தாயை குத்தி கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மகன்- முல்லுண்டில் சம்பவம்


தாயை குத்தி கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மகன்- முல்லுண்டில் சம்பவம்
x

சொத்து தகராறில் பெற்ற தாயை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மகனை போலீசார் மீட்டனர்.

மும்பை,

சொத்து தகராறில் பெற்ற தாயை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மகனை போலீசார் மீட்டனர்.

சொத்து தகராறு

மும்பை முல்லுண்ட் வர்தமான் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(வயது50). இவரது மனைவி சாயா(46), இவர்களது மகன் ஜெய்தீப்(21). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வேலை தேடிவந்தார். மூதாதையர் சொத்து தொடர்பாக அவரது மாமா வீட்டினருக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சொத்து கிடைக்காததால் ஜெய்தீப் மனஉளைச்சல் அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த ஜெய்தீப் சம்பத்தன்று தற்கொலைக்கு முயன்றார். இதனை அவரது தாய் சாயா கண்டு தடுத்து நிறுத்தினார். அப்போது தாய், மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெய்தீப் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தாய் என்றும் பாராமல் சாயாவை சரமாரியாக குத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தாய் கொலை

தகவல் அறிந்த மகேஷ் குமார் அங்கு சென்று சாயாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சாயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அறிந்த முல்லுண்ட் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஜெய்தீப் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அதில், ஜெய்தீப் தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதி இருந்தார். இதனால் போலீசார் தலைமறைவான வாலிபர் ஜெய்தீப்பை தேடிவந்தனர்.

தற்கொலைக்கு முயன்ற மகன்

இந்தநிலையில் குர்லா ரெயில்வே போலீசாரிடம் இருந்து வாலிபர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்து இருப்பதாகவும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக முல்லுண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, தாயை குத்திக்கொன்றுவிட்டு தலைமறைவான ஜெய்தீப் தான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், ஓரிரு நாட்களில் சிகிச்சைக்கு பின்னர், அவரை கைது செய்து விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story