விழாக் காலங்களில் பந்தல்கள் அமைத்து சாலையை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


விழாக் காலங்களில் பந்தல்கள் அமைத்து சாலையை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2023 1:30 AM IST (Updated: 3 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

விழாக்காலங்களில் பந்தல்கள் அமைத்து சாலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

விழாக்காலங்களில் பந்தல்கள் அமைத்து சாலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வைப்பு தொகை பறிமுதல்

விழாக்காலங்களில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பந்தல்களை அமைக்க பள்ளம் தோண்டுவதால் சாலைகள், நடைபாதைகள் சேதமாகின்றன. ஆனால் இதை விழா அமைப்பாளர்கள் சரிசெய்யாமல் விட்டு, விடுகின்றனர். இதனால் சாலைகள் கடுமையாக சேதமடைகின்றன. இதை தடுக்க மாநகராட்சி பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதை மீறுபவர்களின் வைப்பு தொகை பறிமுதல் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த பிரச்சினை ஓயவில்லை.

பொதுநலன் மனு

இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. இதில், "விழாக்காலங்களில் அமைக்கப்படும் பந்தல்களால் சாலைகள் மற்றும் நடைபாதைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கடந்த ஆண்டு மாநகராட்சியின் விதிமுறைகளை மீறிய பந்தல்கள் அமைத்த மண்டல்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மும்பை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நேற்று தலைமை நீதிபதி டி.கே உபாத்யாயா மற்றும் நீதிபதி ஆசிப் டாக்டர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:-

கொள்கை முடிவு

திருவிழா காலங்களில் அமைக்கப்படும் பந்தல்களால் சாலை, நடைபாதைகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது அனைவரும் அறிந்ததுதான். பந்தல்களால் ஏற்படும் சேதங்களை சரி செய்யாதவர்கள் மீதான நடவடிக்கைகளை மாநகராட்சி மேலும் தீவிரமாக்க வேண்டும். மாநகராட்சியின் நிபந்தனைகள் மீறப்படுவதாக கண்டறியப்பட்டால், அடுத்த ஆண்டு அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் நிபந்தனையை மாநகராட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனுவை பரிசீலித்து 6 வாரங்களுக்கு மும்பை மாநகராட்சி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்.


Next Story