ஷீரடி சாய்பாபா கோவிலில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்ட காத்திருப்பு அறைகள்- மோடி திறந்து வைத்தார்
ஷீரடி சாய்பாபா கோவிலில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் காத்திருப்பு அறைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மும்பை,
ஷீரடி சாய்பாபா கோவிலில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் காத்திருப்பு அறைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பக்தர்கள் காத்திருப்பு அறைகள்
அகமத் நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி நேற்று மதியம் வருகை தந்தார். அவர் கோவிலில் சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
இதையடுத்து கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் காத்திருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். இந்த பிரமாண்ட வளாகம் ஒரே நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வகையில் பல அறைகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த வளாகம் முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டதாகும்.
இந்த வளாக கட்டுமான பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இருந்த நிலையில், தற்போது அவரே திறந்து வைத்துள்ளார்.
ரூ.75 ஆயிரம் கோடி திட்டங்கள்
மேலும் பிரதமர் மோடி ஷீரடி நகரில் நடந்த நிகழ்ச்சியில் நிறைவுற்ற பல திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரெயில், கியாஸ், சாலை, சுகாதாரம், குடிநீர் போன்ற இந்த திட்டங்களின் மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடியாகும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், "சிலர் விவசாயிகள் பெயரில் அரசியல் செய்கின்றனர். மராட்டியத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் (சரத்பவார்) மத்திய வேளாண் மந்திரியாக பதவி வகித்தார். அவரை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன். ஆனால் அவர் பதவி காலத்தில் விவசாயிகளுக்காக என்ன செய்தார்?. அவர் பதவி வகித்தபோது விவசாயிகள் இடைதரகர்களின் கருணைக்காக காத்திருந்தனர். ஆனால் எங்களது அரசு விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்துகிறது" என்றார்.
பின்னர் பிரதமர் மோடி அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள நில்வான்டே அணையில் நீர் பூஜை செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மராட்டிய கவர்னர் ரமேஷ் பயஸ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.