இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமுடன் தொடங்கின
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் கோலாகல நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்கின.
ஜகார்த்தா,
டெல்லியில் கடந்த 1951ம் ஆண்டு முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியா ஆசிய விளையாட்டை நடத்துவது இது 2வது முறையாகும். ஏற்கனவே 1962ம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.
ஆசிய விளையாட்டு இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 பந்தயங்களில் களம் காணுகிறார்கள். கடந்த முறை இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை வசப்படுத்தியது. இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கங்கள் வெல்லப்படும் வகையில் வீரர்கள் தயாராகி உள்ளனர்.
முதல் நாளான இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. நாளை முதல் போட்டிகள் ஆரம்பிக்கும்.
அதன்படி கோலாகலமான தொடக்க விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று மாலை தொடங்கியது.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர். இந்திய குழுவுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.
இந்த விழாவில், கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றன. தொடக்க விழாவில் 4 ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை பரவசப்படுத்தினர்.
Related Tags :
Next Story