கொள்ளை முயற்சியின் போது ஓடும் ரெயிலில் இருந்து பெண் பயணியை தள்ளிவிட்ட கொடூரம்; காவலாளி கைது
பெங்களூருவில் இருந்து மும்பை வந்த ரெயிலில் பெண் பயணி மானபங்கம் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டார்.
மும்பை,
பெங்களூருவில் இருந்து மும்பை வந்த ரெயிலில் பெண் பயணி மானபங்கம் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டார்.
பெண்கள் பெட்டியில் ஏறிய ஆசாமி
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையே உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் கடந்த 6-ந் தேதி இரவு 8.30 மணி அளவில் மும்பை தாதர் ரெயில் நிலையம் வந்து நின்றபோது முன்பதிவு இல்லாத மகளிர் பெட்டியில் ஆசாமி ஒருவர் ஏறினார். அந்த பெட்டியில் ஒரு சில பெண்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணிகள் ஆசாமியை கீழே இறங்கும்படி எச்சரித்தனர். ஆனால் அந்த ஆசாமி 29 வயது பெண் பயணி ஒருவரை நெருங்கி மானபங்கம் செய்தார். திடீரென அவரிடம் இருந்த பணப்பையை பறித்தார். மேலும் எதிர்பாராதவிதமாக அப்பெண் பயணியை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக பெண் பயணி பிளாட்பாரத்தில் விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
காவலாளி கைது
இதற்கிடையே மறுநாளான 7-ந் தேதி தாதர் ரெயில்வே போலீசில் பாதிக்கப்பட்ட பெண் பயணி புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் பெண் பயணி புகார் அளிப்பதற்கு முன்னதாகவே சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆசாமியை போலீசார் பிடித்தனர். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே நடமாடிய அந்த ஆசாமியை கைது செய்தனர். அந்த ஆசாமி பெயர் மனோஜ் சவுத்ரி எனவும், புனே ஹடப்சரில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக காவலாளிக்கு ஊதியம் கிடைக்காததால் மும்பைக்கு வேலை தேடி வந்தபோது இந்த விஷம செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மும்பையில் சமீப நாட்களில் ஓடும் ரெயிலில் பெண் பயணி தாக்கப்பட்ட 3-வது சம்பவம் இதுவாகும். இந்த தொடர் சம்பவங்கள் பெண் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.