திரைத்தேன் கவிஞர் சுரதா...!


திரைத்தேன் கவிஞர் சுரதா...!
x
தினத்தந்தி 23 Nov 2018 7:33 AM GMT (Updated: 23 Nov 2018 7:33 AM GMT)

இன்று (நவம்பர்23-ந்தேதி) உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் வந்த முதுபெரும் கவிஞர் சுரதா. தஞ்சை மாவட்டம் பழையனூரில் 23-11-1921 அன்று பிறந்தார். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார். இவருடைய இயற்பெயர் ராஜகோபாலன். பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் அவருடைய இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயருடன் தாசன் என்ற பெயரை இணைத்து சுப்புரத்தினதாசன் என்பதன் சுருக்கமே சுரதா. 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட திரை இசைப்பாடல்கள் ஒவ்வொன்றும் தேன்மழை! கவிஞர் சுரதாவின் எழுத்துகளைப் படித்தார் பாகவதர். தமது ‘அமரகவி‘ படத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பு தந்தார். 1952-ல் பாடிய அப்பாடல் இப்படித் தொடங்குகிறது; “எல்லாம் இன்பமே என்றுமே எல்லாம் இன்பமே நீலவானம் தனிலே நீந்தும் அன்னநடை தனிலே நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே” (எல்லாம் இன்பமே) வடசொல் கலவாத நல்ல தமிழ் இப்பாடலில் பயின்று வருவதை உய்த்துணரலாம். கவிஞர் சுரதாவின் முதற்பாடல் எம்.ஜி.ஆர் நடித்த ‘என் தங்கை’ படத்துக்காக எழுதப்பெற்ற “ஆடும் ஊஞ்சலைப் போல: அலை ஆடுதே..!” எனும் பாடலாகும். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான போது அவரது திருக்கரங்களால் முதன்முதலாகப்‘ பாவேந்தர் விருது’ பெற்றார் கவிஞர் சுரதா.

எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரும் திருப்பு முனையை நல்கிய படம் ‘நாடோடிமன்னன்.’ இப்படத்தில் இருபாடல்கள் கவிஞருடையது.“வருக வருக வேந்தே தலையான கலைஞானம் தனைப்போற்றும் தலைவா நீ (வருக) வீரம் உறங்காத தென்னாடு தனையாளுவேந்தே நீ வருகவே பார் புகழும் உதய சூரியனே பசியின்றிப் புவிகாக்கும் பார்த்திபனே (வருக) இப்படம் 1958-ல் வெளிவந்தது. ஜிக்கி குழுவினர் பாடியதாகும். மற்றொரு பாடல்: புகழ்பெற்ற பாடல்: டி.எம்.சவுந்திரராசன் ஜிக்கி பாடியது.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்பக்காவியக் கலையே ஓவியமே! செழுங்கனிபோல சுவைதரும் மாங்கனி என் பாடிடும் பூங்குயிலே இன்பக் காவியக்கலையே ஓவியமே (கண்ணில்) இப்பாடலின் பிற்பகுதியில்,“சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே.. எனவரும்.

இந்த உவமை புதியதாக உள்ளதே: இதுவரை யாரும் கேள்விப் படவில்லையே என எம்.ஜி.ஆர் வியந்துள்ளார். அப்போது, இந்த உவமை ‘குறுந்தொகை’ எனும் இலக்கியத்தில் வருகிறது. நான் எடுத்துக் கையாண்டுள்ளேன்’ என்றார் சுரதா. சுரதாவின் இந்த அறிவு நேர்மை எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படம் எம்.ஏ. வேணு தயாரித்தது. அப்படத்தில்ஒவ்வொரு பாடலை ஒவ்வொரு கவிஞர் எழுதினர்.

சுரதாவின் பாடல் அவரைப்புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அப்பாடல் இதுதான்:“அமுதும் தேனும் எதற்கு?நீஅருகினில் இருக்கையிலே எனக்கு வான் (அமுதும்)நிலவின் நிழலோ உன்வதனம் புதுநிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்மலையில் பிறவா மாமணியே நான்கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)”

1958-ல் வெளிவந்த இப்பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராசன். இவரதுவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் இது. சீர்காழி கோவிந்தராசன் பாடிப் புகழ்பெற்ற மற்றுமொரு சுரதாவின் பாடல்; “ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா..தொகுப்பார் சிலரதைச் சுவைப்ப தில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைப்பதில்லை (ஆடி)” மேற்கூறிய இருபாடல்களையும் தமது இறுதி ஊர்வலத்தில் ஒலிபரப்பவேண்டும் எனக் கவிஞர் சுரதா உயில் எழுதி வைத்திருந்தார். அதன்படியே ஒலிபரப்பப்பட்டது. அந்நாளில் உச்சத்திலிருந்த உடுமலை நாராயணகவியிடம்,“அமுதும்தேனும் எதற்கு?“ என்ற பாடல் போலவே பாடல் வேண்டும் எனப் பட அதிபர்கள்வேண்டினர். அவர்களிடம் சுரதாவையே நேரில் அழைத்துச் சென்று வாய்ப்புகள்பெற்றுத் தந்தார் உடுமலையார்!

மற்றுமொரு சுவையான தகவல்! ‘நாணல்‘ படத்தில் வரும் சுரதா பாடல்‘விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்‘ எனும் பாடல். இப்பாடலில், “பத்துக்குமேலாடை பதினொன்றே ஆகும்: பக்கத்தில் நீ இருந்தால் பலகதை உருவாகும்“.என்றொரு தொடர் வரும். இத்தொடர் ‘பாமரருக்குப் புரியாது: மாற்றிவிடுங்கள்!‘என்றார் பட இயக்குநர் கே.பாலச்சந்தர். சுரதா தயங்கினார். அவ்வேளையில்,அப்படத்தில் நடிக்கும் நடிகர் நாகேஷ் அங்கு வந்தார்.நிலவும் சூழலை அறிந்தார். சுரதாவைத் தனியாக அழைத்து, ‘அண்ணே,இந்தப் பாடலில் இந்த வரிகள் தாம் அருமையானவை. யார் சொன்னாலும்மாற்றாதீர்கள்..!‘ என்று சொல்லிவிட்டுச் சென்றார். சுரதா பிடிவாதம் காட்டினார்.வரிகள் தப்பித்தன. காலத்தை வென்றன.

“நெருங்கி நெருங்கிப் பழகும் போதுநெஞ்சம் ஒன்றாகும்..“ எனும்நேற்று இன்று நாளை‘ படப்பாடலும், கவிஞர் சுரதாவின் சிந்தனை ஊற்றுக்களே..! இப்படி மிகக் குறைந்த பாடல்களே திரையில் பாடி மிகப்பெரும் புகழைப் பெற்ற ஒரே கவிஞர் சுரதா. இவருடைய தேன்மழை என்ற கவிதை நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது என்பதில் நமக்குபெருமிதமே!

- கவிஞர் வேலூர் ம. நாராயணன்

Next Story