டேங்கர் லாரி கவிழ்ந்து கியாஸ் கசிந்ததால் பரபரப்பு
மும்பை-ஆமதபாத் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வசாய்,
மும்பை-ஆமதபாத் நெடுஞ்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லாரி கவிழ்ந்து விபத்து
பால்கர் மாவட்டம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை மெத்வான் பகுதியில் கியாஸ் டேங்கர் லாரி ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக சென்று சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கியாஸ் நிரப்பி இருந்த டேங்கர் தனியாக கழன்றது.
மேலும் டேங்கரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த காசா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பதற்றம்
அசாம்பாவிதம் ஏற்படாத வண்ணம் குஜராத் நோக்கி செல்லும் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் பதற்றம் அடைந்தனர். நல்ல வேளையாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.