ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரிக்கு தங்க பதக்கம் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 3வது நாள் நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 240.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்து ஜப்பானின் டோமோயுகி மட்சுடா 2வது இடம் பிடித்துள்ளார்.
219.3 புள்ளிகள் பெற்ற அபிஷேக் வர்மாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. அவர் வெண்கல பதக்கம் வென்றார்.
போட்டியின் 4வது வெளியேற்றுதல் சுற்றின் முடிவில் சவுரப் 180 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அபிஷேக் 178.9 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருந்தனர்.
இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தினை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவும், 2வது தங்க பதக்கத்தினை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் பெற்று தந்தனர்.
இந்த நிலையில், இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றதனால் இந்தியாவுக்கு 3வது தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
பதக்கப்பட்டியலில் சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் 8 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story