சாலை வசதி இல்லாததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் கர்ப்பிணியை தூக்கி சென்ற கிராம மக்கள்
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கிராம மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் தூக்கி சென்ற அவல சம்பவம் பால்கர் அருகே அரங்கேறி உள்ளது.
மும்பை,
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கிராம மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் தூக்கி சென்ற அவல சம்பவம் பால்கர் அருகே அரங்கேறி உள்ளது.
டோலி கட்டி தூக்கி சென்றனர்
பால்கர் மாவட்டம் மொகடா தாலுகா சென்டேபாடா கிராமத்தை சேர்ந்தவர் சுரேகா. 7 மாத கர்ப்பிணி. சுரேகாவுக்கு சம்பவத்தன்று காலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்ணின் வீட்டில் இருந்து நந்காவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல சாலைவசதி இல்லை. எனவே கிராமத்தினர் டோலி கட்டி கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். இந்தநிலையில் சென்பாடா கிராமத்துக்கும், நந்காவுக்கும் இடையே உள்ள சிவர் துத்வித் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வெள்ளத்தில் தூக்கி சென்றனர்
கிராமத்தினருக்கு கர்ப்பிணியை எப்படி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது என தெரியவில்லை. எனினும் சரியான நேரத்துக்கு கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாவிட்டால் தாய், சேய் 2 பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இதையடுத்து கிராமத்தினர் கர்ப்பிணியை ஒரு மரப்பெட்டியில் வைத்தனர். பின்னர் தங்களது உயிரை பணயம் வைத்து மார்பளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஆற்றில் மரப்பெட்டியில் கர்ப்பிணியை வைத்து ஆற்றை கடந்து சென்றனர். கர்ப்பிணி பெண்ணை தூக்கி கொண்டு கிராமத்தினர் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றினை கடந்து செல்லும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.