணப் படங்கள், செய்முறை விளக்கங்களையும் பார்க்க முயற்சிக்கலாம். பராமரிப்பாளர்களுடன் பேசினால் நிறைய தெரிந்துகொள்ளலாம். மிருகக் காட்சி சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி பலகைகளில் உள்ள வழிகாட்டுதல்களின்படி நடந்துகொள்வோம்.
எந்த உணவுப் பொருட்களையும் கொடுக்காமல் இருப்போம். ஒவ்வொரு உயிரினத்துக்கும் வித்தியாசமான உணவு தேவை. அது காட்டில் கிடைப்பது போலவே தரப்படும். அதற்குப் பதிலாக நாம் சாப்பிடும் உணவையோ, இலைகளையோ தருவதால் உடல் கோளாறு, நோய்த்தொற்று ஏற்பட்டு இறக்கவும் நேரிடலாம். அதற்கு பதிலாக பராமரிப்பாளர் உணவு கொடுக்கும்போது நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் கவனிக்கலாம்.
எக்காரணம் கொண்டும் உயிரினங்களுக்கு தொல்லை தராமல் இருப்போம். கத்துவது, இரைச்சல் இடுவது, கைதட்டி சொடக்கு போட்டுக் கூப்பிடுவது, பழிப்பு காட்டுவது, பொருட்களை தூக்கி எறிவது, குச்சிகளை வைத்துக் குத்துவது போன்ற நடவடிக்கைகள் உயிரினங்களை தொந்தரவு செய்து, எரிச்சல்படுத்தும்.
அமைதியான சுற்றுச்சூழலையே உயிரினங்கள் விரும்பும். காடுகள் அமைதியாகவே இருக்கும் என்பதை கவனிக்க வேண்டும். உயிரினங்கள் கூச்சச் சுபாவம் கொண்டவை, உணர்ச்சிகரமானவை. ஒவ்வொன்றின் வாழ்க்கை நடைமுறையும் வித்தியாசமானது. ஓர் உயிரினம் பகலில் தூங்கி, இரவில் நடமாடுவதாக இருக்கலாம். சில அடைப்பிடத்துக்குள் அடைந்து கொண்டும் இருக்கலாம். அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம்.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் இருப்போம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கும் உயிரினம் இறக்கக்கூடும். அதே போல புகைபிடிப்பதும், எச்சில் துப்புவதும் கூட தடை செய்யப்பட்டுள்ளன. இங்கே, குறிப்பிட்ட செயல்கள் அனைத்தும் மிருகக் காட்சி சாலை உயிரினங்களை பாதிக்கக்கூடும். அவற்றைச் செய்யாமல் இருப்பதுதானே நமக்கு அழகு!
Related Tags :
Next Story