புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள்


புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள்
x
தினத்தந்தி 5 Jan 2019 3:44 PM IST (Updated: 5 Jan 2019 3:44 PM IST)
t-max-icont-min-icon

இந்த உலகில் இன்னமும் மனிதர்களால் அறியப்படாத தாவரங்கள், விலங்கினங்கள் இருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 2 ஆயிரம் புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ராயல் தாவரவியல் தோட்டத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 100 புதிய தாவரங்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அவற்றில், சிறப்புப் பண்புகளைக் கொண்ட 10 தாவரங்களின் அறிமுகத்தை இங்கு காணலாம்...

பொலிவியாவின் மலைப்பகுதியில் மட்டும் காணப்படும் ஒருவகை இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன் நாட்டின் நீர்வீழ்ச்சி ஒன்றில், பாறையைப் பற்றிக்கொண்டிருந்த வித்தியாசமான தாவரத்தை ராயல் தாவரவியல் தோட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் அயா லேப்பி கண்டுபிடித்தார். அதனால் இதற்கு லெபீயா கிராண்டிபுளோரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சுரங்கங்கள் மற்றும் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இந்தத் தாவரம், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் ஏற்கனவே 150 வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்தோனேசியாவில் உள்ள வடக்கு கடலோரத் தீவான பயாக்கில் நெபந்தஸ் பயாக் என்னும் புதிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தாவரம், அத்தீவுக்கு வரும் சுற்றுலாக் கப்பல்களின் செயல்பாட்டினால் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காபி தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த புதிய தாவரமான கிண்டியா கங்கனை மேற்கு ஆப்பிரிக்காவில் படிவுப்பாறை ஒன்றில் ராயல் தாவரவியல் தோட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தத் தாவரத்தை ஆய்வு செய்து பார்த்ததில் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய மூலக்கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லாவோஸ் தலைநகர் வியன்டியனில், காடுகளில் இருந்து சட்டவிரோதமாகத் திருடப்பட்டு விற்கப்பட்ட தாவரத்தை ஆய்வு செய்தபோது அது முன்னெப்போதும் கண்டறியப்படாத ஒருவகை ஆர்க்கிட் தாவரம் என்பதைக் கண்டறிந்தனர்.

அழியும் நிலையில் உள்ள இந்தப் புதிய தாவரத்துக்கு பாபியோபிடியம் பாபிலியோலாடிகஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராயல் தாவரவியல் தோட்டத்துக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, தென்ஆப்பிரிக்காவின் ஆறு இடங்களில் மட்டுமே காணப்படும் ஒரு புதிய வகை சேனைக்கிழங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதற்கு டயாஸ்கோரியா ஹர்ட்டரி என்று பெயரிட்டுள்ளனர்.

ஆரஞ்சு நிறத்தில் வித்தியாசமான வடிவத்தில் காணப்படும் புதிய வகை பூ ஒன்று வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஓரியோசரீஸ் டிரிப்ரசேட்டியாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொதுவாக செடிகள், பூக்களே புதிதாக கண்டுபிடிக்கப்படும் நிலையில், அரிதான நிகழ்வாக மிகப் பெரிய புதிய வகை மரம் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இலையுதிர்க் காலத்தின்போது இளஞ்சிவப்பு நிறப் பூக்களை உதிர்க்கும் இந்த மரத்துக்கு டால்போட்டில்லா சீக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியக் கூட்டுப்பொருளாகப் பயன்படும் தாவர வகையைச் சேர்ந்த புதிய தாவரத்துக்கு பிமென்தா பெரிசில்லியே என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேமரூன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வெப்ரிஸ் பாலி என்ற மரம், வாழிடங்கள் அழிக்கப்படுதலின் காரணமாக அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Next Story