எதிர்க்கட்சி கூட்டணி பலத்தால் பதற்றத்தில் பா.ஜனதா அரசு; மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் மத்திய அரசை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
மும்பை,
எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் மத்திய அரசை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
விசாரணை அமைப்புகள்
மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- இந்தியா கூட்டணியின் முந்தைய 2 கூட்டங்களும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக பிரதமர் மோடி நமது அன்பான நாட்டின் பெயரை பயங்கரவாத அமைப்புடனும், அடிமைத்தனத்தின் சின்னத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த கூட்டம் வெற்றி பெற்றுள்ளதால் தற்போதைய அரசின் பழிவாங்கும் அரசியலால் வரும் மாதங்களில் மேலும் பல தாக்குதல், அதிக சோதனைகள் மற்றும் கைதுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நமது கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு பா.ஜனதா அரசு நமது தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும்.
வகுப்புவாத விஷம்
140 கோடி இந்தியர்களும் துயரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எங்களை எதிர்நோக்கி உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரப்பிய வகுப்புவாத விஷம் இப்போது அப்பாவி ரெயில் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளது. கொடூரமான பலாத்கார வழக்கில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, கவுரவிக்கப்படும்போது, அது கொடூரமான குற்றங்களை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக மறுபுறம் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் கார்கில் ராணுவ வீரரின் மனைவிக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசின் அக்கறையின்மையால் தலித்துகள், பழங்குடியினர் மீது சிறுநீர் கழிக்க வைக்கப்படுகிறது. இந்த குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவ விடப்படுகின்றனர்.
பலம் நிரூபிப்பு
விசாரணை அமைப்புகள், நிறுவனங்களை பா.ஜனதா முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சி.பி.ஐ. இயக்குனர்கள், தேர்தல் ஆணையர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. 3 கூட்டங்கள் மூலமாக இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பலத்தை நிரூபித்துள்ளது. எங்களின் பலம் இந்த அரசை பதற்றமடைய செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.