அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை - அஜித்பவார் பேச்சு
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என அஜித்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என அஜித்பவார் கூறியுள்ளார்.
கட்சி கூட்டம்
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் கடந்த மாதம் கட்சி தலைமைக்கு எதிராக தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தார். அவா் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதே நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையிலான அணியினர் எதிர்க்கட்சியான மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உள்ளனர். இந்தநிலையில் அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கூட்டம் பீட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை
கூட்டத்தில் அவர் பேசியதாவது:- நாடு முழுவதும் பிரதமர் மோடியின் செல்வாக்கை காண முடிகிறது. அந்த செல்வாக்கு மதசார்பற்ற சிந்தனையை கொண்ட மராட்டியத்துக்கு பயன் அளிக்கும் என்று நம்புகிறேன். அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை. இது அரசியல். மோடியின் செல்வாக்கு மராட்டியத்துக்கு உதவும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. எனவே நாங்கள் மாநிலத்தின் நலன் கருதி பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தோம். சுயநலத்துக்காக இந்த அரசில் இணையவில்லை. சில பேச்சுகளில் எந்த உண்மையும் கிடையாது. நான் வேலை செய்ய விரும்புபவன். எனது வேலை தான் பேச வேண்டும் என்று நினைப்பவன். யாரோ என்னை பற்றி கூறுவதற்கு எல்லாம் நான் பதில்கூற மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.