தாராப்பூர் ரசாயன ஆலையில் வெடி சத்தத்துடன் பயங்கர தீ- 10 தொழிலாளிகள் உயிர் தப்பினர்


தாராப்பூர் ரசாயன ஆலையில் வெடி சத்தத்துடன் பயங்கர தீ- 10 தொழிலாளிகள் உயிர் தப்பினர்
x

தாராப்பூர் ரசாயன ஆலையில் காதை பிளக்கும் வெடி சத்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாவட்ட செய்திகள்

வசாய்,

தாராப்பூர் ரசாயன ஆலையில் காதை பிளக்கும் வெடி சத்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீ விபத்து

பால்கர் மாவட்டம் தாராப்பூர் எம்.ஐ.டி.சி. வளாகத்தில் பிளாட் நம்பர் 55, 56, 57-ம் பகுதியில் பிரிமியர் இண்டர்மீடியட்ஸ் என்ற நிறுவனத்தில் இன்று அதிகாலை 12.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் பல தடவை டமார் டமார் வென சத்தம் கேட்டது. இந்த சத்தம் 10 கி.மீ. தொலைவு வரையில் கேட்டதால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்தனர்.

இதற்கிடையே ரசாயன ஆலை தீ பற்றி எரிந்தது. தீ விபத்து நடந்த இடத்தில் 10 தொழிலாளிகள் இருந்தனர். அவர்கள் சரியான சமயத்தில் வெளியே ஓடிவந்து காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போராடி தீ அணைப்பு

அங்கு பற்றிய தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடி காலை 6 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆலையில் இருந்த ரசாயனத்தில் பற்றிய தீ பரவி பேட்டரி சார்ஜிங் செயல்பாட்டின் போது அதிக வெப்பம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு தீ மற்ற இடங்களுக்கு பரவியது தெரியவந்தது. தீ விபத்தினால் ஆலையில் இருந்த பொருட்கள், எந்திரங்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்தின் போது கடும் துர்நாற்றத்துடன் கரும்புகை பரவியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.


Next Story