கணவரின் உடலுடன் 4 நாட்களாக இருந்த மனைவி
நவிமும்பையில் கணவரின் உடலுடன் மனைவி 4 நாட்களாக வீட்டில் இருந்த சம்பவம் நடந்து உள்ளது.
மும்பை,
நவிமும்பையில் கணவரின் உடலுடன் மனைவி 4 நாட்களாக வீட்டில் இருந்த சம்பவம் நடந்து உள்ளது.
அழுகிய உடலுடன் மனைவி
நவிமும்பை பன்வெல் பகுதியில் பியானர் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இங்கு பாபா அணுஆராய்ச்சி கழக ஓய்வு பெற்ற எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் முஸ்தாக் நாயக் (வயது 71) வசித்து வந்தார். இவரது மனைவி நஸ்ரின் (64). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக முஸ்தாக் நாயக்கின் வீடு திறக்கப்படவில்லை. இதையடுத்து குடியிருப்பின் முன்னாள் சேர்மன் தாக்குர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் முஸ்தாக் நாயக் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உயிரிழந்த கணவர் உடலுடன் அவரது மனைவி 4 நாட்களாக இருந்து உள்ளார்.
தனித்து வாழ்ந்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்து சென்று போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. முஸ்தாக் நாயக்கும், மனைவி நஸ்ரினும் மனிதர்களிடம் இருந்து விலகி தனித்து வாழ்ந்து உள்ளனர். இதுகுறித்து குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், "முஸ்தாக் நாயக் தம்பதிக்கு குழந்தை இல்லை.
மேலும் அவர்கள் உறவினர்கள், குடும்பத்தினர் என யாருடனும் தொடர்பில் இல்லை. கட்டிடத்தில் உள்ளவர்களிடம் கூட அவர்கள் பேசுவதில்லை. முன்னாள் சேர்மன் தாக்குர் மட்டும் அவர்கள் வீட்டுக்கு செல்வார். தற்போது மின் கட்டணம் செலுத்தாததால் அவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. ஜன்னல், கதவு என எல்லாவற்றையும் பூட்டி விட்டனர். எனவே வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வரவில்லை " என்றார்.
நவிமும்பையில் உயிரிழந்த கணவர் உடலுடன் 4 நாட்களாக மனைவி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.